ஆட்டம் இழப்பு வகைகள் – கிரிக்கெட் கேள்வி பதில்

ஆட்டம் இழப்பு (அவுட் ) என்பது கிரிக்கெட்டில் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம்.

ஆட்டம் இழப்பு வகைகள்

1. ஒரு பந்தடி ஆட்டக்காரர் எந்தெந்த வழிகளில் ஆட்டமிழக்கும் வாய்ப்புக்கள் உள்ளன?

1. பந்தெறியால் விக்கெட் விழுதல் (Bowled).

2. பந்தை அடித்துப் ‘பிடி கொடுத்தல்’ (Caught).

3. பந்தைக் கையால் தொட்டாடுதல் (Handled the Ball).

4. பந்தை இருமுறை அடித்தாடுதல் (Hit the ball Twice).

5. தானே விக்கெட்டை வீழ்த்திக்கொள்ளுதல் (Hit Wicket).

6. விக்கெட்டின் முன்னே கால் வைத்திருத்தல் (LBW).

7. தடுத்தாடுவோரைத் தடை செய்தல் (Obstructing the field).

8. ஓட்டத்தில் ஆட்டமிழத்தல் (Run Out).

9. விக்கெட் வீழ்த்தப்படுதல் (Stumped).

மேலே கூறப்பட்டிருக்கும் ஒன்பது காரணங்களால் ஒரு பந்தடி ஆட்டக்காரர் ஆட்டத்திலிருந்து ஆட்டமிழந்து வெளியேறுகின்ற வாய்ப்பு இருக்கின்றது.

 

2. ‘பந்தாடும் எல்லைக்கு வெளியே’ (Out of his Ground) என்றால் என்ன என்பதை விவரி.

பந்தடி ஆட்டக்காரரின் முழு உடலும், கையில் பிடித்திருக்கும் பந்தாடும் மட்டையும் பந்தாடும் எல்லைக் கோட்டுக்கு (Popping crease) வெளியே இருந்தால், பந்தாடும் எல்லைக்கு வெளியே இருப்பதாகக் கருதப்படுவார்.

அவ்வாறு அவர் நிற்கும் போது, அவரது விக்கெட்டு விதிமுறைக்கேற்ப வீழ்த்தப்பட்டால் அவர் ஆட்டமிழக்கிறார்.

ஆகவே, அவர் எந்தக் காரணத்தை முன்னிட்டும், பந்து ஆட்டத்திலிருக்கும் போது, எல்லைக்கு வெளியே வராமல் இருந்துதான் ஆட வேண்டும்.

 

3. பந்தெறியால் விக்கெட் விழுதல் (Bowled) என்றால் என்ன?

பந்தெறியாளரால் எறியப்படும் பந்தானது நேராகச் சென்று விக்கெட் மீது பட்டு, விக்கெட் விழுதல்.

பந்தடி ஆட்டக்காரர் உடல்மீது அல்லது மட்டைமீது முதலில் பட்டு, அதற்குப் பிறகு விக்கெட்மீது விழுதல்.

 

ஆட்டம் இழப்பு - பந்து எறியால் விக்கெட் விழுதல்
ஆட்டம் இழப்பு – பந்து எறியால் விக்கெட் விழுதல்

 

பந்தை ஆடிய பிறகு பந்தைக் காலால் உதைத்தோ அல்லது அடித்தோ அதனால் விக்கெட் விழுதல்

மேற்கூறிய நிகழ்வுகளில் பந்தெறியால் விக்கெட் விழுந்தது என்றே கொள்ளப்படும்.

 

4. பந்தை உயரே அடித்து ‘பிடி கொடுத்தல்’ (Catch) என்பதை விளக்குக?

அடித்தாடுவோரால் (Batsman) அடிக்கப்பட்டு உயரே கிளம்பிய பந்து.

அடித்தாடுவோர் பந்தாடும் மட்டையைப் பிடித்திருக்கும் கைகளின் உறைமீது பட்டுவரும் பந்து.

 

ஆட்டம் இழப்பு - பிடி கொடுத்தல்
ஆட்டம் இழப்பு – பிடி கொடுத்தல்

 

மேற்கூறிய நிகழ்வுகளில்  தரையில் விழுவதற்குமுன் பந்து பிடிபட்டுவிட்டால், அது பிடித்தது (Catch) என்றே நடுவரால் ஏற்றுக்கொள்ளப்படும்.

பிடிக்கும்பொழுது ஒரு கையால் அல்லது இரு கைகளால் பந்தைப் பிடிக்கலாம்.

அல்லது உடலோடு சேர்த்தணைத்துக் கொண்டு பந்தைப் பிடிக்கலாம்.

