ஆசிரியர் பணி – மகிழ்ச்சி – ‍ஆரோக்கியம் – அறிவு

ஆசிரியர் பணி என்பது என்ன‌?

மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், அறிவை கூர்மையாக வைத்துக் கொள்ளவும் கல்வி வழிவகுக்க வேண்டும்.

இம்மூன்றையும் ஒருங்கிணைத்து மாணவர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவதே ஆசிரியர் பணி என்பதனை ஆசிரியர்கள் உணர வேண்டும். அரசும் உணர்த்த வேண்டும்.

 

தூங்காத மாணவன்

இது ஓர் உண்மை சம்பவம். சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் இரவு சுமார் ஏழு மணியளவில் என்னுடைய பழைய மாணவன் ஒருவன் என்னைப் பார்க்க வந்திருந்தான். வந்த மாணவன் மிகவும் பவ்வியமாகத் தயங்கித் தயங்கி என்முன் நான் காட்டிய இருக்கையில் அமர்ந்தான்.

‘என்ன திடீர் என வந்திருக்கிறாய்? உன் வியாபாரம் எல்லாம் எப்படி நடைபெறுகிறது?’ என்று கேட்டேன்.

ஏதோ கூறியவராக, ‘சார் எனக்கு நீங்கள் ஓர் உதவி செய்ய வேண்டும், அது உங்களால் தான் முடியும் என்று தாழ்ந்த குரலில் கெஞ்சும் தொனியில் கூறினார்.

சில வினாடிகள் மௌனமாக இருந்த நான், நிசப்தத்தைக் கலைத்து ‘சரி விபரம் சொல்’ என்று கேட்டேன்.

என்னுடைய மகன் கண்ணன் நம்ம ஸ்கூலில் பத்தாவது வகுப்பு படித்து வருகிறான். எனக்கு அவன் ஒரே மகன், மற்றொரு பெண் குழந்தையும் இருக்கிறாள். அவனால் எங்கள் வாழ்க்கை நிம்மதியில்லாமல் இருக்கிறது.

கடந்த சில மாதங்களாக இரவு வந்து விட்டால், சில நேரங்களில் இரத்த வாந்தி எடுக்கிறான். தூங்காமலேயே இருக்கிறான். திடீரென ஒரு மணி, இரண்டு மணிக்கு விழித்து எழுந்து விடுகிறான். பகலில் நன்றாக இருக்கிறான், எனது கம்பெனி விவகாரத்தைக்கூட பொறுப்பாக பார்த்துக் கொள்கிறான்.

இரவில் தூங்காமல் பள்ளிக்கூடத்தை – ஆசிரியரை – ஹோம் ஒர்க்கை நினைத்துப் புலம்புகிறான் என்று கூறி மௌனமானார்.

நான் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். பேச்சை அவர் தொடர்ந்தார், “சார் நான் என் மகனைக் கூட்டிக்கிட்டுப் போய்க் காட்டாத டாக்டர் இல்லை, எல்லா மெடிக்கல் டெஸ்டுகளும் செய்து விட்டேன். பல லட்சம் ரூபாய் செலவு செய்து விட்டேன், எந்தப் பயனும் இல்லை, நீங்கள் தான் எனக்கு உதவ வேண்டும்” என்றார்.

அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த நான், என்னால் என்ன உதவி செய்ய முடியம்? என்று எதிர்பார்க்கிறாய்? என்னால் முடிந்ததைச் செய்கிறேன் என்றேன்.

அவரே தொடர்ந்தார். ‘இரு தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள பிரபல மனநோய் மருத்துவரிடம் என் மகனை அழைத்துச் சென்றேன்.

மயக்க நிலையில் அவனை வைத்து தனி அறையில் பேசினார். அவனது பள்ளி – ஆசிரியர்கள் – நண்பர்கள் – தேர்வு – மதிப்பெண் – வீட்டுப்பாடம் பற்றிக் கேட்டிருக்கிறார். ஒரு வகையான மயக்க நிலையில் அனைத்து விபரங்களையும் டாக்டரிடம் மறைக்காமல் கூறிவிட்டுத் தூங்கி விட்டான்’.

பின்னர், என்னிடம் வந்த டாக்டர், ஆசிரியர் சிலரின் டார்ச்சர்தான் பிரச்சனைக்குக் காரணம் என்றும், ஆசிரியர் சிலரிடம் படிக்க ஆர்வமாக இருக்கிறான் என்றும் ஆசிரியரின் பெயர்களைக் கூறினான் என்றார்.

