ஆண்டிகள் மடம் கட்டியது போல

ஆண்டிகள்  மடம் கட்டியது போல என்ற பழமொழியை ஆசிரியர் ஒருவர் கூறுவதை ஆந்தை அன்பழகன் கேட்டது. பழமொழியைக் கேட்டதும் சந்தோசத்துடன் பழமொழியின் விளக்கத்தினை ஆசிரியர் கூறுகிறாரா என்று ஆர்வத்துடன் ஆந்தை அன்பழகன் கவனிக்கலானது.

மாணவன் ஒருவன் எழுந்து “ இந்தப் பழமொழி ஏதோ இயலாதவர்கள் கூடி ஒரு காரியத்தை செய்ய முனைவதை கேலி செய்வது போல் உள்ளதல்லவா?” என்று கேட்டான்.

“இப்பழமொழிக்கான பொருள் அதுவல்ல. நான் இப்பழமொழி உருவான விதத்தையும்,  அதற்கான சரியான பொருளையும் கூறுகிறேன். கேளுங்கள்” என்று ஆசிரியர் கூறினார்.

பழமொழி உருவான கதை

ஒரு ஊரில் நான்கு ஆண்டிகள் இருந்தனர். அவர்கள் பகல் பொழுதுகளில் ஊருக்குள் சென்று வீடுவீடாக யாசகம் பெற்று ஊரார் கொடுக்கும் உணவுகளை உண்பர்.

இரவில் ஊருக்கு வெளியே இருக்கும் ஆலமரத்தில் உள்ள மேடையில் தமது பைகளை தலையணைகளாக்கி துண்டுகளை விரிப்புகளாக்கி வானமே கூரையாக படுத்து உறங்குவர்.

அப்படி அவர்கள் தூங்கும்போது எப்பொழுதும் திசைக்கொருவராக தலைவைத்து படுப்பர். அதாவது மரத்தின் மீது தலைபடுமாறு மரத்தை சுற்றி படுப்பார்கள்.

 

ஒருநாள் மரத்தின் அடியில் படுத்திருக்கும்போது முதல் ஆண்டி “நாம இந்த மரத்தடியில இப்படித்தான் நம்மை வாழ்க்கையைக் கழிப்பதா?” என்று கேட்டான்.

அதற்கு இரண்டாமவன் “இதுக்கு மேல என்ன வேணும் உனக்கு?” என்றான். முதலாமவன் “ஏதோ ஊர் மக்களின் உதவியுடன் ஒருவிதமா நம்ம வயித்துப்பாட்ட கழிச்சுட்டு வாரோம். ஆனா நாம தங்குவதற்கு ஒரு இடம்தான் இல்லாமல் போச்சு” என்றான்.

மூன்றாமவன் “இந்த இடத்துக்கு என்ன குறைச்சல்?. இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசப்படக்கூடாது.” என்றான். நான்காமவன் “இருங்க. அவன் என்ன தான் சொல்றான்னு முழுசா கேட்போம். சரி நீ சொல்” என்றான்.

முதலாமவன் “இப்ப வெயில் காலம் நம்ம பாட்டுக்கு மரத்துல தலைய வச்சு கால நீட்டி படுத்துக்குவோம். ஆனா மழை பெய்ஞ்சா எங்க போயும் ஒண்ட முடியுமா?” என்றான்.

அதற்கு இரண்டாமவன் “மழையில சிரமம்தான் அதுக்கு நாம் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டான்.

முதலாவதுஆண்டி “அதுக்குத்தான் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு மடம் கட்டினா என்ன?” என்று கேட்டான். இதனைக் கேட்டதும் நான்காமவன் “ஓ! அது தான் ஒன் திட்டமா?. மடம் கட்டுறது என்ன அவ்வளவு சுலபமா?” என்று எதிர்க்கேள்வி கேட்டான்.