அல்லது தற்செயலாக உடையில் விழுந்து சிக்கிக்கொண்டாலும், அதுவும் பந்தைப் பிடித்தது என்றே கருதப்படும்.

 

5. இப்படி உயரே வரும் பந்தைப் பிடித்திட, ஏதாவது விதிமுறைகள் இருக்கின்றனவா?

நிச்சயமாக உண்டு. அத்தகைய விதிமுறைகளை மீறாமல் அந்த ஆட்டக்காரர் பிடிக்கின்றாரா என்பதிலும் நடுவர்கள் அதிகக் கவனம் செலுத்துவார்கள்.

1. பந்தைப் பிடிக்கின்ற தடுத்தாடும் ஆட்டக்காரர் ஒருவர், தான் பந்தைப் பிடிக்கும் பொழுது ஆடுகள மைதான எல்லைக்குள்ளேதான் (கட்டாயமாக) இருக்க வேண்டும்.

2. கீழே விழுந்து பந்தைப் பிடிக்கும்போது கைகள் தரையில் இருந்தாலும், பந்தானது தரையைத் தொடாதவாறு இருக்கவேண்டும்.

3. ஒரு தடுத்தாடும் ஆட்டக்காரரின் உடையில் அவர் பிடிக்காமல் இருக்கும்பொழுதும் பந்து வந்து விழுந்தால், பந்து பிடிப்பட்டது என்று சொல்லப்படும்.

அதுபோலவே, விக்கெட் காப்பாளருடைய காலுறைகளுக்குள்ளே பந்து சென்று தேங்கிக் கொண்டாலும், பந்தைப் ‘பிடித்தது’ என்றே ஏற்றுக் கொள்ளப்படும்.

4. ஆடுகள மைதானத்தின் எல்லைக்கோட்டைக் கடந்து போகின்ற பந்தை, ஆடுகள எல்லைக்குள் நின்றுகொண்டிருக்கும்  ஆட்டக்காரர், கையை வெளியே நீட்டி பந்தைப் பிடித்துவிட்டால் அதுவும் சரி என்றே ஏற்றுக்கொள்ளப்படும்.

5. மைதானம் எந்தவிதத் தடையுமில்லாமல் (Obstruction) தான் இருக்க வேண்டும்.  முதலில் இல்லாமல் இருந்து,  ஆட்டம் தொடங்கியவுடன் ஏதாவது தடைகள் நேர்ந்து, அதனால் பந்து உயரே பிடிப்பட்டுப்போனால், அது ‘சரியானதே’ என்று ஏற்றுக்கொள்ளப்பட, அடித்தாடியவர் ஆட்டமிழக்க நேரிடும்.

மேற்கூறிய நிகழ்வுகளில் தரையைப் பந்து தொட்டதா எல்லைக்கு வெளியே சென்றதா என்பதையெல்லாம் சூழ்நிலையை நுணுகி ஆராய்ந்த பிறகே, நடுவர் தனது தீர்ப்பினை அளிப்பார்.

பந்து மட்டையிலிருந்து அடிபட்டு நேராக மேலே உயர்ந்து சென்றுவரும்போது பிடித்தலைத் தான், பிடிகொடுத்தல் என்கிறோம்.

 

6. பந்தை இருமுறை ஆடுதல் (Hit the Ball Twice) என்பது எப்படி என்று விளக்குக?.

பந்தடி ஆட்டக்காரர், பந்தெறியால் வருகிற பந்தை அடித்தாடி, அல்லது தன்னுடைய உடல் அல்லது உடையில் பட்டுவிட்ட பந்தை மீண்டும் வேண்டுமென்றே அடித்தாடினால், அதைத்தான் இருமுறை ஆடுதல் என்கிறார்கள்.

பந்தெறி மூலமாக, முதலில் அவர் பந்தை அடித்து ஆடி விடுகிறார். ஆனால் அந்தப் பந்து, அவரருகிலேயே கிடப்பதால், அதை அடித்தாட வேண்டும்.

எட்டிப் போகுமாறு அதிக தூரத்திற்கு அனுப்பிவிட வேண்டும் என்று வேண்டுமென்றே, மீண்டும் அடிப்பதானது இரண்டாவது முறையாக பந்தை அடித்தாடுகிறார் என்றே இதற்கு அர்த்தமாகும்.
இதற்குரிய தண்டனை அவர் ஆட்டமிழப்பதுதான்.

 

7. இரண்டாவது முறை பந்தைத் தொடவே கூடாதா?.

தான் அடித்தாடிய பந்தை இரண்டாவது முறை தொடலாம். அதற்கென்று உள்ள சந்தர்ப்பங்களும் உண்டு.