ஆசிரியர்கள் பெயரைப் பட்டியலிட்டுக் கூறியதும் ஆச்சரியப்பட்டேன். ‘என் மகனது செக்ச‌னை மாற்றினால் போதும்’ என்றார். ஆனாலும் அறையில் நடந்தது எதுவும் அவனுக்கு நினைவில்லை என்பதையும் கூறினார்.

 

மரபை மீறினேன்

பொதுவாக செக்ச‌னை மாற்ற வேண்டி வருவோர்க்குப் பள்ளியை மாற்றவே அறிவுரை கூறுவேன். ‘செக்ச‌ன் மாற்றம் கிடையாது’ என்பதே பள்ளியின் மரபு. இருந்தாலும், நாளை வந்து என்னைப் பார் என்று கூறி அனுப்பி வைத்து விட்டேன்.

மறுநாள் வந்தவனுக்கு அவன் விரும்பிய செக்ச‌னுக்கு அவனை மாற்றித் தோளில் தட்டிக் கொடுத்து (கட்டிப்பிடி வைத்தியம்), ‘பயப்படாதே எதுவானாலும் என்னிடம் நேரிலோ, போனிலோ மனம் திறந்து பேசு, எவ்வளவு முடியுமோ அவ்வளவு படி, எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு மட்டும் ஹோம் ஒர்க் செய் போதும். நான் உன் ஆசிரியர்களிடம் உன்னைப் பற்றிப் பேசிக் கொள்கிறேன், என்று கூறி வேறு வகுப்பிற்கு அனுப்பி வைத்தேன்.

சம்மந்தப்பட்ட ஆசிரியர்களையும் தனித்தனியாக அழைத்து அவனை அன்புடன் நடத்தக் கேட்டுக் கொண்டேன்.

அன்று இரவு முதல் இன்று வரை அவன் இரவில் நிம்மதியாகத் தூங்குகிறான், பாடங்களை விருப்பத்துடன் படிக்கிறான், அவன் குடும்பத்தினரும் நிம்மதியுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவனின் தந்தை அவ்வப்போது என்னை வந்து பார்த்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து விட்டுச் செல்கிறார்.

 

என்ன காரணம்?

இந்த நிகழ்வை வைத்து ஆய்வு செய்த பொழுது, சில உண்மைகள் தெரிய வந்தன.

அந்த மாணவனுக்குப் பாட ஆசிரியர்கள் ஐந்து பேர். ஐந்து பேரிலும் ஒருவர் கூட அவனிடம் கடுமையாக நடந்து கொண்டதில்லை.

சமீப காலமாக, ‘நூற்றுக்கு நூறு’ என்ற திட்டத்தின் மூலம் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு நெருக்குதல் கொடுக்கிறது. இந்த நெருக்குதல் அனைத்தும் மாணவனிடம் வந்து குவிகிறது.

அனைத்து ஆசிரியர்களும் அதிகமான அளவில் மாணவரிடம் வீட்டுப்பாடச் சுமையை ஏற்றுகிறார்கள். பகலில் 8 முதல் 10 மணி நேரம் வரை ஆசிரியரின் கண்காணிப்பிலேயே இருக்கும் மாணவன், வீட்டிலும் வந்து பாடங்களையே தொடர வேண்டி உள்ளது.

மாணவர்களோ வீட்டில் உறவினர், நண்பர்களுடன் நேரம் செலவழிக்க விரும்பியும் நேரமில்லை. விளையாட்டு ஆர்வமும் மட்டுப் படுத்தப்படுகிறது.

களைத்த மூளையை ஓய்வு செய்ய தொலைக்காட்சியைப் பார்க்க ஆசைப்பட்டாலும் பெற்றோர் அதைப் புரிந்து கொள்ளாமல், எந்நேரமும் படி..படி.. என்று கூறி அவர்களின் மன அழுத்தத்தை அதிகப்படுத்துகின்றனர்.

ஆசிரியர்கள் – பெற்றோர்கள் – பள்ளிப்பாடச்சுமை – வீட்டுப்பாட நெருக்குதல் – தன் இயல்பான வயதிற்கேற்ற உணர்வுப் போராட்டங்கள், இவை ஒன்றுடன் ஒன்று மோதி மாணவன் கல்வியை மட்டுமல்லாமல், ஆசிரியரையும் வெறுக்கிறான்.

மன அழுத்தம் தாங்க முடியாமல் மனச்சாட்சியுடன் போராடிப் போராடி வடிகால் தேடுகிறான். விளைவு? நோய்வாய்ப்படுகிறான், அல்லது நடத்தை தவறுகிறான்.

