ஆட்டுப்பால் – இரண்டாவது தாய்ப்பால்

ஆட்டுப்பால் என்றவுடன் எனக்கு நமது தேசப்பிதா காந்தியடிகளே நினைவிற்கு வருவார். ஏனெனில் அவர் ஆட்டுப்பாலையும், நிலக்கடலையையும் தனது உணவாக உண்டதாக படித்ததுண்டு.

ஆட்டுப்பால் உடலை வலுவாக்கும். மாட்டுப்பாலைவிட எளிதில் சீரணமாகும்.

இங்கு ஆட்டுப்பால் எனக் குறிப்பிடப்படுவது வெள்ளாட்டுப் பாலாகும்.

 

வீடு திரும்பும் ஆடுகள்
வீடு திரும்பும் ஆடுகள்

 

தாய்பாலுக்கு இணையான சத்துக்களைக் கொண்டு, தாய்பாலுக்கு அடுத்த சிறந்த உணவாக ஆட்டுப்பால் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 

முன்பு கிராமப்புறங்களில் வெள்ளாடுகள் அதிகம் வளர்க்கப்பட்டன. அதிலிருந்து பாலானது பெறப்பட்டு கிராம மக்களால் அருந்தப்பட்டது. தற்போது நகரமயமாகி விட்டதால் நம்மில் பலருக்கு ஆட்டுப்பால் பற்றி அறிந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

ஆட்டுபாலானது உலக மொத்த பால் உற்பத்தியில் 2 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது.

ஆட்டுப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

ஆட்டுப்பாலில் விட்டமின்கள் ஏ, பி2(ரிபோஃப்ளோவின்), சி, டி ஆகியவை காணப்படுகின்றன.

மேலும் இதில் தாதுஉப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், செம்புச்சத்து, துத்தநாகம், செலீனியம் உள்ளிடவைகள் உள்ளன.

இதில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, இயற்கை சர்க்கரை ஆகியவையும் உள்ளன.

ஆட்டுப்பாலின் மருத்துவப்பண்புகள்

வலுவான எலும்புகளைப் பெற

ஆட்டுப்பாலானது நமது உடலுக்குத் தேவையான தினசரி கால்சியத்தின் அளவில் 33 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது. மேலும் இதில் பாஸ்பரசும் அதிகளவு உள்ளது.

இதில் உள்ள விட்டமின் டி-யானது உடல் கால்சியத்தை உறிஞ்சுவதில் ஊக்குவித்து எலும்புகளை வலுவடையச் செய்கிறது. எனவே ஆட்டுப்பாலை உட்கொண்டு வலுவான எலும்புகளைப் பெறலாம்.

மேலும் இப்பாலில் காணப்படும் தனித்துவமான புரதமானது ஆஸ்டியோபோரோஸிஸ் உள்ளிட்ட எலும்பு பாதிப்பு நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

எதிர்ப்பு அழற்சி பண்புகள்

ஆட்டுப்பாலில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்பானது அழற்சியால் குடல் பாதிப்படைவதை தடைசெய்கிறது. ஒலிஜோசாசார்ட்ஸ் என்ற தனித்துவமான என்சைமே அழற்சி குடல் நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. மேலும் இந்த என்சைம் குடல் வீக்கத்தையும் குறைக்கிறது. எனவே ஆட்டுப்பாலை உட்கொண்டு எதிர்ப்பு அழற்சி பண்புகளைப் பெறலாம்.

நல்ல செரிமானத்திற்கு

ஆட்டுப்பாலானது சிறிய கொழுப்பு உருண்டைகளைக் கொண்டுள்ளது. எனவே இது எளிதில் செரிமானம் அடைகிறது. குடலில் இப்பாலானது மிருதுவான தயிராக மாற்றப்பட்டு எளிதாக செரிமானம் ஆகிறது.

இதனால் வயிற்று வலி, வயிறு பொருமல் ஆகியவை ஏற்படுவதில்லை. மேலும் இப்பாலில் லாக்டோஸின் அளவு குறைவாகவே இருப்பதால் செரிமானம் எளிதாக நடைபெறுகிறது. எனவே ஆட்டுப்பாலை உண்டு நல்ல செரிமானத்தைப் பெறலாம்.

