ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை என்ற இப்பாடல், திருவெம்பாவையின் முதல் பாடல் ஆகும்.
திருவெம்பாவை சைவ சமய குரவர்களில் ஒருவரான வாதவூரடிகள் எனப் போற்றப்படும் மாணிக்கவாசகரால், சைவத்தின் தலைவரான சிவபெருமானைக் குறித்து பாடப் பெற்றது.
திருவெம்பாவை பாடல்களை, மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் தங்கியிருக்கும் போது பாடினார். மார்கழி மாதத்தில் பெண்கள் பாவை நோன்பு நோற்று இறைவனை வழிபட்டனர்.
அதனைக் கண்ட மாணிக்கவாசகர், பாவை நோன்பு காலத்தில் நோன்பு நோற்பவர்கள், உடலாலும் உள்ளத்தாலும் இறைவனை எவ்வாறு வழிபட வேண்டும் என்ற முறையினை, திருவெம்பாவை மூலம் மக்களுக்கு கூறுகிறார்.
திருவெம்பாவை முதல் பாடல், பாவை நோன்பு நோற்கும் பெண்கள் வழிபாடு மேற்கொள்ள, உறங்கிக் கொண்டிருக்கும் தங்களுடைய தோழியை எழுப்புவதாக அமைந்துள்ளது.
உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் தந்தையாகிய சிவபெருமானின் அருளை, தாங்கள் மட்டும் பெறாது தங்களுடைய தோழியும் பெற வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் அவளை அன்பொழுக அழைக்கின்றனர்.
இனி திருவெம்பாவை முதல் பாடலைக் காண்போம்.
திருவெம்பாவை பாடல் 1
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே! வளருதியோ? வன்செவியோ நின்செவிதான்?
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே! என்னே!
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்!
விளக்கம்
உலக உயிர்கள் அனைத்திற்கும் தோற்றமும், முடிவும் உண்டு. ஆனால் உலகின் பரம்பொருளான சிவபெருமானோ முதலும், முடிவும் இல்லாதவர்.
திருவண்ணாமலையில் திருமாலும் பிரம்மனும், சிவப் பரம்பொருளின் அடி முடியை தேடி சென்ற போது, காண்பதற்கு அரிய பெரிய ஜோதி வடிவமாக அவர் காட்சியளித்தார்.
ஜோதி வடிவமான இறைவனான சிவபெருமானின் பெருமைகளை பாடல்களாக பாடிக் கொண்டு, பெண்கள் நோன்பு நோற்க வீதி வழியாக அதிகாலையில் செல்கின்றனர்.
அப்பெண்களின் தோழி ஒருத்தி, இறைவன் மீது பாடப்பட்ட பாடல்களைக் கேட்டும் விழிக்காமல் பொய் தூக்கம் தூங்கிக் கொண்டிருக்கிறாள்.
அதனைக் கண்டதும் அப்பெண்கள் தோழியை நோக்கி ,’வாள் போன்று நீண்ட கண்களை உடையவளே, இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாயே?’ என்கின்றனர்.
அவள் பதில் ஏதும் கூறாததால், ‘இறைவனின் புகழினை பற்றி நாங்கள் பாடும் பாடல்கள், உன்னுடைய காதுகளில் கேட்காதளவுக்கு உன்னுடைய காதுகள் இரும்புக் காதுகளாக மாறிவிட்டனவா?’ என்று சற்று கடுமையாக கேட்கின்றனர்.
தேவர்களுக்கெல்லாம் தேவனாக விளங்கும் மகாதேவனான சிவபெருமானின், வீரக்கழல்களை வாழ்த்தி சரணடைவதைப் பற்றி நாங்கள் வீதியில் பாடுவதைக் கேட்டதும், பெண் ஒருத்தி விம்மி விம்மி அழுதாள்.
தன்னை மறந்தாள். தான் படுத்திருந்த மலர்ப் படுக்கையை விட்டு கீழே தரையில் விழுந்து மூர்ச்சையாகிக் கிடக்கிறாள்.
அவளுடைய இந்த நிலையைக் கண்டு என்னே! என்னே! என்று எல்லோரும் வியக்கிறார்கள்.
ஆனால் நீயோ இறைவனைப் பாட வராது, பொய்யுறக்கம் கொள்கின்றாய். இத்தன்மையை நாங்கள் என்னவென்று கூறுவோம்?
உண்மையான பக்தர்கள், இறைவனின் திருநாமத்தைக் கேட்டதும் கண்களில் நீர்பெருகி, ஆனந்த பரவச நிலையை அடைவார்கள்.
அத்தகைய உயர்ந்த நிலையை அடைந்து, இறைவனின் திருவருளைப் பெற தோழியை அழைப்பது போல், உலக மக்களை எல்லாம் இப்பாடலில் மாணிக்கவாசகர் அழைக்கின்றார்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!