ஆணவம் அழிவிற்கு வழி

ஆணவம் அழிவிற்கு வழி என்பது பழமொழி. அதனை ஒரு கதையின் வழியாகத் தெரிந்து கொள்ளத் தொடருங்கள்.

முன்னொரு காலத்தில் ஆந்தை அன்பழகனும் அன்னம் வெள்ளையப்பனும் நண்பர்களாக இருந்தனர். அவர்கள் தினந்தோறும் சந்தித்துப் பேசிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஒருநாள் ஆந்தை அன்பழகன் அன்னம் வெள்ளையப்பனைச் சந்திக்கச் சென்றது.

அப்போது “ஆந்தை அன்பழகனே! எனக்காக நீ சற்று நேரம் காத்துக் கொண்டிரு. நான் சார்ந்திருக்கும் அன்னக் கூட்டத்தின் தலைவன் நான். எங்கள் கூட்டத்தில் சிறிய பிரச்சனை ஒன்று தோன்றியுள்ளது. நான் தற்போது அங்கு சென்று அப்பிரச்சனையை சரிசெய்துவிட்டு விரைவில் வருகிறேன்.” என்று சொல்லிக் கிளம்பியது அன்னம் வெள்ளையப்பன்.

யோசனையுடனேயே காட்டிற்குள் ஆந்தை அன்பழகன் பறந்து சென்றது. அப்போது அந்நாட்டு அரசன் வேட்டைக்காக காட்டிற்குள் வந்து தங்கியிருப்பதையும் அன்று சாயங்காலம் அரசன் அக்காட்டை விட்டு நாட்டிற்கு புறப்படுவதையும் அறிந்து கொண்டது.

உடனே அன்னம் வெள்ளையப்பனைச் சந்திக்க ஒரு திட்டத்துடன் ஆந்தை அன்பழகன் குளக்கரைக்கு வந்தது.

குளக்கரையில் அன்னம் வெள்ளைப்பனைச் சந்தித்த ஆந்தை அன்பழகன் “அன்னம் வெள்ளையப்பா! நான் உன்னை காட்டில் இருக்கும் என்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். நீ என்னுடன் வருவாயா?” என்று கேட்டது.

“சரி நான் எப்போதும் அங்கே வரத் தயாராயிருக்கிறேன். நாளை வா போகலாம்” என்றது அன்னம் வெள்ளையப்பன்.

“இல்லை. நீ இப்பவே என்னுடன் வா” என்று ஆந்தை அன்பழகன் கூறவும் அன்னம் வெள்ளையப்பன் ஆந்தை அன்பழகனுடன் பறந்து காட்டிற்குள் சென்றது.

காட்டிற்குள் அரசரின் வேட்டைப்படை தங்கியிருந்த இடத்தின் அருகில் இருந்த மரத்தில் இரண்டு பறவைகளும் அமர்ந்தன.

ஆந்தை அன்பழகன் அன்னம் வெள்ளையப்பனிடம் ‘உனக்குத் தெரியுமா? நானும் ஒரு அரசன் தான். இங்கே இருப்பவர்கள் என்னுடைய படைவீரர்கள். நாங்கள் பயணத்திற்கு தயாராகிறோம்’ என்று கூறியது.

வேட்டைப்படை வீரர்கள் அப்போது அங்கிருந்து புறப்பட்டனர். அதனைப் பார்த்த அன்னம் வெள்ளையப்பன் “உன்னுடைய அனுமதியில்லாமலேயே படை வீரர்கள் புறப்படுகிறார்களே?” என்று கேட்டது.

“இல்லை! இல்லை! அவர்கள் புறப்பட மாட்டார்கள். பொறுத்திருந்து பார்!” என்றபடி “ட்டீட்டீ! ட்டீட்டீ! ட்டீட்டீ!” அலறியது.

உடனே அரசனின் வேட்டைப் படைத் தலைவன், “நாம் இப்போது இங்கிருந்து புறப்பட வேண்டாம். ஆந்தை அலறுகிறது. இது அபசகுணம்.” என்றதும் வேட்டைப்படை வீரர்கள் அங்கேயே தங்கினர்.

அதனைக் கண்ட ஆந்தை அன்பழகன் “என்னை உண்மையான அரசன் என்று அன்னம் வெள்ளையப்பனை எண்ண வைத்துவிட்டேன்” என்று தனக்குத் தானே நினைத்துக் கொண்டது.

ஆனால் அன்னம் வெள்ளையப்பனுக்கு ஆந்தை அன்பழகன் தன்னை அரசன் என்று நம்ப வைக்கவே இவ்வாறு முயற்சி செய்வது புரிந்தது.

அடுத்தநாள் காலையில் வேட்டைப்படை வீரர்கள் புறப்படத் தயாராயினர். மீண்டும் ஆந்தை அன்பழகன் அவர்களைத் தடுப்பதுபோல் “ட்டீட்டீ! ட்டீட்டீ! ட்டீட்டீ” என்று அலறியது.

ஆந்தையின் அலறலை அபசகுணமாகக் கருதிய வேட்டைப்படை வீரர்கள் புறப்படுவதை நிறுத்தினர். உடனே ஆந்தை அன்பழகன் அன்னம் வெள்ளையப்பனைப் பெருமையாகப் பார்த்தது.

அன்றை தினம் சாயங்காலம் வேளையில் வேட்டைப்படை வீரர்கள் புறப்படத் தயாராக இருந்தபோது ஆந்தை அன்பழகன் மீண்டும் அலறியது.

அதனைக் கண்ட வேட்டைப்படைத் தலைவன் சீற்றமடைந்து வேட்டைப்படை வீரன் ஒருவனை அழைத்து “வீரனே! நாம் இக்காட்டைவிட்டு புறப்படும் சமயத்தில் ஆந்தை ஒன்று அபசகுணமாக அலறுகிறது. எனவே அதனைக் கண்டுபிடித்து உடனடியாக அழித்துவிடு. இனிமேல் நாம் புறப்படத் தயாராகும்போது ஆந்தையின் அலறல் கேட்கக் கூடாது” என்று உத்தரவிட்டான்.

வேட்டைப்படை வீரன் சுற்றிலும் பார்த்து ஆந்தை அன்பழகனையும், அன்னம் வெள்ளையப்பனையும் அடையாளம் கண்டு கொண்டான். உடனே ஆந்தை அன்பழகனை நோக்கிக் குறிவைத்து அம்பை எய்தான்.

ஆனால் அம்பு தவறுதலாக அன்னம் வெள்ளையப்பனின் காலில் பட்டு அன்னத்திற்கு காயம் உண்டானது. அதனைக் கண்டதும் ஆந்தை அன்பழகனின் கண்களில் கண்ணீர் முட்டியது.

‘அய்யோ! என்னால் தானே என்னுடைய நண்பன் ஆந்தை அன்பழகனுக்கு இந்நிலை ஏற்பட்டது. நான் அவனை ஈர்க்கச் செய்த காரியத்தால் வந்தது இது. நான் எவ்வளவு பெரிய முட்டாள்!’ என்று வருந்தியது.

‘இனி என்னுடைய வாழ்க்கையில் பெருமையடித்துக் கொள்ள மாட்டேன்!’ என்று மனதிற்குள் உறுதி பூண்டது ஆந்தை அன்பழகன்.