ஆசிரியரைப் பிடிக்கவில்லை

மனமோர் விளைநிலம் உயர்ந்த

கனவுகளை விதையிடு என்றார்

கனியிருப்பக் காயெதற்கு? நீ என்றும்

இனிதே பேசிடு என்றார்

 

அல்லது செய்தல் தவிர்த்து எல்லோர்க்கும்

நல்லது செய்திடு என்றார்

கல்லாய் இருந்த என்னை சிலையாக்க

கற்றுக் கொடுத்தார் ஆசிரியர் இவ்வளவும்

 

ஆனாலும்

நான் எப்படி இருக்க வேண்டுமென நாள்தோறும் ஓதியவர்

நான் வாழும் உலகம் எப்படி இருக்கிறதென

உணர்த்தாமல் விட்டதனால் எனக்கு என் ஆசிரியரைச்

சற்று பிடிக்க வில்லைதான்

– வ.முனீஸ்வரன்

 

%d bloggers like this: