அன்று ஆடிமாத முதல் வெள்ளி.
கருக்காத்த மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிமிடத்திற்கு நிமிடம் கூடியது. கிடைத்த வாகனத்தில் வந்திறங்கி கோயிலை நோக்கி ‘சாரை சாரை’யாக நடந்தார்கள் மக்கள்.
லவுட் ஸ்பீக்கரில் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் மாரியம்மன் பாடல் சப்தமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. கோயிலைச்சுற்றி நிறைய திடீர்க் கடைகள் முளைத்திருந்தன.
தள்ளுவண்டியில் கலர்க் கலராய் ஸ்வீட்டுகளும் பல கலர்களில் பாட்டிலில் பலநாளாய் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கூல்டிரிங்ஸும் ஊதுகுழல், கலர் கண்ணாடிகள், பலூன்கள், வளையல், ஸ்டிக்கர் பொட்டு, நெயில் பாலிஷ் என்று தள்ளுவண்டியில் ஃபேன்ஸி அயிட்டங்களுமாய் களை கட்டியிருந்தது கோயில்.
ஒரே இரைச்சல் சப்தம். கசகசக்கும் கூட்ட நெரிசலால் அழும் குழந்தைகள். மூங்கில் தட்டில் வெள்ளியினால் செய்யப்பட்ட மெல்லிசான சிறுசிறு உடல் உறுப்புகளின் உருவத் தகடுகளை வைத்துக் கொண்டு வாங்கும்படி வற்புறுத்தும் ஆட்கள். கட்டி வைத்திருக்கும் மயிற்பீலிகளால் உச்சந்தலை முதல் கால்வரை வருடிவிட்டுக் காசு கேட்பவர்கள், கைகளை நீட்டி பிச்சை கேட்பவர்கள் என அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது கோயில் வாசல்.
ஓங்கி ஒலிக்கும் தாரை தப்பட்டை ஓசையும் அதிர் வேட்டுக்களின் ஓசையும் காதைப் பிளக்க விண்ணை முட்டும் பக்தர்களின் சரண கோஷம். மாவிளக்குகள் போடுதலும் கூழ் காச்சுதலுமாக அங்கே பக்தி வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
தங்கள் வேண்டுதல் நிறைவேறிவிட்ட சந்தோஷத்தில் நேர்ந்து கொண்டதை செய்து முடித்து நேர்த்திக் கடனைச் செலுத்த வந்தவர்கள். தாலிப் பிச்சை கேட்பவர்கள், குழந்தை வேண்டி மடிப்பிச்சை கேட்பவர்கள்,
வயிற்றிலிருக்கும் கருவைக் காப்பாற்றம்மா சுகப்பிரசவத்தில் நல்லபடியாய்க் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமம்மா என்று வேண்டி நிற்கும் கருவுற்ற பெண்கள், உடல் கோளாறு மனக்கோளாறு தீரவேண்டி வேண்டுபவர்கள்,
வியாபாரம் நல்லபடியாய் நடந்து லாபம் கிடைத்தால் உன் திருக்கோயில் உண்டியலில் கிடைக்கும் லாபத்தில் இத்தனை விழுக்காடு உனக்கான பங்காய் போடுகிறேன் என்று ஆத்தாவை பிஸினஸ் பார்ட்னராக ஆக்கிக் கொள்ள விரும்புபவர்கள்,
வேலையில் ப்ரமோஷன் கிடைக்கணும், ட்ரான்ஸ்பர்க்கு முயற்சிக்கிற எனக்கு நான் கேட்ட ஊரு கெடைக்கணும் என்று இன்னும் பலவிதமான வேண்டுதல்களோடு பக்தர்கள் அம்மனை பக்தியோடு கைகூப்பி தரிசித்துக் கொண்டிருந்தனர்.
