ஆடைகட்டி வந்த அழகோ

அந்த காட்டில் வாழ்ந்த மிருகங்களுக்கு தனித்தனியாக வடிவங்களோ வாழிடங்களோ இல்லாமல் எல்லோரும் ஒன்றாக வாழ்ந்து வந்த காலம் அது. ஆனால் குரலில் மட்டும் அதாவது அவை எழுப்பும் ஒலிகளில் மட்டும் ஒவ்வொன்றும் வித்தியாசமானவைகளாக இருந்தன.

அங்கு வாழ்ந்த விலங்குகளில் ஒன்றான பச்சோந்தி பாப்பம்மா விளையாட்டாக தாவித்தாவி வெகுதூரம் சென்று காட்டை விட்டு காட்டினை ஒட்டிய நகர் பகுதிக்குள் புகுந்தது.

அந்த நகர் பகுதியிலிருந்து உயர்ந்த பலவகை மரங்களில் தனக்கு பிடித்தமான அரச மரத்திலேறி தலையை ஆட்டி ஆடிக்கொண்டே நகர்ப்பகுதியைக் கண்டது.

நகர்ப்பகுதிக்களில் நடமாடும் மனிதர்கள் ஒரே மாதிரியாக தோற்றமளித்தாலும் வெவ்வேறு நிறத்திலான உடைகளை உடுத்தி கொண்டு அழகழகாக வருவதைக் கண்டது.

அழகழகாக உடை உடுத்திக் கொண்டால் தாமும் பிறரின் பார்வைக்கு அழகாக தெரியலாமல்லவா என தனக்குள் எண்ணியபடி தாம் வந்த வழியே மீண்டும் காட்டுக்குள் சென்றது.

எங்கும் நிற்காமல் விரைந்தோடி வந்த பாப்பம்மா பச்சோந்தியை அணில் அய்யாச்சாமி வழிமறித்தது.

“பச்சோந்தி பாப்பம்மா

பாரேன் என்னைத் தானம்மா

எப்போதும் தலையை ஆட்டி

ஏதும் கவலையில்லா நீ

இப்போது இப்படியாக

ஓடுவதும் ஏனோ சொல்லம்மா” என்று கேட்டது.

 

அணில் அய்யாச்சாமியின் கேள்விக்கு

“அணிலே அய்யாச்சாமி நான்

அருகிலிருக்கும் நாட்டிற்குள்

துணிந்தே சென்று வந்துள்ளேன்

புதிதாய் ஒன்றை கண்டதனால்

புலிபோல் பாய்ந்தே வருகின்றேன்

அங்குள்ள மனிதர்கள் அனைவருமே

அழகாய் ஆடைகளை அணிந்தே தான்

எங்கும் செல்வதை கண்டதனால்

அதுபோல் எனக்கும் ஒன்றைத்தான்

செய்திட வழிதான் எதுவென்றே

தெரிந்திட விரைந்தே செல்கின்றேன்”

எனக்கூறிவிட்டு அய்யாச்சாமி அணிலின் பதிலுக்கு கூட காத்திராமல் விரைந்து சென்று விட்டது.

அணில் அய்யாச்சாமிக்கு பச்சோந்தியின் பதில் என்ன என்று சரியாகப் புரியவில்லை என்றாலும் அது பாப்பம்மாவை தொடர்ந்து செல்வது என்று முடிவு செய்து பின் தொடர்ந்தது.

 

சற்று தூரம் முன்னைவிட சற்று மெதுவாக ஓடிய பச்சோந்தி பாப்பம்மாவை இப்போது முயல் முத்தப்பன் வழிமறித்தது.

“பச்சோந்தி பாப்பம்மா

பாரேன் என்னை தானம்மா

இக்காட்டில் விரைந்தேதான்

ஓடுவதும் ஏனோ கூறம்மா” என்று கேட்டது.

அணில் அய்யாச்சாமிக்கு கூறியது போலவே தான் நாட்டு பகுதிக்குள் சென்றதனையும் அங்கு வாழும் மனிதர்கள் அழகாக ஆடைகளை உடுத்தி வருவதை கண்டதை கூறிவிட்டு அது போல ஒன்றை செய்வதற்காக ஓடுவதாக கூறிவிட்டு மீண்டும் ஓடத் துவங்கியது.

 

பாப்பம்மா பச்சோந்தியின் பதிலால் குழப்பமடைந்த முயல் முத்தப்பன் தொடர்ந்து வரும் அணில் அய்யாச்சாமியைக் கண்டது.

அணிலாரும் முயலாரிடம் பாப்பம்மா கூறியதை கூறியது. இருவரும் இணைந்தே புதிய ஆடைக்காக நாமும் செல்வோம் என கை கோர்த்தபடி பச்சோந்தி சென்ற பாதையிலேயே பயணத்தை தொடர்ந்தன.

