அவர்கள் ஆசிரியர்கள் அப்படித்தான்

ஆசிரியர்கள் அப்படித்தான்!

கோடைகால விடுமுறையில் எனது சொந்த ஊருக்கு சென்றிருந்தேன்.

காலை 9.00 மணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, 6 அடி உயர, சற்று பருமனான உருவத்தில் இரு காதுகளிலும் ஹெட்செட் மாட்டிக்கொண்டு ‘விறுவிறு’ என்று வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார் ஒருவர்.

சட்டென்று பார்த்து சென்று விட்ட பின்பு அவரை மீண்டும் திரும்பிப் பார்த்தேன். அதே வேகத்தில் சென்று கொண்டிருந்தார்.

‘நான் பதினோராம் வகுப்பு படிக்கும் போது எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர் அல்லவா அவர்?’ என்று யோசித்து, அவரை உறுதி செய்த பின்னர் அவரிடம் சென்று..

“சார் நீங்க ரவி சார் தானே!” என்று கேட்டேன்.

“ஆமா தம்பி! நீங்க யாரு?”ன்னு கேட்டார்.

“1996 ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு நான் படித்த போது எனக்கு நீங்களும் முனியாண்டி சாரும் வகுப்பெடுத்த ஞாபகம் இருக்கிறது சார்” என்று சொன்னேன்.

காலங்கள் கடந்ததால் அவரால் என்னை நினைவு வைக்க இயலவில்லை.

என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அவருக்கு ஞாபகம் வரவில்லை.

“ஆமாப்பா! ஒவ்வொரு வருஷமும் 50 – 60 மாணவர்கள் வெளியேறாங்க.. ஒவ்வொருத்தரும் நல்ல நல்ல வேலையில இருக்கிறாங்க. எனக்கும் வயதாகி விட்டதால் அடையாளம் சரியாக தெரியவில்லை தம்பி!” என்றவாறே, அப்போது நடந்த சில நிகழ்வுகளை 15 நிமிடங்கள் வரை பேசினோம்.

“சரி தம்பி! நீங்களும் கிளம்புங்க. நானும் போயிட்டு வரேன்னு” என்று ரவி சார் கூறியதும் இரண்டு பேரும் கிளம்பி விட்டோம்.

சட்டென்று இரு காதுகளிலும் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு அதே வேகத்தில் ‘விறுவிறு’ என்று சென்றுவிட்டார்..

அவர் சிறிது தூரம் சென்ற பின் வண்டியை நிறுத்தி அவரைப் பார்த்துக் கொண்டே யோசித்தேன்..

இது ஏன்? எப்படி?’ என்று யோசித்த போது, அவர்கள் ஆசிரியர்கள்; அவர்கள் அப்படித்தான் என்ற பதிலும் கிடைத்தது.

முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர், பொருளாதார துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 9600094408