பலபேர் கண்களிலிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
சந்நியில் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி, ஈரேழு உலகத்தையும் காக்கும் ஈஸ்வரி. மும்மூர்த்திகளையும் படைத்தவள் இவளே என்று போற்றப்படுபவள்,
அனைத்து ஜீவராசிகளின் உயிர்க்குள்ளும் உறைபவளாய் ஜகன் மாதாவாய் இருப்பவளான கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் திகழும் ஆத்தா பிரம்மாண்டமாய் கன கம்பீரமாய் கருணையே வடிவமாய் அமர்ந்திருந்தாள்.
எட்டுக்கைகளிலும் கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஏந்தி இடது காலை மடித்து வைத்து வலது காலைத் தொங்கவிட்டபடி நெற்றி நிறைய விபூதியும் குங்குமமும் இட்டு காதுகளில் ஜொலிக்கும் தோடுகளும் மூக்கில் மூக்குத்திகளும் கழுத்து நிறைய மாலைகளுமாய் ‘என்னை நம்பி வந்தவரை நான் ஓர்நாளும் கை விட்டதில்லை’ என்று சொல்வதைப்போல் மெலிதான மந்தகாசப் புன்னகையோடு அம்சமாய் அமர்ந்திருந்தாள் ஆத்தா.
அவள் அனைத்தும் அறிந்தவள். யாருக்கு எதை எப்போது எப்படித் தரவேண்டுமென்பது அவளுக்குத் தெரியும். அவளுக்குத் தெரியாமல் யாரும் எதையும் செய்துவிட முடியாது. அது பிரம்மனோ சிவனோ விஷ்ணுவோ யாராகிலும் சரி.
நிஜமான பக்தியோடு அம்மா என்று அழைத்தால் ஓடோடி வருபவள். அதேசமயம் தவறு செய்பவர்களை தண்டிக்கத் தயங்காதவள். மாரியாத்தாவின் சந்நிதி முன் முண்டியடித்த கூட்டத்தை போலீசாராலும் கூட ஒழுங்குபடுத்த முடியவில்லை.
கோயில் சிப்பந்தி ஒருவர் கூட்டத்தை ஒழுங்குபடுத்த முயன்று கத்திக் கத்தி ஓய்ந்து போனார். ‘பட் பட்’டென்று தேங்காய்கள் உடைபடும் சப்தம். அடுத்த நிமிடம் பூசாரி தமிழில் மந்திரம் சொல்லி மணியடித்து தீபாராதனை காட்டும் நிகழ்வு என்று நடந்து கொண்டே இருந்தது.
உடனே கூட்டம் கொஞ்சம் குறைவதுபோல் தோன்றும்.அடுத்த நிமிடம் ‘திமுதிமு’வென்று பக்தர்கள்கூட்டம் வந்து சூழ்ந்து கொள்ளும்.
கோயில் வாசலில் ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தாள் மயிலம்மா. எதிரில் மெழுகப்படாத மூங்கில் கூடையில் மல்லியும் முல்லையும் சாமந்தியும் செவ்வரளியும் ரோசாப்பூவும் தனித்தனியாய்க் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. பக்கத்தில் மூங்கில் தட்டில் அனைத்துப் பூக்களும் கலந்து உதிரிப் பூக்களாய்.
மயிலம்மா தீடீர் பூக்காரி இல்லை.முப்பது வருஷகாலமாய் ஆத்தாவின் கோவில் வாசலில் பூக்கட்டி விற்பவள். பத்துகாசுக்குப் பிரயோஜனம் இல்லாத குடிகாரனுக்கு வாக்கப்பட்டு குடும்பச் சுமையைச் சுமப்பவள்.
அன்றாடம் கோயில் வாசலில் வந்தமர்ந்து பூ விற்று வரும் வருமானத்தில் குடும்பத் தேரை ஒண்டியாளாய் இழுத்துச் செல்பவள். வரும் வருமானத்தால் பசியின்றி வயிற்றை ரொப்ப முடிந்ததே தவிர ஐந்து காசுகூட சேர்த்து வைக்க முடியவில்லை.
