ஆசிரியர்களும் வி.ஐ.பியான குழந்தைகளும்

சுவிஸ் விமானத்தில் (Swiss Air) பயணம் செய்யும் குழந்தைகளை அதிமுக்கிய நபர்களாக நடத்துகின்றனர்.

விமானப் பயணத்திலேயே குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சுவிஸ் நாட்டினர், வாழ்க்கையின் இதர விஷயங்களில் அவர்களை எப்படி நடத்துவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த அளவுக்கு உலகில் வேறு எந்த நாட்டிலும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவர்கள் கௌரவமாக நடத்தப்படுவதாக தெரியவில்லை.

குறிப்பாக, நம் நாட்டில் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாமலிருப்பது மிகப்பெரிய ஓர் குறை.

முக்கியமாகக் கல்வி வழங்கும் விஷயத்தில் அவர்கள் மிக முக்கிய நபர்களாக (VIP) கருதப்பட வேண்டும். படிப்பில் பின்தங்கிக் காணப்படும் குழந்தைகளிடம் அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.

ஆசிரியப் பெருமக்கள் இவர்களிடம் அதிக அக்கறை காட்ட வேண்டும். அப்போதுதான் அவர்களின் கல்வி உயரும். மேலும், அவர்களிடம் தாழ்வு மனப்பான்மையும் தோன்றாது.

அனைத்திற்கும் மேலாக குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து, தேர்வுகளில் வெற்றி பெறச் செய்யும் நேரத்தில், அவர்களை தலைசிறந்த இந்தியக் குடிமகன்களாக உருவாக்க ஆசிரியர்கள் பாடுபடவேண்டும்.

குழந்தைகளை தொழிலாளர்களாக ஆக்குவதென்னவோ மோசமானதுதான். அதே சமயம், அவர்களது உழைப்பின் பங்கு நம் நாட்டிற்குப் பிற்காலத்தில் எவ்வளவு தேவைப்படுகிறது என்பதையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ஒவ்வொரு மாணவனும், கௌரவமான, அதிகம் அலட்டிக் கொள்ளாமல், எடுத்த எடுப்பிலேயே கைநிறைய சம்பளத்துடன் கூடிய வேலையைத்தான் எதிர்பார்க்கிறான் (White Collar Job). இந்நிலை மாற வேண்டியது அவசியம்.

‘கல்வி’ என்பது வெறும் அறிவியலோ, கணிதமோ, வரலாறோ அல்ல.

தாய் நாட்டை நேசிக்க வைத்தலும் இந்தியக் குடிமகனாக இருப்பதைப் பற்றி ஒரு மாணவனைப் பெருமைப்பட வைத்தலும் கல்வியே!

சுயநலத்தைத் தவிர்த்தல், சகிப்புத் தன்மை, நேர்மை, நாணயம், நல்ல பழக்கவழக்கங்கள், பெரியவர்களை மதித்து நடக்கும் தன்மை, ஆண்டவனின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்கச் செய்வது, மனிதநேயம் போன்றவைகளைக் கற்றலும் பின்பற்றுதலும் கல்வியில் ஒரு பங்காக அமைதல் அவசியம்.

நம் தேசத்தை கட்டிக் காப்பதில் ஆசிரியர்களின் பொறுப்பும் பங்கும் அதிகம்.

நம் நாட்டின் இன்றைய நிலை எப்படி உள்ளது என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து, நம் நாடு எதிர்காலத்தில் அனைத்து வளமும் பெற்று, எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்க, இன்றைய இளைஞர்கள் நாட்டின் வருங்காலத்தூண்கள், மன்னர்கள் என்பதை நினைவிற் கொண்டு குழந்தைகளை, மாணவர்களை உருவாக்க வேண்டும்.

இன்று ஒவ்வொரு ஆசிரியரும் தனக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள்:

நம் பொறுப்பில் மிகமுக்கிய நபராக ஒப்படைக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு முறையாக நாம் கல்வி கற்பிக்கிறோமா?

நல்ல குடிமகன்களை உருவாக்குகிறோமா?

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.