ஆடி மாத மகத்துவம்

தமிழ் வருடத்தின் நான்காவது மாதம் ஆடி மாதம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இம்மாதம் முதலே விழாக்கள், உற்வசங்கள், பண்டிகைகள் ஆகியவை தொடங்கி அடுத்த ஆறு மாதங்களுக்கு நடைபெறுகின்றன‌.

ஆடிப்பெருக்கு, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அஷ்டமி, ஆடிக்கிருத்திகை, ஆடி சதுர்த்தி, ஆடிப்பஞ்சமி, ஆடி அமாவாசை, ஆடிப் பவுர்ணமி, ஆடித்தபசு, ஆடிப்பூரம் என ஆடி மாதம் முழுவதும் தெய்வங்கள் மற்றும் முன்னோர்கள் வழிபாடு செய்யப்படுகின்றனர்.

இம்மாதம் முழுவதும் பெண் தெய்வ வழிபாடே பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றது. ஆடி மாதம் என்பது கோடைகாலம் முடிந்து சிலுசிலு காற்றோடு சாரல்  ஆரம்பிக்கும் பருவம். பொதுவாக இம்மாதத்தில் திருமணம் போன்ற தனி மனித விழாக்கள் நடத்தப்படுவதில்லை. ஆடி மாதத்தில் நடைபெறும் விழாக்கள் பற்றிப்பார்க்கலாம்.
தலை ஆடி

ஆடி மாதத்தின் முதல் நாள் தலை ஆடி என்று அழைக்கப்படுகின்றது. புதிதாக மணமான தம்பதியினர் மணப்பெண்ணின் தாய் வீட்டிற்கு அழைக்கப்படுவர். அங்கு மாப்பிள்ளைக்கு விருந்துடன் தேங்காய் பால் வழங்கப்படுகிறது.

சில இடங்களில் தலை ஆடிக்கு மணமக்களுக்கு புது ஆடைகள் பரிசாக மணப்பெண்ணின் தாய் வீட்டிலிருந்து வழங்கப்படுகிறது. பின் மணப் பெண் மட்டும் தாய் வீட்டில் தங்கிவிடுகிறாள். தாயிடம் இருந்து பொறுமை, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், சூழ்நிலையை சமாளித்தல் போன்றவற்றை திருமணமான பின்பு கற்றுக் கொள்கிறாள்.

மேலும் ஆடியில் கருவுற்றால் சித்திரையில் குழந்தை பிறக்கும். சித்திரை வெயில் குழந்தைக்கும், தாயுக்கும் உடல் மற்றும் மனரீதியாக அசௌகரியத்தைக் கொடுக்கும். எனவே தான் தலை ஆடிக்கு வரும் புது மணப்பெண் தாய் வீட்டில் ஆடி மாதம் முழுவதும் தங்கிவிடுகிறாள். இதனால் தான் ஆடிப்பால் குடிக்காத மாப்பிள்ளையைத் தேடிப்பிடி என்ற பழமொழி இன்றும் வழக்கத்தல் உள்ளது.

 

ஆடிச்செவ்வாய் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமைகளில் அம்மன் வழிபாடு வீட்டிலும், கோவில்களிலும் மேற்கொள்ளப்படுகிறது. ஆடிச்செவ்வாய் அன்று பெண்கள் ஒளவையார் விரதம் மேற்கொள்கின்றனர்.

ஆடிச்செவ்வாய் இரவு ஊரில் உள்ள வயதில் மூத்த பெண்மணி தனது வீட்டில் மற்ற பெண்களுடன் இணைந்து பச்சரிசி மாவினைக் கொண்டு உப்பில்லா கொழுக்கட்டையை தயார் செய்து ஒளவையாருக்குப் படைத்து தேங்காய் உடைத்து ஒளவையாரின் கதையை மற்ற பெண்களுக்கு கூறி வழிபாடு நடத்துவார்.

இவ்வழிபாட்டில் ஆண்கள் மற்றும் ஆண்குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது. மேலும் பிரசாதக் கொழுக்கட்டைகளை பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் மட்டுமே உண்பர். இவ்விரதத்தினை மேற்கொள்வதால் வளமையான வாழ்வும், நீண்ட ஆயுளும், மாங்கல்ய பலனும் கிடைப்பதாக கருதப்படுகிறது.

 

ஆடி வெள்ளி

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு உகந்ததாகக் கருதுகின்றனர். கோவில்களில் விளக்கு பூஜை என்ற கூட்டு வழிபாட்டினை பெண்கள் மேற்கொள்கின்றனர். ஆடிச்செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளிக் கிழமைகளில் ஆடிக் கூழ் ஊற்றப்படுகிறது.