தான் அடித்தாடிய பந்தானது முன்மையோ பக்கவாட்டிலோ போகாமல், தான் காத்து நிற்கும் விக்கெட்டை நோக்கி வரும்பொழுது தனது விக்கெட் வீழ்த்தப்படாமல் தடுப்பதற்காக, அவர் தடுத்து நிறுத்தலாம்.

அப்படி நிறுத்தும்பொழுது தனது பந்தாடும் மட்டை அல்லது உடல் பகுதியால் வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் தனது கைகளைப் பயன்படுத்தக்கூடாது.

அடுத்ததாக, ஒருவர் முதல் முறையாக அடித்தாடிய பந்தானது, மேலே உயரத்திற்குச் சென்று கீழே வந்து தரையைத் தொடுவதற்குமுன், இரண்டாவது முறையாக அடித்தாட அனுமதி உண்டு. அது தவறில்லை. அதனால், ஆட்டமிழக்கின்ற வாய்ப்பும் இல்லை.

 

8. அவர் இரண்டு முறை பந்தாடினார் என்று எவ்வாறு தீர்மானிப்பது?

அவர் விதிகளுக்கு உட்பட்டுத்தான், இரண்டாம் முறையாகப் பந்தை அடித்தாடினாரா இல்லையா என்பதை நடுவரே தீர்மானித்து முடிவு செய்ய வேண்டும்.

இரண்டாவது தடவை அவர் அடித்தது, ‘ஓட்டம்’ எடுக்க முயல்வதற்காகவோ அல்லது தற்காப்புக்காகவோ என்பதிலிருந்துதான் அவர் கணிக்க முடியும்.

 

9.இருமுறை அடித்தாடினால், ஓட்டம் ஓடி பெற முடியுமா?

இதனால் ஓடி ‘ஓட்டம்’ எதுவும் எடுக்க முடியாது. ஆனால், ‘வீண் எறி’ (Over Throw) மூலமாக பந்து வீசப்பட்டிருக்கின்ற நிலையில் வேண்டுமானால் ‘ஓட்டம்’ எடுக்கலாம்.

 

10.இருமுறை ஆடுவதை ஏன் விதி தடை செய்கிறது?

முதல்முறை பந்தை ஆடிய உடனேயே தடுத்தாடும் ஆட்டக்காரர்கள், பந்தைத் தடுத்து நிறுத்தவோ, பிடிக்கவோ போன்ற முயற்சியில் ஈடுபட்டு விடுகின்றார்கள்.

இரண்டாவது முறையாகத் தொடர்ந்து அடித்தாடும்போது, அருகில்இருக்கும் விக்கெட் காப்பாளர் அல்லது தடுத்தாடும் ஆட்டக்காரர்கள் பந்தைப் ‘பிடித்துவிடும்’ (Catch) முயற்சியைக் கொடுத்து, அவர் உரிமையைப் பறித்துவிடுகின்றதாக ஆகிவிடுகின்றது.

அதனால் அவர் ஆட்டமிழந்து விடுகிறார். அவரது குறிப்பேட்டில், ‘இருமுறை பந்தாடியதால் ஆட்டமிழந்தார்’ என்று குறிக்கப்படும்.

அவரது விக்கெட்டை வீழ்த்தினார் என்ற பெருமை, அந்தப் பந்தை எறிந்த பந்தெறியாளருக்குக் கிடைக்காது.

அத்துடன், நாம் இதையும் நன்றாக உணர்ந்து கொள்ளவேண்டும். ஒரு ஆட்டக்காரர், பந்தை அடித்தாடிய பிறகு, எதிர்க்குழுவினர் எந்தவிதமான வேண்டுகோளும் விடுக்காத நேரத்தில்,  பந்தாடும் மட்டையைக் கொண்டு, பந்தை அவர்கள் பக்கமாகத் தள்ளிவிட்டால்  விதியை மீறிய குற்றமாகிறது.

ஆகவே, முடிந்தவரை முதலில் தான் அடித்தாடிய பந்தைத் தடுத்து தொடர்ந்தாற் போல் அடித்தாடக் கூடாது என்ற வரைமுறையுடன் விளையாட வேண்டும்.

 

11. தடுத்தாடுவோரைத் தடை செய்வது என்பது (Obstructing The Field) எவ்வாறு என்று விளக்கிக் கூறுக?.

தான் அடித்தாடிய பந்தை, தடுத்தாடும் குழுவினர் தடுக்கவோ, பிடிக்கவோ முயற்சிக்கும்போது, வேண்டுமென்றே அவரது முயற்சித்தடுத்தலை இரண்டு பந்தடிஆட்டக்காரர்களில் யார் செய்தாலும், அவர் ஆட்டம் இழப்பார்.

இந்த முடிவை நடுவரேதான் தீர்மானித்து எடுக்கின்றார்.