தொடர்ந்து ஓடி வருவதால் களைப்புற்ற பாப்பம்மா பச்சோந்தி ஓட முடியாமல் நடந்தபடியே விரைவாக சென்று கொண்டிருந்ததை அங்கு வந்த முள்ளம்பன்றி முனியன் வழிமறித்து என்ன என்று விசாரித்தது.

முள்ளம்பன்றி முனியனுக்கும் தான் நகர பகுதிக்குள் கண்டவற்றை கூறி அதுபோல ஆடை ஒன்றை செய்வதற்காக விரைந்து செல்வதாக கூறிவிட்டு பச்சோந்தி பாப்பம்மா விரைந்து நடக்கலாயிற்று.

 

சிறிது நேரத்தில் அதே பாதையில் அணில் அய்யாச்சாமியும் முயல் முத்தப்பனும் கை கோர்த்து வருவதைக் கண்ட முள்ளம்பன்றி முனியன் அவர்களிடம் என்ன என்று விசாரித்தது.

“விரைந்தே செல்லும் பாப்பம்மா

நகருக்குள் சென்று வந்தாளாம்

அங்கே வாழும் மனிதரெல்லாம்

அழகாய் ஆடை உடுத்தி வந்தனராம்

அதுபோல் ஒன்றைனை பெறுவதற்காய்

விரைந்தே ஓடிச் செல்கின்றாள்

நாங்களும் அவளை பின் தொடர்ந்தே

நல்ல ஆடை பெறுவதற்காய்

மெல்ல நடந்தே செல்கின்றோம்”

என்று கூறியதைக் கேட்ட முள்ளம்பன்றி முனியன்

“ஆடை ஒன்று நமக்குத் தேவை

அதற்காய் அவள் பின் ஓடுவதேன்

கோடை காலம் இப்போது

குளிர்வருமுன் நமக்காக

வாடை காத்திடும் ஆடைகள்

வடிவமைத்திட இயலாதா?

ஓடும் அவளை தொடர்வதனால்

ஒருவித பயனும் கிடையாதே!”

என்று முள்ளம்பன்றி முனியன் கூறியதும் அவை அப்படியே அங்கேயே நின்று விட்டன.

மூன்றும் சேர்ந்து யோசனை செய்தன. பின்னர் முள்ளம்பன்றி தனது யோசனையை தெரிவித்தது. அதன்படி அவை ஒவ்வொருவரும் அங்கிருந்த மரம் செடிகளில் காய்த்திருந்த கனிகளிலிருந்து தமக்கான ஆடைகளை செய்யத் துவங்கின.

அணில் அய்யாச்சாமி அருகே உயரமாக இருந்த இலவ மரத்திலேறி அதன் காய்களை உடைத்து உள்ளிருந்த இலவம் பஞ்சுகளை தனக்கான உடையாக மாற்றிக் கொண்டது.

முயல் முத்தப்பனோ தம்மால் இயன்றபடி அழகாக காய்த்துக் கொண்டிருந்த பருத்திச் செடியிலிருந்த வெண்மையான பருத்தியினால் தனக்குரிய ஆடையை செய்து கொண்டது.

முள்ளம் பன்றி முனியனோ தனக்கு எப்போதும் பாதுகாப்பு தேவை என மனதில் நினைத்துக் கொண்டு சற்று தொலைவிலிருந்த ஊமத்தங்காய்களிலிருந்த முட்களால் தமக்குரிய உடையை செய்து கொண்டது.

“இலவ மரம் தந்த உடை

இனிய அணிலுக்கு அழகேதான்

முட்களுடன் முள்ளம்பன்றி

முனியன் உடையோ கூர்முனையாய்

பருத்தயின் மென்மையை முயலுமிங்கே

பெற்றிட உடையே மேன்மைதான்”

என்று மூவரும் ஆடிப்பாடிக்கொண்டு புதிய ஆடைகளை அணிந்து கொண்டு அங்கும் இங்கும் சந்தோசமாக ஓடிக்கொண்டிருந்தன.

பாவம் பாப்பம்மா பச்சோந்தி தனக்கென ஆடையாக எதையும் தேர்வு செய்ய இயலாத குழப்பமான மனநிலையுடன் இன்னும் கூட ஆங்காங்கே கிடைத்த நிறத்தினை தனக்கு உடையாக மாற்றியபடி “நிறம் மாறும் பச்சோந்தியாக” இப்போதும் திரிந்து கொண்டிருப்பதனை நாமும் பார்க்கலாம்.

சிறந்ததை தேர்வு செய்ய இயலாத பச்சோந்தி பாப்பம்மா யாவரையும் பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டு மரம் பொந்துகளில் ஒளிந்து வாழவும் பழகிக் கொண்டது.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)