ஆடு புலி ஆட்டம்போல இருக்குதுங்க – ஒரு
அஞ்சாறு பேரு மட்டும் ஜெயிக்கிறாங்க
காடுமலை கழனியெல்லாம் காணுமுங்க – இப்ப
கட்டிவச்ச வீடாகிப் போனதுங்க
வீடுகட்டி வித்தகூட்டம் ஜெயிக்குதுங்க – நாம
விதைபோட நிலமில்லாம தவிக்கிறோங்க (ஆடு புலி)
ஓடுபோல இருந்த ஓசோன் ஒடஞ்சதுங்க – அதை
உடைச்சது யாருன்னுதான் தெரியலங்க
ஏடுபோல கரும்புகையும் சுழலுதுங்க – இங்க
எப்பவுமே மாசுதான் ஜெயிக்குதுங்க (ஆடு புலி)
ஓடிவந்த நதியின்தோலும் உரிஞ்சதுங்க – அதை
உரிச்சது யாருன்னுதான் தெரியலங்க
தேடிஅதை உரிச்சவங்க ஜெயிக்கிறாங்க – நீரை
தேடிவரும் நாம மட்டும் தவிக்கிறோங்க (ஆடு புலி)
பாடிவச்ச பாட்டெல்லாம் மறைஞ்சதுங்க – அதை
மறைச்சது யாருன்னுதான் தெரியலங்க
கூடிவரும் கூட்டம்ஒன்னு கூவுதுங்க – அது
கூவி வைக்கும் பாப்இசைதான் ஜெயிக்குதுங்க (ஆடு புலி)
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)