வேண்டுமென்றே இந்தத் தவறு இழைக்கப்பட்டதா இல்லையா என்பது நடுவரின் முடிவுக்கே விடப்பட்டுவிடுகிறது.

ஆனால், ஓட்டம் எடுக்கும் முயற்சியில் எதிர் பாராதவிதமாக மோதியோ அல்லது தடை செய்யக் காரணமாக இருந்தால் அது தவறல்ல என்றே கருதி ஏற்றுக் கொள்ளப்படும்.

 

12. இதன்மூலம் ஆட்டமிழக்கின்ற ஆட்டக்காரர் எவ்வாறு குறிப்பேட்டில் குறிக்கப்படுகின்றார்?.

‘தடுத்தாடுவோரை தடைசெய்தார்’ என்றே குறிப்பேட்டில் குறிக்கப்படுகின்றார். இவரை ஆட்டமிழக்கச் செய்ததாக உள்ள பெருமை, அந்தப் பந்தை எறிந்த பந்தெறியாளருக்குக் கிடைக்காது.

 

13. தானே விக்கெட்டை வீழ்த்திக் கொள்ளுதல் (Hit Wicket) என்றால் என்ன என்று விவரி?

 

தானே விக்கெட்டை வீழ்த்திக் கொள்ளுதல்
தானே விக்கெட்டை வீழ்த்திக் கொள்ளுதல்

 

பந்தடி ஆட்டக்காரர், தான் அடித்தாட முயலும்நேரத்தில் தனது பந்தாடும் மட்டையால் மோதிதான் காத்துநிற்கும் விக்கெட் விழுந்துவிடும்படி ஆடினால், அவர் தானே தனது விக்கெட்டை வீழ்த்திக்கொண்டார் என்றே கூறப்படுகின்றார்.

 

14. அதற்குரிய சூழ்நிலைகள் எவ்வாறு அமைகின்றன என்பதை கூறுக?

தான் முதன்முறையாக அடித்த பந்து தன் விக்கெட்டை நோக்கிவரும் போது, இரண்டாவது முறையாக அடித்தாடி அதைத் தடுக்க முயற்சிக்கின்ற சமயத்தில், தனது விக்கெட்டில் மோதி வீழ்த்திவிடலாம்.

பந்தை அடித்து விளையாடுகின்ற சமயத்தில் அவரது குல்லாயோ அல்லது தொப்பியோ அல்லது அவரது பந்தாடும் மட்டையின் ஒரு பகுதியோ விக்கெட்டில் பட்டு, விக்கெட்டை வீழ்த்திவிடலாம்.
அப்பொழுது அவர் ஆட்டமிழக்கின்றார்.

 

15. ஓட்டம் எடுக்கும் முயற்சியின் போது அவர் விக்கெட்டைத் தள்ளிவிடுகின்றார். அப்பொழுது அவர் ஆட்டமிழக்க வேண்டியதுதானே?

இல்லை, ஓட்டம் எடுக்கும் முயற்சியில் அவரது பந்தாடும் மட்டை, அல்லது உடை, அல்லது உடலின் ஏதாவது ஒரு பகுதி, விக்கெட்டில் பட்டு வீழ்த்தினாலும், அவர் ஆட்டமிழக்க வேண்டிய அவசியமில்லை.
அதை ஏற்றுக்கொள்ளவேண்டியது சரி என்றே விதிமுறைகள் கூறுகின்றன.

 

16. பந்தைக் கையால் தொட்டாடுதல் (Handled the Ball) என்றால் என்ன?

பந்தாடும் மட்டையைப் பிடித்திருக்கும் கையானது, மட்டையின் ஒரு பகுதியாகத் தான் கருதப்படுகிறது.

தான் முதன்முறையாக அடித்தாடிய பந்தை, இரண்டாவது முறையாகத் தொடவோ அல்லது அடித்தாடவோ கூடாது என்று நமக்கு நன்கு தெரியும்.

 

பந்தைக் கையால் தொட்டாடுதல்
பந்தைக் கையால் தொட்டாடுதல்

 

தானே இரண்டாவது முறையாக ஆடுவது போலவே. பந்தைக் கையால் தொட்டாலும் அது குற்றமாகும். அதற்குரிய தண்டனை, ஆட்டமிழந்து வெளியேறுவதுதான்.

ஆனால், எதிர்க்குழுவினர் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொண்டால், அவர் பந்தை அவர்கள் பக்கம் தள்ளி விடலாம்.

பந்தைக் கையால் தொட்டாடிதான் இவர் ஆட்டமிழந்தார் என்றே குறிப்பேட்டில் குறித்து வைக்கப்படும்.