ஒரேமகள் செல்வராணி. பெயரில்தான் செல்வம் இருந்ததே தவிர பற்றாக்குறை குடும்பம்தான். இதில் பெயரின் பிற்பகுதியில் ராணி வேறு. பேசாமல் ‘பிச்சையம்மா’ன்னு பேர் வெச்சுருக்கலாமோ என்று சிலசமயம் மயிலம்மாவுக்குத் தோன்றும்.
மகள் செல்வராணிக்கு வயது இருபத்து மூன்று. ப்ளஸ்ட்டூ வரை படிப்பு. சமீபத்தில் தான் ஜவுளிக்கடையில் சேல்ஸ் கேர்ளாய் வேலைக்குப் போபவள். சொற்ப சம்பளம். பணமில்லாமயால் கல்யாணம் என்ற பேச்சே எழவில்லை.
“என்னாடி மயிலு! பொண்ணு வயசு ஏறிக்கிட்டே போவுது. கல்யாணம் கில்யாணம் பண்ணப்போறியா இல்லியா? ஊறுகா போட்டு வெச்சுக்கப் போறியா? சிலபேர் அக்கறையாகவும் பலபேர் கிண்டலாகவும் கேட்கும்போது மயிலம்மாவுக்கு மனம் ரணமாகும்.
தினமும் மாரியாத்தாவிடம் சொல்லி அழுவதைத் தவிர வேறு வழியேதும் தெரியாமல் தவித்தாள் மயிலம்மா.
தினமும் பூக்கூடையோடு ஆத்தாவின் கோயில் வாசலில் வந்து அமர்ந்தவுடன் ஒருமுழம் பூவைக் கட் பண்ணி உள்ளே சென்று பூசாரியிடம் கொடுத்து ஆத்தாவுக்கு சாத்தச் சொல்லிவிட்டு வந்துதான் வியாபாரத்தைத் தொடங்குவாள் மயிலம்மா.
மயிலம்மாவின் குடும்ப சூழ்நிலை பூசாரிக்குத் தெரியுமென்பதால் “மயிலக்கா! பாத்துக்கிட்டேயிரு! ஒருநா இல்லாட்டி ஒருநா ஓம் மவளுக்கு எம்மாம் பெரிய வசதியான வாழ்க்கைய ஆத்தா அமச்சுக்குடுக்கப் போறான்னு. அதுக்கு ரொம்ப நாளு ஆவாது; சீக்கிரமே நடத்திக் குடுப்பா ஆத்தா!” என்று சொல்வதும்
மயிலம்மாவும் “மவளுக்கு வயசு ஏறிக்கிட்டே போவுது பூசாரியண்ணே! ஆத்தாவத்தா நம்பியிருக்கேன்; என்னிக்கு ஆத்தா கண்ணு தொறந்து பாக்கப் போவுறாளோ!” என்று கண்ணீர் மல்க ஆத்தாவைப் பார்த்து கைகூப்பி விட்டு வியாபாரத்தைப் பார்க்க செல்வதும் வாடிக்கையான ஒன்று. இன்றும் வழக்கம்போல் ஒரு முழம் மல்லிப்பூவை ஆத்தாவுக்குச் சேர்த்தாயிற்று.
கிலோக் கணக்கில் பூக்களை வாங்கி முதல்நாள் இரவு முழுவதும் தொடுத்ததில் முதுகு, இடுப்பு, முழங்கை, விரல்கள் என்று கடுமையாக வலித்தது மயிலம்மாவுக்கு.
அடிக்கடி வலிக்கும் இடுப்பை கையால் தட்டிக் கொண்டாள். விரல்களை நெட்டி முறித்தாள். பூ வியாபரம் நன்றாகவே நடந்தது. கூடையில் பூவின் அளவு குறைய ஆரம்பித்தது.
ஒன்றுக்கு மூன்று விலை வைத்து விற்பவளல்ல மயிலம்மா. பெண்கள் பூ வாங்க வந்தால் கேட்கும் முழத்தை அளந்து கொடுத்து விட்டு நாலு விரல்கட்டை பூவைக் கட் செய்து கொடுத்து “தலேல வெச்சுக்கோ தாயி!” என்பாள். அதனாலேயே அவளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம்.
