ஆடி வரும் ஆண்டாள் தேர்

ஆடித்தேரு அசைஞ்சிவரும் அழகைப்பாருங்க
ஆசையோட வடம்பிடிச்சி இழுக்கவாருங்க
கூடிநீங்க இழுக்கும்போது நகரும்தேருங்க
குடுகுடுன்னு ஓடும்தேரை ரசிக்கவாருங்க

ஆண்டாளு ரெங்கமன்னார் சோடிசேர்ந்துங்க
அழகுத்தேரில் இருக்கிறதை நீங்கபாருங்க
வேண்டியது கிடைக்குமென்பது உண்மைதானுங்க
வில்லிபுத்தூர் என்றஇந்த ஊரில்தானுங்க

நாராணனை மணமகனாய்ப் பெற்றதினாலே
நாச்சியாரென ஊருகூடி கொண்டாடுதுங்க
பூரநாளில் அவளசுமந்து தேருஓடுதுங்க
பொழுதெல்லாம் அவள்புகழே ஒலிக்கும்கேளுங்க

பெரியாழ்வார் வளர்த்துவந்த பொன்னுதானுங்க
பெருமாளின் புகழைப்பாட்டில் பாடிவச்சாங்க
கரியமேகம் கடலிருந்து பிறந்ததைக்கூட
கவிதையிலே முதலில்சொன்னது கோதைதானுங்க

பூவைக்கட்டி மாலையாக்கி தனக்குசூடிங்க
பொன்னரங்கன் சூடத்தந்த மனுஷிதானுங்க
பாவைபாடி நமக்குத்தந்த பாவைதானுங்க
பாவமெல்லாம் நீக்கிநம்மை வாழவைப்பாங்க

கொஞ்சும்தமிழில் விஞ்சும்கருத்தை சொல்லிவச்சாங்க
கூட்டம்கூடி கண்ணன்புகழை பாடச்சொன்னாங்க
தஞ்சமின்னு அவள்பிறந்த ஊரைச்சேருங்க
தடைகளையே தாண்டிவாழ்வில் வெற்றிகொள்ளுங்க

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.