ஆணவம் எரிந்தது

பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,”அர்ஜூனா போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு!” என்றார்.

“மைத்துனா! நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி! ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டி தான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே! அதை மறந்து விட்டாயே! அப்படி செய்வது எனக்கும் பெருமை அல்லவா! நீயோ என்னைக் கீழே இறங்கு என்று ஆணையிடுகிறாய். இது என்ன நியாயம்? ”

அர்ஜுனனின் வார்த்தைகளை கிருஷ்ணர், காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை.

“தேரை விட்டு இறங்கு!” என்றார் கண்டிப்புடன்.

வருத்தத்துடன் அர்ஜுனன் கீழிறங்கினான்.

அப்போது அவர், ” தேரின் பக்கத்தில் நிற்காதே! சற்று தள்ளி நில்!” என்றார் அதட்டலுடன்.

அர்ஜூனனால் கிருஷ்ணரின் அதட்டலைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. வெற்றி பெற்ற மகிழ்ச்சி கூட மனதை விட்டு அகன்றுவிட்டது.

ஒன்றும் புரியாதவனாய் தள்ளி நின்றான்.

வாடிய முகத்துடன் நின்ற அவனைக் கண்டு புன்னகைத்த கிருஷ்ணர், தேரிலிருந்து குதித்து ஓடிச்சென்று, அர்ஜுனனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டார்.

அந்த கணமே தேர் தீப்பற்றி எரிந்தது.

“பார்த்தாயா? தேர் எரிகிறது! அதனால் தான் உன்னை இறங்கச் சொன்னேன்” என்றார் புன்முறுவலுடன்.

“தேர் ஏன் எரிந்தது?” அர்ஜுனன் ஏதும் புரியாமல் கேட்டான்.

அர்ஜூனா! போர் புரியும்போது கவுரவர்கள் உன் மீது பல அஸ்திரங்களை ஏவினர். அவற்றின் சக்தி அளவிட முடியாதது. தேரில் நானும், தேர்க்கொடியில் அனுமனும் இவ்வளவுநேரம் அதை தடுத்துக் கொண்டிருந்தோம். அதனால், அவை வலிமையற்றுக் கிடந்தன.

தேரை விட்டு நான் குதித்ததும், தேர்க்கொடியில் இருந்து அனுமனும் புறப்பட்டு விட்டான்.

அஸ்திரங்களின் சக்தி தலைதூக்கியது.

தேர் பற்றி எரியத் தொடங்கிவிட்டது.

உண்மை இப்படி இருக்க, நீயோ போரில் வெற்றி பெற்ற உன்னைக் கவுரவிக்கவில்லை என்று வருத்தப்படுகிறாய்.

“வெற்றி பெற்றதும் ‘நான்’ என்னும் ஆணவம் உனக்கு வந்து விட்டது. ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விடாதே” என்று அறிவுரை கூறினார்.

தேர் பற்றி எரிந்ததுபோல, அர்ஜுனனிடம் இருந்த ஆணவமும் பற்றி எரிந்து சாம்பலானது.

இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.