கேப்பை அல்லது கம்பு மாவினைக் கொண்டு கூழ் தயார் செய்யப்படுகிறது. அதனுடன் சிறு வெங்காயம் சேர்த்து மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஆடி மாதத்தில் கோடை வெப்பம் முடிந்து காற்றோடு சாரல் மழை பெய்யும். இதனால் அம்மை நோய் பரவும். கேப்பை மற்றும் கம்பு தானியம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

சின்ன வெங்காயம் அம்மை நோய் கிருமியை கட்டுப்படுத்தும். இதனாலே நம் முன்னோர்கள் கோவில்களில் கூழ் தயார் செய்து மக்களுக்கு பிரசாதமாக வழங்கி இருக்கின்றனர். இன்றளவும் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

 

ஆடிக்கார்த்திகை

ஆடிக்கார்த்திகை அன்று எல்லா முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்று முருகனுக்கு சிறப்பு அபிசேகங்கள், ஆராதனைகள் செய்யப்படுகின்றன. ஆடிக்கார்த்திகைக்கு விரத முறை மேற்கொள்ளப்பட்டு முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் நினைவு கூறப்படுகின்றனர்.

 

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்பணம் நீர் நிலைகளில் செய்யப்படுகிறது. அன்று பித்ருக்களுக்காக மக்கள் விரத முறையை மேற்கொள்கின்றனர். பித்ரு பூஜை வருடத்தில் ஆடி அமாவாசை, தை அமாவாசை அன்று பெரும்பான்மையான மக்களால் நடத்தப்படுகிறது.

வம்சம் தழைக்கவும், சுபிட்ச வாழ்வும் வேண்டி மக்கள் இவ்வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். இராமேஸ்வரம், பாபநாசம் போன்ற இடங்களில் பித்ரு பூஜை செய்வது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஆடி அமாவாசை அன்று தான் திருவையாற்றில் சிவபெருமான் திருநாவுக்கரசருக்கு கயிலைக் காட்சியளித்தார். இந்நிகழ்வை நினைவு கூறும் விதமாக இன்றும் இந்நிகழ்வு ஆடி அமாவாசை அன்று நிகழ்த்தப்படுகிறது.

 

ஆடிப்பௌர்ணமி

ஆடிப்பௌர்ணமி அன்று குரு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இது குரு பூர்ணிமா என்றும் வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவை (ஆசிரியர்) வழிபடுவதுடன் தட்சிணா மூர்த்தி, கிருஷ்ணன், வேதவியாசர், ஆதிசங்கரர், இராமானுஜர், போன்றோரையும் வழிபடுகின்றனர். ஹயக்கிரீவர் அவதார தினமும் இந்நாளே ஆகும். கல்விச் செல்வம் வேண்டி ஹயக்கிரீவர் வழிபாடும் ஆடிப்பௌர்ணமி அன்று மேற்கொள்ளப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆடிப் பௌர்ணமி அன்று ஆடித்தபசு நடைபெறுகிறது. உமையம்மை கோமதி என்ற திருநாமத்துடன் சங்கர நாராயணர் தரிசனம் வேண்டி சிவனை நோக்கி ஒற்றைக் காலில் இத்தலத்தில் தவமிருந்தாள்.

கோமதி அம்மையின் வேண்டுகோளுக்கு இணங்க பொதிகை புன்னை வனத்தில் இறைவன் சங்கர நாராயணராக ஆடிப்பௌர்ணமியில் காட்சி அளித்தார். இந்நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் விதமாக ஆடித் தபசு விழா இன்று கொண்டாடப்படுகிறது. 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 11-ம் நாள் தபசுக் காட்சி நடைபெறுகிறது.

 

ஆடி நவராத்திரி

இம்மாதத்தில்தான் வாராஹி அம்மனை நினைத்து ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

 

ஆடிப்பூரம்

ஆடிப்பூரத்தில் தான் திருநெல்வேலி காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் அம்மனுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட கண்ணாடி வளையல்களை கொண்டு அலங்காரம் செய்யப்படுகிறது.

3 நாட்கள் கழித்து பக்தர்களுக்கு கண்ணாடி வளையல்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வளையல்களை அணிவதால் குழந்தைப்பேறு கிட்டும்: மாங்கல்ய பலம் கூடும் என்று கருதப்படுகிறது.

ஆடிப்பூரத்தில் தான் பொறுமையின் வடிவமான பூமா தேவியின் அவதாரமாக ஆண்டாள் அவதரித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்து வந்த பெரியாழ்வாருக்கு குழந்தைப் பேறு இல்லை. இக்குறையை நீக்குமாறு அவர் தினமும் திருமாலை வேண்டினார்.

அக்குறையை நீக்கும் பொருட்டு கோவில் நந்தவனத்தில் நள வருட ஆடிப்பூர செவ்வாய் கிழமையில் துளசி செடிக்கு அடியில் பெண்குழந்தை ஒன்றைக் கண்டு எடுக்கும்படி திருமால் அருளினார். அக்குழந்தைக்கு கோதை என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பெரியாழ்வார்.