ஆனால் இவரை ஆட்டமிழக்கச் செய்து விக்கெட்டை வீழ்த்தினார் என்ற பெருமை, அந்தப் பந்தை எறிந்த பந்தெறியாளருக்குக் கிடைக்காது.

 

17. ‘விக்கெட் முன்னே கால் வைத்திருத்தல்’ (L.B.W) மூலம் ஆட்டம் இழப்பு என்பது பற்றி விளக்கிக் கூறுக?

பந்தெறியும் விக்கெட்டிலிருந்து, தான் தடுத்தாடும் விக்கெட்டுக்கு நேராக இருந்து ஆடும் போது,

தனது கையிலோ,  பந்தாடும் மட்டையிலோ முதலில் பந்துபடாமல், பந்தானது, இணைப்பான்களுக்கு (Bails) சற்று முன்னே வரும்போது, அதனை குறுக்கிட்டு இடையிலே தடுத்தல்.

 

ஆட்டம் இழப்பு - விக்கெட் முன்னே கால் வைத்திருத்தல்
ஆட்டம் இழப்பு – விக்கெட் முன்னே கால் வைத்திருத்தல்

 

ஒரு விக்கெட்டிலிருந்து இன்னொரு விக்கெட்டுக்கு நேர்க்கோட்டு அமைப்பில் (Straight Line) நேராக எறியப்பட்ட அந்தப் பந்து நேராக விக்கெட்டை நோக்கிச் சென்றிருக்கும்.

அல்லது ஆடுவோரின் வலப்புறத்தில் (off side) விழுந்த பந்தானது அவரது விக்கெட்டை நோக்கி வந்திருக்கும்.

அதனால் விக்கெட் விழுந்திருக்கும் என்று நடுவர் கருதினால், அபிப்ராயப்பட்டால், விக்கெட்டின் முன்னே கால் வைத்திருந்தார் என்ற குற்றத்திற்கு அந்தப் பந்தடி ஆட்டக்காரர் ஆளாகின்றார்.

 

18. நடுவர் அந்த முடிவை எவ்வாறு எடுக்கிறார் என்று சற்று விளக்கமாகக் கூற முடியுமா?

நடுவர் தனது முடிவினை எடுப்பதற்கு முன்னரே நான்கு கேள்விகளையும், அதற்கான விடைகளையும்  அதன்இறுதியில் ஏற்படும் முடிவினைக் குறித்துத் திருப்தியடைந்து, விக்கெட்டின் முன்னே கால்இருந்தது என்றுகூறி, தன் முடிவைத்தெரிவிக்கிறார்.

அந்தக் கேள்விகள் வருமாறு :

1. அந்தப் பந்து நேரே சென்று விக்கெட்டை வீழ்த்தியிருக்க முடியுமா?

2. ஒரு விக்கெட்டுக்கும் இன்னொரு விக்கெட்டுக்கும் நேராகவே அந்தப் பந்து விழுந்ததா (Pitch) அல்லது அவரது வலப்புறத்தில் விழுந்து (Off side) விக்கெட்டை நோக்கி வந்ததா?. நேராக வந்து பந்தின் விக்கெட் வழியை மறிக்கும் நிலையில் குறுக்காக அவர் நின்று கொண்டிருந்தாரா?.

3. அடித்தாடுவோரின் கையைத் தவிர, மற்ற உடலின் ஒரு பகுதி அல்லது உடை ஏதாவது முதலில் பந்தைத் தடுத்ததா?.

4. பந்தானது விக்கெட்டுக்கும் விக்கெட்டுக்கும் நேர்கோட்டின் அமைப்பில் விழுந்து எழும்பி வரும்போது, பந்துக்கும் விக்கெட்டுக்கும் இடையில் அவரது உடலோ அல்லது உடைப் பகுதியோ இருந்ததா?

இத்தகைய கேள்விகளுக்கு எல்லாம் ‘ஆமாம்’ என்ற விடை எழுந்தால்தான், உடனே நடுவரால் அந்த முடிவுக்கு வரமுடியும்.

ஆகவேதான், பந்தினை ஊன்றி உன்னிப்பாகக் கவனித்து ஆடவேண்டும். என்றாலும், நடுவரின் இந்த முடிவு அவரது ஆழ்ந்த கணிப்பின் கீழ்தான் அடங்கியிருக்கிறது.

 

19. ஓட்டத்தில் ஆட்டமிழத்தல் (Run Out) என்பது எவ்வாறு முடியும்?

பந்தெறிபவர் விதிகளுக்கு உரிய முறையில் சரியாகப் பந்தை எறிகிறார்.

பந்தடி ஆட்டக்காரர் அதை அடித்தாடிவிடுகிறார்.

பந்து அப்பால் போனதும். இரண்டு பந்தடி ஆட்டக்காரர்களும், ஓட்டம் எடுக்கும் முயற்சியில், எதிரெதிர் விக்கெட்டை நோக்கி ஓடுகின்றார்கள்.

