ஆசையை ஒழி

இப்போது துக்கத்தை அனுபவிக்கிறவன் முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனை தான் அனுபவிக்கிறான். இப்போது அவன் புண்ணியம் செய்தாலும் கூட அந்த புண்ணியத்தின் பலன், பாவத்தின் பலனை அனுபவித்த பின் கிடைக்கும். மிச்சமிருந்தால் அடுத்த பிறவியில் கிடைக்கும். அதே போல் பாவத்தின் பலன் புண்ணியத்தின் பலனை அனுபவித்த பின் கிடைக்கும்.

புண்ணிய கர்மாக்களை செய்யும் போது பலனை எதிர்பார்த்து செய்யக் கூடாது. புண்ணியத்தை பகவானுக்கு அர்பணம் செய்து விடலாம். ஆனால் பாவத்தை அர்பணம் செய்ய முடியாது. பலனை அனுபவித்தாக வேண்டும்.

ஒரு குழந்தை பிறக்கிறது. பிறக்கும் போதே உடல் ஊனத்தோடு பிறந்து விடுகிறது. அப்போதுதான் பிறந்த குழந்தை, என்ன பாவம் செய்ய முடியும்? ஏன் அப்படி ஊனத்துடன் பிறக்கிறது? காரணம் பூர்வஜென்மம் பாவம் தான். அந்த பாவத்தின் பலனை இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வந்திருக்கிறது.

ஒருவேளை பாவம் தீர்ந்த பின் அதற்கு நிவாரணம் ஏற்படலாம்: தீராவிட்டால், அந்த ஜென்மம் முழுவதும் துக்கம் தான். புண்ணியம் இருந்தாலும் அதன் பலனை அனுபவிக்க பிறவி எடுக்க வேண்டியுள்ளது.

ஆக, பிறவியை ஒழித்து விடுதலை பெற வேண்டுமானால் தன் கடமைகளை தர்மங்களில் சொன்னபடி செய்து வரவேண்டும். இதை சரிவர செய்ய விடாமல் தடுப்பது காம, குரோதங்கள் தான். ஆசை வளர, வளர பொருட்களின் மேல் பற்றுதல் ஏற்படுகிறது. பொருள் கிடைக்க, கிடைக்க இன்னும் வேண்டும் என்று தோன்றுகிறது.

இதற்கு என்னதான் முடிவு? இப்படி ஆசைகளால் கட்டுப்பட்டவன் எப்படி விடுதலை பெற முடியும்? ஆசையின் காரணமாகத் தானே தவறான காரியங்களையும் செய்கிறான். பாவத்தை சேர்த்துக் கொள்கிறான். பிறகு எப்படி பிறவியிலிருந்து விடுபட முடியும்? ஆசையை ஒழி என்பது தான் அதற்கு வழி.