ஆடுதீண்டாப்பாளை

ஆடுதீண்டாப்பாளை – மருத்துவ பயன்கள்

ஆடு தீண்டாப்பாளை முழுத்தாவரமும் குமட்டலான மணமும் வெப்பத் தன்மையும் கொண்டது. ஆடு தீண்டாப்பாளை குடல் புண்களை ஆற்றவும் வயிற்றுப் புழுக்களைக் கொல்லவும் விஷத் தன்மையை முறிக்கவும் உடலைப் பலப்படுத்தவும் மாதவிலக்கைத் தூண்டவும் பயன்படுகின்றது.

ஆடு தீண்டாப்பாளை தரையோடு படர்ந்து வளரும் புதர்ச்செடி, மாற்றடுக்கில் அமைந்த, சாம்பல் படர்ந்த, முட்டை வடிவ இலைகள் கொண்டது. மலர்கள் ஆழ்ந்த சிகப்பு நிறமானவை. கனிகள் முதிர்ந்த நிலையில் உள்ளிருக்கும் விதைகள் வெடித்துச் சிதறும்.

ஆடு தீண்டாப்பாளை இந்தியா முழுவதும், முக்கியமாகச் சமவெளிகளில் வளர்கின்றது. கருப்பு மண் உள்ள நிலங்கள், சற்றே உப்புச்சுவை கொண்ட கழி நிலங்களில் மிகவும் பரவலாக வளர்கின்றது. பங்கம்பாளை, வாத்துப்பூ ஆகிய பெயர்களும் ஆடு தீண்டாப்பாளை தாவரத்திற்கு உண்டு. முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.

வயிற்றுப் புழுக்கள் குணமாக ஆடு தீண்டாப்பாளை இலைச்சூரணம் ¼ தேக்கரண்டி அளவு வெந்நீருடன் கலந்து இரவில் குடிக்க வேண்டும் அல்லது ஆடு தீண்டாப்பாளை விதைச் சூரணம் ஒரு தேக்கரண்டி அளவு விளக்கெண்ணெயில் கலந்து இரவில் சாப்பிட வேண்டும். பேதியாகும் வாய்ப்பும் உண்டு. அவ்வாறு ஏற்பட்டால் மோர் சாதம் சாப்பிட்டு பேதியைக் கட்டுப்படுத்தலாம்.

பசுமையான ஆடுதீண்டாப்பாளை இலைகளை நசுக்கிப் பிழிந்து எடுத்த சாறு 50 மி.லி.யுடன் தேங்காயெண்ணெய் 50 மி.லி. சேர்த்து, நீர்வற்றும் வரை சுண்டக் காய்ச்சி, கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்திக் கொண்டு, மேல்பூச்சாகத் தடவிவர தோல் நோய்கள், சிரங்கு, கரப்பான், வண்டுக்கடி தீரும்.


Comments

“ஆடுதீண்டாப்பாளை – மருத்துவ பயன்கள்” மீது ஒரு மறுமொழி