தொலைக் காட்சியை மாணவர்கள் பார்க்கக் கூடாதென்றால் உலகியல் அறிவை எப்படிப் பெறுவது? இன்றைய கல்வியே தின்பதை வாந்தி எடுப்பது தான்.

நமது கல்வித்திட்டம் புரியாவிட்டாலும் புத்தகத்தில் உள்ளதை மனப்பாடம் செய்து வார்த்தை மாறாமல் விடைத்தாளில் கொட்ட பயிற்சி அளிப்பதாகத்தான் இருக்கிறது.

அதிக பணம் சம்பாதித்தவன் சிறந்த மனிதன் என்பதைப் போல அதிக மார்க் வாங்கியவன் சிறந்த மாணவன் எனப் பாராட்டுப் பெறுகிறான். மாணவர்களின் திறமையை வெறும் மதிப்பெண்களை வைத்து மட்டுமே தீர்மானிக்கக் கூடாது.

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்திறமை கண்டிப்பாக இருக்கும். அதை வெளிக்கொண்டு வருவதே ஆசிரியர் பணி.

ஆனால் உற்சாகமற்ற வறண்ட பாடத்திட்டம், அறிவியல் அணுகுமுறைக்கு ஒத்துவராத பாடம், மாணவர் எண்ணிக்கை, கற்றலுக்கும் – கற்பித்தலுக்கும் ஒத்துவராத வகுப்பறைகள், தேவைக்கு மேலான தேர்வு முறைகள், இவைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல்தான் இன்று உள்ளது.

ஆசிரியர்களும் என்ன செய்வார்கள்? ஆசிரியர்களைக் குற்றம் சொல்லவும் நியாயமில்லை. அப்படியானால் யார் குற்றவாளி? கோளாறு எங்கிருக்கிறது?

அரசும், பெற்றோரும் தான் குற்றவாளிகள். அரசும், பெற்றோரும் முதலிடம் பெறும் மாணவர்களைக் கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து பாராட்டிவிட்டு, 60% பெறும் மாணவர்களின் தனித்திறனைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்கிவிடுகிறோம்.

கடைசி இடம் பெற்ற மாணவனின் வேதனையை நாம் உணருகிறோமா? கடைசி இடம் பெற்ற மாணவனின் தனித்திறமைகள் நிராகரிக்கப்படுகின்றன; அங்கீகாரம் மறுக்கப்படுகிறது.

 

தீர்வுதான் என்ன?

இதற்குத் தீர்வுதான் என்ன? கிரேடு முறையைக் கொண்டு வரலாம் அல்லவா?

பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் பேசினாலே பல பிரச்சனைகள் தீரும். நேரில் பார்க்க முடியாவிட்டாலும் மாதம் ஒரு முறையாவது செல்போனில் தொடர்பு கொண்டு தங்கள் பிள்ளைகளைப் பற்றி ஆசிரியர்களிடம் பேச வேண்டும்.

மாணவர்கள் வீட்டைவிட்டு வெளியேறுவதற்கும் மற்றும் அவர்களின் தற்கொலை எண்ணங்களுக்கும் காரணம் ‘பாஸ் – பெயில்’ என்ற முறை தான்.

மேல்நாடுகளில் உள்ளதைப் போல மதிப்பெண்ணை மட்டும் வழங்கிட அரசு வழிவகை செய்யவேண்டும். மதிப்பெண்ணிற்கும், வேலைவாய்ப்பிற்கும் சம்மந்தமே இல்லை என்ற நிலை வந்தபின், கிரேடு முறையை நாம் ஏன் பின்பற்றக் கூடாது?

நம்முடைய தேர்வு என்பது கற்பனைத் திறனையும், படைப்பாற்றலையும் மழுங்கடிக்கும் பூதம் தான்.

இளம் உள்ளங்களில் குற்ற உணர்வையும், தாழ்வு மனப்பான்மையையும் நிரப்புவதில் மார்க், ரேங்கிங் அடிப்படையில் தேர்வுகள் முக்கிய பங்காற்றுகின்றன.

இதனால் பெற்றோரும், ஆசிரியர்களும் கூட மன அழுத்தத்திற்கு ஆளாக நேர்கிறது. இதற்குத் தீர்வாக கிரேடிங் முறைதான் சரியான வழிமுறையாக இருக்கும்.

பாஸ் பெயில் என்ற நிலையே இருக்கக் கூடாது. கிரேடை உயர்த்திக் கொள்ள விரும்பினால் மறு தேர்வு எழுதிக் கொள்ள வேண்டும்.

ஆசிரியர்களும் வீட்டுப்பாடங்களை மிகமிக் குறைவாகவே கொடுக்க வேண்டும். அதுவும் விடுமுறைக்கு முந்தைய நாள் வெள்ளிக்கிழமை வீட்டுப்பாடம் வேண்டவே வேண்டாம்.