இதய நலத்திற்கு

ஆட்டுபாலானது நடுத்தர சங்கிலி அமைப்பினைக் கொண்ட கொழுப்பு அமிலங்களை அதிகம் கொண்டுள்ளது. இந்த நடுத்தர கொழுப்பு அமிலங்கள் உடலில் கொழுப்புக்களாக சேகரமாவதில்லை.

இவை உடனே எரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. எனவே உடலில் கொலஸ்ட்ராலின் அளவானது அதிகரிக்கப்படுவதில்லை. மேலும் ஆட்டுப்பாலில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத்தை சீராக இயங்க வைக்கிறது.

எனவே ஆட்டுப்பாலினை உண்டு பக்கவாதம், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு உள்ளிட்ட இதய நோய்களிலிருந்து இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கலாம்.

சீரான உடல்வளர்சிதை மாற்றத்தினைப் பெற

ஆட்டுப்பாலில் உள்ள நுண்ஊட்டச்சத்துக்கள் சீரான உடல்வளர்ச்சிதை மாற்றத்திற்கு வழிவகை செய்கின்றன. இப்பாலில் உள்ள விட்டமின் கால்சியம், விட்டமின் பி, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுஉப்புக்கள் சீரான வளர்ச்சிசிதை மாற்றதை ஏற்படுத்துகிறது.

ஆட்டுப்பாலினை உண்ணும்போது உடலானது இரும்புச்சத்து, செம்புச்சத்து உள்ளிட்டவைகளை உறிஞ்ச உதவி செய்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் அனீமியா உள்ளிட்ட நோய்களைத் தடுக்கவும் இப்பால் உதவுகிறது.

மேலும் தாய்பாலில் உள்ள ஏ2 கேசின் புரதம் ஆட்டுப்பாலில் காணப்படுகிறது. இதனால் ஆட்டுப்பாலை உண்டு சீரான உடல் வளர்ச்சிதை மாற்றத்தைப் பெறலாம்.

நோய்எதிர்ப்பு பண்பினை பெற

ஆட்டுப்பாலில் குறிப்பிட்டளவு செலீனியம் உள்ளது. இத்தாதுஉப்பு உடலில் உள்ள நோய்எதிர்ப்பானது சரிவர செயல்பட தூண்டுகிறது. இதனால் நமது உடலானது நோயிலிருந்து காப்பாற்றப்படுகிறது. எனவே ஆட்டுப்பாலை உண்டு நோய்எதிர்ப்பு பண்பினைப் பெறலாம்.

ஆரோக்கியமான வளர்ச்சிக்கு

ஆட்டுப்பாலானது அதிக அளவு புரதச்சத்தினைக் கொண்டுள்ளது. புரதச்சத்தானது செல்கள், திசுக்கள், எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது.

நிலையான புரதத்தைப் பெறுவதன் மூலம் நாம் முறையான வளர்ச்சிதை மாற்றத்தைப் பெற்று ஆரோக்கியான வளர்ச்சியைப் பெறலாம்.

மூளையின் ஆரோக்கியத்திற்கு

ஆட்டுப்பாலில் காணப்படும் லிப்பிடுகள் நம்மிடையே உண்டாகும் பதட்டத்தைக் குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் இப்பாலில் காணப்படும் இணைக்கப்பட்ட லீனிலிய அமிலமானது எல்லா வயதினரிடமும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே ஆட்டுப்பாலை உட்கொண்டு மூளையின் ஆரோக்கியத்தைப் பேணலாம்.

ஆரோக்கிய சருமத்தைப் பெற

ஆட்டுப்பாலில் காணப்படும் கொழுப்பு அமிலங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இது காரதன்மை கொண்டதாக இருப்பதால் சருமத்தை எரிச்சலூட்டுவதில்லை.

மேலும் இப்பாலில் காணப்படும் விட்டமின் ஏ சரும ஆரோக்கியத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. இப்பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து சருமத்தை பளபளப்பாக்குகிறது.

பொதுவாக ஆட்டுப்பாலானது காய்ச்சி பயன்படுத்தப்படுகிறது. ஆட்டுப்பாலிலிருந்து தயிர், மோர், வெண்ணெய், ஐஸ்கிரீம், பாலாடைக்கட்டி ஆகியவை தயார் செய்யப்படுகின்றன.

 

ஆட்டுப்பாலில் தயார் செய்யப்பட்ட பாலாடைக்கட்டி

 

உடலை வலுவாக்கும் ஆட்டுப்பாலை உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.