 

ஓட்டத்தில் ஆட்டமிழத்தல்
ஓட்டத்தில் ஆட்டமிழத்தல்

 

அதாவது பந்து ஆடப்பட்டிருக்கும் நேரத்தில் அவர்கள் ஓட்டம் எடுக்கின்ற முயற்சியில் அடித்தாடும் எல்லைக் கோட்டுக்கு அப்பால் (Popping crease) இருக்கும்போது அவர் விக்கெட் வீழ்த்தப்பட்டால், விக்கெட்டுக்குரியவர் ஆட்டமிழந்து வெளியேற வேண்டும்.

இதில் ஒரு சில முறைகளை உன்னிப்பாக் கவனிக்க வேண்டும்.
ஓட்டத்திற்காக ஓடிக்கொண்டிருக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்துவிட்டால், எதிரிலுள்ள விக்கெட்டு அவருக்குரியதாகும்.

அவ்வாறு அவர் நோக்கி ஓடுகின்ற விக்கெட்டானது அவர் அடித்தாடும் எல்லைக் கோட்டைத் தொடுவதற்கு முன் தடுத்தாடுவோரால் வீழ்த்தப்பட்டால், அவர் தான் ஆட்டமிழக்க வேண்டும்.

இருவரும் ஓட்ட முயற்சியில் ஒருவரை ஒருவர் கடக்காத பொழுது, அது அவரவர் விக்கெட்டாகத்தான் இருக்கும். ஆக, விக்கெட்டுக்கு அருகாமையில் எந்த பந்தடி ஆட்டக்காரர் இருக்கிறாரோ அந்த விக்கெட் விழுந்தால், அவர்தான் ஆட்டமிழக்கவேண்டும்.

இவர் தனது பந்தாடும் எல்லைக்கு வெளியே வந்து நின்றுகொண்டிருந்தாலும், இவரது விக்கெட் வீழ்த்தப்பட்டால், அவர் ஆட்டமிழப்பார்.

பந்தெறியின் மூலமாக விக்கெட்காப்பாளரால் விக்கெட் வீழ்த்தப்பட வேண்டும்.  பந்தை அடித்தாடிய ஆட்டக்காரர், ஓட்டம் எடுக்க முடியாத பொழுதும் ‘முறையிலா பந்தெறி’ (No Ball) என்று கூறப்பட்டிருக்கும் பொழுதும், அவரை ஆட்டமிழக்கச் செய்ய முடியாது.

 

20. ஒரு பந்தடி ஆட்டக்காரர் அடித்தாடிய பந்தானது, எதிரிலுள்ள விக்கெட்டைப் போய் வீழ்த்திவிடுகிறது. எதிரிலுள்ள அவரது பாங்கரான மற்றொரு பந்தடி ஆட்டக்காரர் ஆட்டமிழக்க வேண்டுமா?

அப்படி ஆட்டமிழக்க வேண்டிய அவசியமில்லை. அவர் பந்தை ஆடிய பிறகு, இருவரும் ஓட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும், அந்த நேரத்தில் அந்த பந்து விக்கெட்டை வீழ்த்தினாலும், இருவரும் ஆட்டமிழக்க வேண்டிய நிலைமை நேராது.

ஏனெனில், அவர் அடித்தாடிய பந்தானது விக்கெட்டைப்போய் தொட்டு வீழ்த்துவதற்கு முன், தடுத்தாடும் குழுவிலுள்ள ஒருவரால் தொடப்பட்டிருக்க வேண்டும்.

அடிப்பட்ட பந்து தானேபோய் விக்கெட்டை மோதி வீழ்த்தினால், அதற்கு யாரும் பொறுப்பல்ல. தடுத்தாடும் குழுவினர் பந்தை வீசி, எறிந்திருக்க வேண்டும். ஓட்டத்தில் ஆட்டமிழத்தல் என்பதற்கு மேலே கூறிய சந்தர்ப்பங்களே பொருந்தும்.

 

21. விக்கெட்டை அடித்து வீழ்த்துதல் (Stumped) என்பது எவ்வாறு நிகழும்?.

முறையிலா பந்தெறி (No Ball) இல்லாமல் ஒரு பந்தெறியாளர் எறிகின்ற பந்தை, அடித்தாடும் ஆட்டக்காரர் அடிக்கும் முயற்சியில் அடிக்காமல் தவறிப்போய் தனது அடித்தாடும் எல்லைக்கோட்டுக்கு வெளியே வந்துவிடுகிறார்.