கோதை அரங்கனையே மணாளனாகக் கருதி வளர்ந்து வந்தாள். பெரியாழ்வார் வடபத்ரசாயி பெருமாளுக்கு கட்டும் மாலையை தினமும் அவர் அறியாத வண்ணம் அணிந்து மீண்டும் எடுத்த இடத்தில் வைத்து வந்தாள் கோதை.

ஒருநாள் இச்செயலைக் கண்ட பெரியாழ்வார் அதிர்ச்சியுற்று கோதையைக் கடிந்து கொண்டு வேறு மாலையைத் தயார்செய்து பெருமாளுக்கு சூட்டினார். அன்று இரவு கனவில் தோன்றி பெருமாள் உம்பெண் உணர்வால் மட்டுமல்ல மனதாலும் என்னை ஆண்டாள். எனவே எனக்கு அவள் சூட்டிய மாலையையே அணிவிப்பீர் என்று கூறினார். இதனால் கோதை அன்று முதல் சூடிக்கொடுத்த சுடர்கொடி, ஆண்டாள் என்று வழங்கப்பட்டாள்.

ஆண்டாள் இயற்றிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாடல்கள் இன்றளவும் மக்களால் பாடப்படுகின்றன. ஆண்டாளை வணங்கினால் மன உறுதியுடன் நினைத்தது நிறைவேறும். தம்பதி ஒற்றுமை ஏற்படும் என்று கருதப்படுகிறது. ஒவ்வொரு வருடம் ஆடிப்பூரத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்த் திருவிழா விமர்சையாக நடைபெறுகிறது.

 

ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு என்பது விவசாயிகள் நதி அன்னையிடம் வேளாண்மை சிறக்க துணை செய்யுமாறு மேற்கொள்ளப்படும் வழிபாடாகும். இவ்விழா காவிரி நதிக்கரையோர மக்களால் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும் ஆடிப் பெருக்கன்றே விதைகள் விதைக்கப் படுகின்றன. ஆடி மாதப் பருவநிலை விவசாயத்திற்கு உகந்தது. எனவே தான் ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது.

ஆடிப் பெருக்கன்று எந்த வித செயலைத் தொடங்கினாலும் அது சிறப்பாக வளரும் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது. காவிரிக்கரையில் பெண்கள் அதிகாலையில் குளித்து கரையோரத்தில் வாழை இலை விரித்து கருகமணி, பழங்கள், வெற்றிலை, பாக்கு சித்ரான்னங்கள், காப்பரிசி, மஞ்சள் தடவிய நூல் ஆகியவற்றை படைத்து அகல் விளக்கேற்றி காவிரியை வணங்குகின்றனர். பின்னர் மஞ்சள் நூலை கழுத்தில்கட்டிக் கொள்கின்றனர்.

ஸ்ரீரங்கநாதரும் ஆடிப்பெருக்கன்று காவிரியில் எழுந்தருளி காவிரிக்கு சீர்பொருட்களை வழங்குவார். ஆடிப்பெருக்கு ஒவ்வோர் ஆண்டில் ஆடி-18ல் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி நாகசதுர்த்தி என்றும் வளர்பிறை பஞ்சமி கருட பஞ்சமி என்றும் கொண்டாடப்படுகின்றன.

வளர்பிறை தசமி அன்று திக்வேதா விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. திசை தெய்வங்களுக்கு அன்று வழிபாடு நடத்தப்படுகிறது. ஆடி வளர்பிறை ஏகாதசி அன்று அன்னதானம் செய்தல், பசுவிற்கு அகத்திக்கீரை அளித்தல் போன்றவற்றால் தீவினைகள் நீங்குவதாகக் கருதப்படுகிறது.

ஆடி வளர்பிறை துவாதசி அன்று விஷ்ணு வழிபாடு நடத்தப்படுகிறது. இதனால் வாழ்வில் செல்வவளம் சிறக்கும் என்று கருதப்படுகிறது. கிராமங்களில் கிராம எல்லையில் உள்ள காவல் தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது.

கருடாழ்வார், சுந்தரநாயனார், கலிய நாயனார், புகழ்சோழ மூர்த்தி நாயனார், ஆளவந்தார், புண்டரிகாவுர், கந்தாடை, தோழப்பர், பத்ரிநாராயண ஆழ்வார் போன்றோர் ஆடியிலே அவதரித்தவர்கள் ஆவார்.

சுருங்கச் சொல்லின் ஆடி மாதத்தில் தனிமனித விழாக்களைத் தவிர்த்து பண்டிகைகள் போன்ற பொது விழாக்கள் சிறப்பாக‌ கொண்டாடப்படுகின்றன.