ஆண்டவனப் பாடலன்னா குத்தமில்ல…

ஆண்டவனப் பாடலன்னா
குத்தமில்ல – பெத்த
ஆத்தாளப் பாடலன்னா
எதுக்கு புள்ள?
வேண்டாத சாமி இல்ல
பெத்தெடுக்க – பெரும்
வேள்விகள செஞ்சா அவ
நெஞ்சுக்குள்ள
ஆயிரம்தான் உறவு வரும்
அத்தனையும் ஒதுங்கும்
ஆத்தாளின் அணைப்பினிலே
அன்பு பூத்துக் குலுங்கும்!

உதிரத்தப் பாலாக்கி
ஊட்டி விட்ட தாயி – அவ
உடுத்திய துணி கிழித்து
தொட்டில் கட்டிய ஆயி
விதி என்று ஓடாத் தேஞ்சும்
மதிவளர்த்த தெய்வம் – அவ
மடிமேல தலசாஞ்சா
மறந்து போகும் வையம்
சுமந்தவளே சுமக்கும் சுகம்
நெஞ்சம் மட்டும் அறியும்
சொல்லிப் பாரு அம்மா என்று
சொர்க்கம் கண்ணில் தெரியும்!

குடியிருந்த கோயில் அது
குலசாமி அம்மா – அட
கூடி வரும் சொந்தம் பந்தம்
பாசமெல்லாம் சும்மா
கடிகார முள்ளப் போல
நிக்காமத் தான் உழைச்சா – அவ
கண்ணுக்குள்ள மணியாட்டம்
பொத்திக் காலம் கழிச்சா
பட்டினியா விட்டதில்ல
ஒருநாளும் உன்னை
பழுத்தே போனாலும்
பாடித் தொழுகும் அன்னை!

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250

கவிஞர் கவியரசன் அவர்களின் படைப்புகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.