 

ஆட்டம் இழப்பு - விக்கெட்டை அடித்து வீழ்த்துதல்
ஆட்டம் இழப்பு – விக்கெட்டை அடித்து வீழ்த்துதல்

 

அதாவது அவர் அடிக்க எடுத்துக் கொண்ட வேகத்தால் குறிதவறி விடவே சமநிலை இழந்து, எல்லையை விட்டு வெளியே வந்து விடுகிறார். ஆனால், ஓட்டம் எடுக்கும் முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

விக்கெட் காப்பாளர், அதே சமயத்தில் குறிதவறி அடிபடாது தன்பக்கம் வந்தப் பந்தைப்பிடித்து, தனது குழுவினரில் யாருடைய உதவியுமில்லாமல், விக்கெட்டைத்தட்டி வீழ்த்திவிட்டால், அதுதான் விக்கெட்டை அடித்து வீழ்த்துதல் என்பதாகும்.

எல்லையைவிட்டு வெளியே வந்து, விக்கெட்டை இழந்துநிற்கும் அந்த ஆட்டக்காரர் இயற்கையாகவே ஆட்டமிழந்து மைதானத்தைவிட்டு வெளியேற வேண்டும்.

அடித்தாடுவோர் உடல் அல்லது பந்தாடும் மட்டை இவற்றைத் தொட்டிருக்கும் பந்தைப் பிடித்த விக்கெட் காப்பாளர், விக்கெட்டிற்குமுன் கொண்டு வந்து, விக்கெட்டை வீழ்த்தும் பணியைச் செய்யலாம்.

 

22. விக்கெட் காப்பாளர் கையில் படாத பந்து, அவர்மீது மோதி திரும்பி வந்து விக்கெட்டை வீழ்த்திவிட்டால், அதை எப்படி தீர்மானிக்க வேண்டும்?.

விக்கெட் காப்பாளர் கையில் பந்தைப் பிடித்துத்தான் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பதில்லை.

காப்பாளரின் காலிலோ, உடலிலோ அல்லது உடையிலோ பட்டு எதிர்த்துப் போகும் பந்தானது, விக்கெட்டை வீழ்த்தினாலும், அதுவும் சரியானதே. விக்கெட்டுக்குரிய ஆட்டக்காரர் ஆட்டமிழந்து விடுவார்.

 

23. இவ்வாறு ஆடுகின்ற விக்கெட் காப்பாளர், எங்கு நின்று ஆட வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் இருக்கின்றனவா?

எங்கு நிற்கவேண்டும் என்றே விதிமுறையும் இருக்கிறது.
விக்கெட் காப்பாளர், அடித்தாடும் ஆட்டக்காரரின் பின்புறமுள்ள விக்கெட்டின் பின்புறமிருந்து ஆடவேண்டும் என்பதே விதிமுறையாகும்.

அவர், தன் குழு பந்தெறியாளர் எறிகின்ற பந்து அடித்தாடுபவரைக் கடந்து, விக்கெட்டில் படாமல் போகும்போது அதைப் பிடித்துக் கொள்ள‌வும்.

அவரது மட்டையில் பட்டு வருகின்ற பந்தைப் பிடித்துக் கொள்ள‌வும் (Catch),

அவர் அடித்தாடும் எல்லைக்கோட்டினைக் கடந்து போய் நின்றால் பந்தோடு விக்கெட்டினை வீழ்த்தவும்

மேற்கூறிய நிகழ்வுகளுக்காக அவர் அங்கே நின்று கொண்டிருக்கிறார்.

 

24. பந்தெறியால் வருகின்ற பந்தை விக்கெட்டுக்கு முன்புறம் கை நீட்டிப் பிடிக்கலாமா?

கூடவே கூடாது. பந்தெறியாளர் எறிகின்ற பந்தானது, அடித்தாடுபவரின் பந்தாடும் மட்டை அல்லது அவரது உடலின் ஏதாவது ஒரு பகுதியைத் தொடும்வரை.

பட்டோ படாமலோ விக்கெட்டைக் கடக்கும்வரை.

அல்லது அடித்தாடுபவர் ஓட்டம் எடுக்க முயற்சிக்கும்வரை.

மேற்கூறிய நிகழ்வுகளில்தான் காக்கின்ற விக்கெட்டின் பின் புறத்திலேதான் நிற்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும், விக்கெட்டின் முன்புறம் கையை நீட்டிப் பந்தைப் பிடிக்கக்கூடாது.

 

25. இந்த விதியை மீறி, விக்கெட் காப்பாளர் நடந்து கொண்டால்?

அந்த அடித்தாடும் ஆட்டக்காரர் ஆட்டமிழக்க மாட்டார். மீண்டும் ஆட்டத்தைத் தொடர்ந்து ஆடுமாறு நடுவர் ஆணையிடுவார்.

