வாழ்க்கையில் மனிதனானவன் பெற்றோர்களின் கண்காணிப்பில் அல்லது பெற்றோர்களைச் சார்ந்து இருப்பது அதிகபட்சம் இருபத்தைந்து ஆண்டுகளே.
ஒரு சிலர் வாழ்க்கையில் கொஞ்சம் முன்பின் இருக்கலாம். எஞ்சியுள்ள வாழ்க்கையை அதாவது அவனது வாழ்நாளின் பெரும் பகுதியைத் திருமணத்திற்குப் பிறகு தாரத்துடன்தான் கழிக்க வேண்டியவனாக இருக்கிறான்.
சமூகத்தில் மனிதன் ‘ஆண்’ என்று முழுமையாக அங்கீகரிக்கப்படுவதே ஒருவனின் திருமணத்திற்குப் பிறகுதான்.
திருமணமாகும் வரை பெற்றோர்களுக்கு அவன் ஒரு குழந்தையே. ஒரு குழந்தையிடம் எப்படி முதிர்ச்சித் தன்மை இருக்க முடியாதோ அது போலத்தான் அவனும்.
தான்தோன்றித்தனம், பொறுப்பின்மை, விளையாட்டுத் தன்மை ஆகியவைகளின் மொத்த உருவமாகத்தான் அவன் இருக்க முடியும்.
என்னதான் தாயும் தந்தையும் தன் மகனுக்குக் கல்வியையும், சொத்தையும், பாசத்தையும், அன்பையும் வாரி வழங்கி வளர்த்தாலும் அவனைப் புடம் தங்கமாக மாற்றி, மெருகூட்டுவது தாரம் தான்.
வாழ்க்கையில் அவனுக்குப் பிடிப்பை உண்டு பண்ணுவது, வீழ்ச்சியில் வழிகாட்டுவது, ஆலோசகராக இப்படிப் பல விதத்திலும் தாரம் மட்டுமே செயல்படுகிறாள்.
இன்னும் சொல்லப்போனால், ஒருவன் ஓரளவுக்கு விவரம் தெரிந்து உலகைப் புரிந்து கொள்கிற சமயத்தில் பெற்றோர்களை இழந்து விடுகிற நிலையும் ஏற்பட்டுவிடுகிறது. அதற்குப் பிறகு அவனை நிலைகுலைந்து விடாமல் சீரழிய விடாமல் கட்டிக் காப்பது தாரம் மட்டுமே.
குடிகாரர்கள், சூதாடிகள், கொள்ளையர்கள், பெண் பித்தர்கள் – இப்படி அநேகம்பேர் திருமணத்திற்குப் பின், தாரம் வந்த பின் திருந்தி மனிதனாகியிருக்கிறார்கள்.
தறிகெட்டு அலையும் அவன் உள்ளத்தை ஒருநிலைப் படுத்தி தகுந்த ஆலோசனைகள், அறிவுரைகள் மூலம் அவனுக்குப் பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்தி சமூகத்தில் ஓர் நல்ல பிரஜையாய், மனிதனாய், குடும்பத் தலைவனாய் உலவ விடுவது தாரம் மட்டுமே.
நாம் அன்றாடம் பருகும் காபியானது டிக்காஷன், பால், சர்க்கரை ஆகியவைகளின் கலவை. அதுபோலதான் வாழ்க்கையும்.
டிக்காஷனைத் தந்தையாகவும், பாலைத் தாயாகவும், சர்க்கரையைத் தாரமாகவும் எடுத்துக் கொள்ளலாம். மூன்றுமே முறையான அளவில் இருந்தால்தான் காபி (வாழ்க்கை) மணக்கிறது; சிறக்கிறது. இம்மூன்றில் ஏதாவது ஒன்று இல்லாவிட்டாலும் சுவை பாதிக்கப்படும் என்பது தெரியும்.
எனவே, மனிதன் ஒருவனுக்கு விவரம் தெரியும் நேரம் வருகிறபோது அவனை முறையாகச் செயல்பட வைத்து, வாழ்க்கையின் நுணக்கங்களை அவனுக்குக் கற்றுக் கொடுத்து பொறுப்புணர்ச்சியையும், முதிர்ச்சித்தன்மையும் அவனுள் ஏற்படுத்தி அவனின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பது தாரம் மட்டுமே! என்பதில் சிறிதும் ஐயமில்லை.
அதனால்தான் ‘ஒருவனின் வெற்றிக்குப் பின்னால் நிச்சயம் ஓர் பெண் ஒளிந்திருப்பாள்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!