மாணவர்களுக்குத் தங்கள் அறிவினை வளர்த்துக் கொள்ள எத்தனையோ மக்கள் தொடர்பு சாதனங்கள் உள்ளன.

அறிவை மட்டும் வளர்க்கப் பள்ளிகள் தேவையில்லை. பின் எதற்காக மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்? ஆசிரியர்கள் மூலம் வாழ்வியலைக் கற்றுக் கொள்ளத்தான்.

ஆசிரியர்கள் வாழ்வியலைச் சொல்லித்தர வேண்டும். அதனால்தான் ஆசிரியர்களைத் தெய்வத்திற்குச் சமமாகக் கருதுகிறோம். ஆசிரியர்களும் தங்களுக்குத் தாங்களே நன்னெறி வகுத்து, முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும்.

இந்தியாவில் கல்வி சீர்கெட்டிருக்கிறது. சீரமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும். நம் நாடு எதிர்காலத்தில் பெரும் சக்தியாக உருவெடுப்பது தடைபடும்.

பல ஆசிரியர்கள் வெறும் மனப்பாடம் செய்து போர்டில் எழுதவும் ஒப்பிக்கவும் செய்கின்றனர். அவர்களுக்குப் பல விஷயங்கள் தெரிவதில்லை.

கல்வித்தரம் உயர முதலில் ஆசிரியர்களின் தரம் உயர வேண்டும்.

 

ஆசிரியர் தரம் உயர

பல மேலை நாடுகளில் ஆசிரியர்கள் தங்கள் துறை சார்ந்த அறிவைப் புதுப்பித்துக் கொண்டே வருவதை ஏதாவது ஒரு வகையில் ஐந்தாண்டிற்கு ஒருமுறை நிரூபித்தாக வேண்டும். அதன் பின்னர்தான் அவர்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றும் தகுதி புதுப்பிக்கப்படுகிறது.

ஆனால் இந்தியாவிலோ படித்த பாடத்தை ஆசிரியர் மறக்க மறக்க இன்கிரிமெண்ட், பதவி உயர்வு வழங்கப்படுகிறது. சிவபெருமான் வரம் கொடுத்தக் கதைதான்.

நியமனத்திற்குப் பின் கற்றதை மறந்து பத்தாண்டானால் செலெக்ச‌ன் கிரேடு, மறந்து இருபதாண்டானால் ஸ்பெசல் கிரேடு, முப்பது ஆண்டானால் போனஸ் இன்கிரிமெண்ட். மறக்க மறக்க மரியாதை அதிகம்.

இந்நிலை மாற்றப்பட வேண்டும். ஆசிரியர்களின் தன் மதிப்பீடு, புறமதிப்பீடு, மாணவர் மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் ஐந்தாண்டிற்கு ஒரு முறை ஆசிரியரின் கற்பித்தல் திறன் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

அதன் அடிப்படையில் அவரது ஆண்டு ஊதிய உயர்வு, பதவி உயர்வு, இடமாறுதல் யாவும் தீர்மானிக்கப்படும் என்கிற கட்டாயம் ஏற்பட்டால் மட்டுமே ஆசிரியர்கள் அறிவில் பின் தங்கி விடாமல் தங்கள் துறை சார்ந்தவைகளைத் தொடர்ந்து படித்து, மூளை மழுங்கிப் போகாமல் பாதுகாப்பார்கள்.

இல்லாவிட்டால் போட்ட விதையெல்லாம் பழுதாகும். நாளைய விளைச்சல் என்னவாகும்?

மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், அறிவை கூர்மையாக வைத்துக் கொள்ளவும் கல்வி வழிவகுக்க வேண்டும்.

இம்மூன்றையும் ஒருங்கிணைத்து மாணவர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவதே ஆசிரியர்களின் தலையாயப் பணி என்பதனை அவர்கள் உணர வேண்டும். அரசும் உணர்த்த வேண்டும்.

மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கற்க வேண்டுமெனில் – பெற்றோர்களும், ஆசிரியர்களும், அரசும் சேர்ந்து கூட்டு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

எத்தனையோ மாற்றங்களை நமது கல்வி முறையில் செய்தாக வேண்டும். ஆசிரியர்களும், மாணவர்களும், பள்ளிக்கு உற்சாகத்துடன் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் கற்றலிலும், கற்பித்தலிலும் இனிமை பிறக்கும். வளமான எதிர்கால இளைஞர்களை உருவாக்க முடியும். அந்த நன்னாள் எந்நாளோ?

சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்