ஆட்டுக் கிடை போடுதல் என்பது பழங்காலத்தில் மக்கள் கடைப்பிடித்த இயற்கை விவசாய முறைகளில் ஒன்றாகும்.
மனிதன் ஓரிடத்தில் தங்கி நாகரிகம் உருவான காலத்தில் இருந்து ஆடு வளர்த்தல் நடைமுறைப் படுத்தப்பட்டது.
ஆட்டின் கழிவுகளான சாணம், சிறுநீர் ஆகியவை இயற்கை உரங்களாக பயன்பட்டு வருகின்றன.
இன்றைக்கும் பெரும்பாலான விளைநிலங்களில் ஆட்டின் கழிவுப் பொருட்கள் உரத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.
கிடை போடுதல் என்பது நேரடியாகவும், உடனடியாகவும் நிலத்திற்கு உரமிடும் முறையாகும்.
கிடை போடுதல்
கிடை போடுதல் என்பது விளைநிலங்களில் ஆடுகளையோ, மாடுகளையோ இரவில் அடைத்து வைத்து அவற்றின் கழிவுப்பொருட்களான சாணம் மற்றும் சிறுநீரினை உரங்களாக மாற்றுவது ஆகும்.
இதனை பழங்காலத்தில் மந்தை அடைத்தல் என்று குறிப்பிட்டனர். கிடை போடுதலை பட்டி அடைத்தல் என்றும் கூறுவர். ஆட்டுக் கிடைபோடுபவர்கள் கீதாரிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
கிடை போடுதல் பொதுவாக விளைச்சல் காலம் முடிந்து அடுத்த பயிர் செய்யும் காலத்திற்கு இடைப்பட்ட காலத்தில் போடப்படுகிறது.
குறிப்பாக ஜீன், ஜீலை மாதங்களில் தமிழ்நாட்டில் கிடைபோடும் பழக்கம் பின்பற்றப்படுகிறது. குறைந்தபட்சம் இரண்டாண்டுக்கு ஒருமுறை கிடை போடப்படுகிறது.
ஆட்டுக் கிடை இட்டால் அந்தாண்டே பலன். மாட்டுக் கிடை இட்டால் மறுஆண்டு பலன் என்பது பழமொழி.
ஏனெனில் ஆடானது இலை, தழைகளை அதிகமாக உண்பதால் அதனுடைய கழிவுகள் உடனடியாக உரமாக மாற்றப்பட்டு பலனளிக்கிறது.
மாடானது அடர்தீவனம், வைக்கோல் உள்ளிட்டவைகளை அதிகமாக உண்பதால் சிறிது நாள் கழித்து பலனளிக்கிறது.
மேலும் ஆட்டுஉரத்தில் நார்ச்சத்து குறைவு. எனவே அதனை நேரடியாக உரமாகப் பயன்படுத்தலாம். மாட்டுச் சாணத்தில் நார்ச்சத்து அதிகம்.
ஆதலால் அதனை பாதி மட்கச் செய்து பின்புதான் உரமாகப் பயன்படுத்த வேண்டும். எனவேதான் ஆட்டுக் கிடை போடும் வழக்கம் அதிகமாக உள்ளது.
ஓர் ஆடானது ஆண்டிற்கு 500 முதல் 700 கிலோ வரை எரு கொடுக்கும். சுமார் 2000 ஆடுகளை ஒருநாள் இரவு ஒரு ஏக்கர் நிலத்தில் தங்க வைத்தால் அந்த இடத்திற்குத் தேவையான எரு கிடைக்கும்.
ஆடுகள் சின்னஞ்சிறு விதைகளையும் நன்கு செரித்துவிடும். எனவே இதனை உரமாகப் பயன்படுத்தும்போது களைச் செடிகள் அவ்வளவாக முளைப்பதில்லை. மேலும் ஆட்டு சிறுநீரானது களைச் செடிகள் முளைப்பதை தடைசெய்துவிடுகிறது.
ஆட்டுஎருவில் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான நைட்ரஜன் (தழைச்சத்து), பாஸ்பரஸ் (மணிச்சத்து), பொட்டாஷ் (சாம்பல் சத்து), சுண்ணாம்புச்சத்து, நுண்ணூட்டச்சத்து ஆகியவை உள்ளன.
ஆட்டுஎருவில் உள்ள 30 சதவீத ஊட்டச்சத்து முதல்பயிருக்கும், 70 சதவீத ஊட்டச்சத்து இரண்டாவது பயிருக்கும் கிடைக்கிறது. ஆட்டுசிறுநீரிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்து முழுவதும் முதல் பயிருக்கு உடனடியாக கிடைக்கும்.
ஆட்டுக் கிடை போடுவதால் கிடைக்கும் நன்மைகள்
ஆட்டுக் கிடை போடுவதால் நிலத்திற்கும், பயிர் விளைச்சலுக்கும், அப்பயிரினை உண்பதால் உண்பவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன.
ஆட்டுக்கிடை போடுவதால் மண்ணின் நீர்பிடிப்புத்திறன், காற்றோட்டம், மண்ணின் அடர்வு, மண்ணின் தன்மை ஆகியவை அதிகரிக்கின்றன.
உவர் மற்றும் களர் நிலத்தில் ஆட்டுக் கிடை போடுவதால் மண்ணின் வேதியியல் பண்புகள் மேம்படுத்தப்பட்டு மண்வளம் அதிகரிக்கிறது.
மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் பாதுகாக்கப்படுவதுடன் அதன் செயல்பாடுகள் அதிகமாகின்றன.
நீண்டநாளுக்கு வேளாண்மை செய்வதற்கு ஏதுவாக மண்வளம் செழிக்கிறது.
குறைந்த செலவில் பயிருக்குத் தேவையான சத்துகள் சரியான அளவு மற்றும் விகிதத்தில் கிடைக்கின்றது.
பயிர்கள் எல்லாம் ஒரே சீராக வளரும்.
பயிரின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பயிரில் விளைச்சல் அதிகரிக்கும்.
காய், பழம், பூ, தானியங்கள் ஆகியவற்றின் நிறம், சுவை, தரம் அதிகரிக்கும்.
விளைநிலங்களுக்கு உரமிடும் செலவு மிச்சமாகிறது.
களைகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன. சத்துக்களும் உடனடியாக பயிருக்கு கிடைக்கின்றது.
இது இயற்கை உரம் ஆதலால் சுற்றுச்சூழலுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
உரத்திற்கான செலவும் குறைவு. மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படுவதில்லை.
நன்மைகள் மிகுந்த சுற்றுசூழலைப் பாதிக்காத ஆட்டுக் கிடை இட்டு வளமான நிலத்தை உருவாக்கி நலமான வாழ்வு வாழ்வோம்.