பந்தைக் கையால் ஆடுதல், இருமுறை ஆடுதல், தடுத்தாடும் ஆட்டக்காரரை ஆடவிடாமல் தடுத்தல், ஓட்டத்திற்கிடையில் ஆட்டமிழத்தல் என்ற குற்றம் இழைத்த அடித்தாடும் ஆட்டக்காரர், ஆட்டம் இழக்கும் வாய்ப்பினைப் பெறுகிறார்.

அடித்தாடும் ஆட்டக்காரர் தனக்குரிய பந்தை அடித்தாடுகின்ற உரிமையை முழுமையாகப் பெறுவது.

தான் காத்து விளையாடுகின்ற விக்கெட்டை, விக்கெட் காப்பாளரின் இடையீடின்றிக் காத்துக் கொள்வது .

மேற்கூறிய லாபங்களை இந்த விதியால் அடித்தாடும் ஆட்டக்காரர் பெறுகிறார்.

 

26. ஒரு தடுத்தாடும் ஆட்டக்காரர் (Fieldsman) தனது தொப்பியால் பந்தைத் தேக்கி நிறுத்துகிறார். அது சரியான முறைதானே?

சரியான முறை அல்ல. அது கடுமையான தவறாகும், அதற்குத் தருகின்ற தண்டனையும் அவ்வாறே அமைந்திருக்கிறது.

ஒரு தடுத்தாடும் ஆட்டக்காரர், தன் உடலின் எந்தப் பகுதியினாலாவது பந்தைத் தடுக்கலாம். தடுத்து நிறுத்தலாம்.

ஆனால், வேண்டுமென்றே தனது தொப்பி போன்றவற்றைப் பயன்படுத்தித் தடுத்தாடினால் அதனால் அடித்தாடிய குழுவிற்கு 5 ஓட்டங்களை நடுவர் வழங்குவார்.

 

27. இந்த விதியை இன்னும் கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்கள்?

அடித்தாடும் ஆட்டக்காரர் அந்தப்பந்தை ஆடி, அவர் தடுப்பதற்குள் ஓட்டம் அல்லது ஓட்டங்கள் எடுத்திருந்தாலுங்கூட, அந்த ஓட்டங்களின் எண்ணிக்கையுடன் தண்டனையாகத் தரப்படும் 5 ஓட்டங்களும் சேர்த்து அவரது குறிப்பேட்டில் மொத்தமாகக் குறிக்கப்படும்.

பந்தை அடித்தாடி வேறு எந்த ஓட்டமும் அதில் எடுக்காமல் இருந்தால், இந்த 5 ஓட்டங்கள் மட்டுமே அவர் கணக்கில் குறிக்கப்படும்.

 

28. அவர் அடித்தாடாமல் போன பந்தை, தடுத்தாடுவோர் தவறான முறையில் தடுத்தால், அப்பொழுது எப்படி குறிக்க முடியும்?

அவர் பந்தை அடித்தாடியிருந்தால்தான், 5 ஓட்டங்கள் அவர் கணக்கில் சேரும். அடித்தாடாத நிலையில், அந்தப் பந்து என்ன விதமாக எறியப்பட்டு ஆடப்பட்டிருக்கிறதோ, அதற்கேற்றவாறு அந்தப் பெயரில் குறிக்கப்படும். அதாவது பொய் ஓட்டம், அல்லது மெய்படு ஓட்டம் (Bye & Leg Bye) அல்லது முறையிலா பந்தெறி (No Ball) அல்லது எட்டாப் பந்தெறி (Wide Ball) என்று குறிக்கப்படும்.

 

29.ஓட்டங்களைப் பெற்ற பிறகு, அடித்தாடும் ஆட்டக்காரர் இருவரும் தாங்கள் நிற்கும் விக்கெட் பகுதிகளை மாற்றிக் கொள்ளலாமா?

மாற்றிக் கொள்ள வேண்டாம். முன் இருந்தது போலவே நின்று ஆட்டத்தைத் தொடரலாம். தடுத்தாடியவர் இழைத்த தவறுக்கு தண்டனையாக 5 ஓட்டங்கள் வந்தனவே தவிர, ஆட்டம் முன் போலவேதான் தொடரும்.

 

கிரிக்கெட் விளையாட்டில் கிரிக்கெட்டில் ஆட்டம் இழப்பு (அவுட் ) வகைகள் பற்றிய இந்தத் தகவல்கள், கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்வி பதில் என்ற புத்தகத்தில் இடம் பெற்றவை.

திரு.எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள் எழுதி, ராஜ்மோகன் பதிப்பகம் பதிப்பித்த அந்த நூல், நாட்டுடைமையாக்கப்பட்ட ஒரு சிறந்த‌ நூல் ஆகும்.

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.