 

அதற்கு முதலாமவன் “மடம் கட்ட நான் ஒரு யோசனை சொல்கிறேன் கேளுங்கள். நாம நாலு பேரு இருக்கோம். ஆளுக்கு ஒரு வாரத்துக்கு நாலனா சேத்தா ஒரு வாரத்துக்கு 1 ரூ. ஆகும். 100 வாரம் வந்தா 100 ரூபாய் கிடைக்குமில்ல அத வச்சு மடம் கட்டலாம்ல!.” என்றான்.

அதற்கு இரண்டாமவன் “அட. நல்ல யோசனைதான்.” என்றான். முதலாமவன் படுத்துத் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டே “அதோ அங்க வாசல் வைக்கணும்.” என்றான்.

இரண்டாமவன் “இதோ இந்தப் பக்கம் ஜன்னல் வைக்கணும் காத்து நல்லாவரும்.” என்று சைகை செய்தான். நான்காமவன் “இந்தா இப்படி போயி,  அப்படி வந்து இப்படி திரும்பி அங்க பாக்க சுவர வைக்கணும்.” என்று சைகையில் கூறினான்.

முதலாமவன் “ஆனாமடம் கட்டின பிறகு நாந்தான் தலைவனா இருப்பேன்” என்றான்.

இரண்டாமவன் “அதெப்படி நாந்தான் இருப்பேன்” என்றான்.

நான்காமவன் “அதெப்படி உங்களவிட வயசுல மூத்தவன் நான். அதனால நான்தான் தலைவனாக இருப்பேன்” என்றான்.

முதலாமவன் “இந்த ஐடியா சொன்னதே நான்தான். நான்தான் தலைவனாக இருப்பேன்” என்றான்.

இப்படியாக மூவரும் சண்டையிடுவதை அமைதியாக கேட்ட மூன்றாமவன் “ ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்பாங்க. இங்க கூத்தாடி ரெண்டுபட்டா! சும்மா இருங்கப்பா தூக்கம் வருது. நீங்களாவது மடம் கட்டுறதவாவது?” என்ற சலித்துக் கொண்டான். சிறிது நேரத்தில் அந்த இடம் அமைதியானது.

இப்படியாக ஆண்டிகளின் மடம் நிறைவேறாத கனவாகவே இருந்தது.

 

“இது போல நாம் செய்ய நினைக்கும் காரியங்களை வெறும் வார்த்தைகளால் சொல்லிக் கொண்டு கடைசி வரை செயல்படுத்தாமல் இருப்பதற்கு எடுத்துக்காட்டாக இப்பழமொழியைக் கூறுவர்” என்றார் ஆசிரியர்.

ஆந்தை பழமொழி பற்றிக் கூறுதல்

ப‌ழமொழி மற்றும் அதற்கான விளக்கம் கிடைத்த சந்தோசத்தில் காட்டின் வட்டப்பாறையை நோக்கிப் பறந்தது ஆந்தை அன்பழகன். ஆங்கே எல்லோரும் வழக்கம் போல் காக்கையின் வருகைக்காகக் காத்திருந்தனர்.

ஆந்தை அன்பழகனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டது. சிறிது நேரத்தில் அங்கு வந்த காக்கை கருங்காலன் “என் அருமைக் குழந்தைகளே உங்களில் யார் இன்றைக்கான பழமொழியைக் கூறப்போகிறீர்கள்?” என்று கேட்டது.

ஆந்தை அன்பழகன் “நான் இன்றைக்கு ஆண்டிகள்  மடம் கட்டியது போல என்ற பழமொழியைக் கூறுகிறேன்” என்று தான்கேட்டறிந்து முழுவதையும் கூறியது.

காக்கை கருங்காலனும் “ஆந்தை அன்பழகனின் பழமொழி மற்றும் விளக்கம் புரிந்தது தானே. நாளை மற்றொரு பழமொழி பற்றி தெரிந்து கொள்வோம்.” என்று கூறி எல்லோரையும் வழியனுப்பியது.

 இராசபாளையம் முருகேசன்     கைபேசி: 9865802942

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.