நாலுநாள் முன்பு அதிசயமாய் தானாகவே செல்வராணியைப் பெண் கேட்டு ஒரு பிள்ளை வீட்டார் வந்தார்கள். பையன் தேசிய வங்கியொன்றில் கடைநிலை ஊழியர்.சம்பளம் இருவாதாயிரம் என்றார்கள். நல்ல மனிதர்களாய்த் தெரிந்தார்கள்.
தேடி வந்த சம்பந்தம். விட்டுவிட மனமில்லை மயிலம்மாவுக்கு. ஆனாலும் கல்யாணம் என்றால் பெண்ணுக்கு ஒரு அஞ்சு பவுனாவது போடனும். பாத்திரம், பண்டம், கல்யாண ஜவுளி, மாப்பிள்ளைக்கு ஏதாவது, சாப்பாட்டு செலவு மண்டப வாடகை. தலை சுற்றியது மயிலம்மாவுக்கு.
‘அஞ்சு பவுன் இப்ப பவுனு விக்கிற வெலைக்கு கிட்டத்தட்ட மூணு லட்சமாவுது ஆவும். மத்த செலவுங்க?’
தாய் தவிக்கும் தவிப்பு பார்த்து கலங்கிப் போன செல்வராணி, “அம்மா மனசப் போட்டு கஷ்டப்படுத்திக்காத. எனக்குக் கல்யாணம்லா வேண்டாம்மா” என்று சொல்லியபோது மனதால் பொடிப் பொடியாய் உதிர்ந்து போனாள் மயிலம்மா.
பெற்ற பெண் பணத்தால் தடைபடும் தன் திருமணத்தால் தாய்படும் வேதனையைத் தாங்க முடியாமல் கல்யாணமே வேண்டாம் எனச் சொல்வதை எந்தத் தாய்தான் தாங்கிக் கொள்வாள்.
மனதிற்குள் ஆத்தாவிடம் கதறி அழுதாள் மயிலம்மா. இப்போதும் மயிலம்மாவின் மனம் மௌனமாய் ஆத்தாவிடம் முறையிட்டு அழுது கொண்டேதான் இருந்தது.
“பூக்காரம்மா! பூ வேணும்!” பெண்ணின் குரல்.
குரல்கேட்டு யோசனையிலிருந்து விடுபட்டு பூ கேட்டவரை நிமிந்து பார்த்தாள் மயிலம்மா. பணக்காரக்களை முகத்தில் வழிந்தது. புடவையும் நகைகளும் பணக்காரத்தனத்தைப் பறை சாற்றின.
“என்னா பூ? எம்மாம் வேணும்?”
“எல்லா பூவிலும் பத்து பத்து முழம்”
‘அடேங்கப்பா! எல்லா பூவுமே வித்து முடிஞ்சிடும் போலருக்கே!’ மயிலம்மாவுக்கு சந்தோஷமாயிருந்தது.
“ஆத்தா!” என்றாள் சந்தோஷத்தில்.
எல்லா பூவிலும் பத்து பத்து முழம் அளந்து கட்செய்து கேரிபேக்கில் போட்டுவிட்டு குட்டி கேரிபேக் ஒன்றில் கொசுராக உதிரிப்பூக்களை அள்ளிப் போட்டு அந்தப் பெண்ணிடம் நீட்டினாள் மயிலம்மா. கூடை காலியாகி விட்டது. மூங்கில் தட்டிலிருந்த உதிரிப் பூக்களைக் கூடையில் கொட்டினாள்.
“எத்தனம்மா ஆச்சு?” அந்தப் பெண் கேட்க தொகையைச் சொன்னாள்.
அந்தப் பெண் பூக்கூடைக்கு நேராக ஹேண்ட் பேக்கைத் திறந்து ஜிப் ஜிப்பாகத் திறந்து தொகையை எடுத்தார்.
தொகையைக் கொடுத்துவிட்டு அருகில் நின்ற குடும்பத்தாரிடம் செல்ல, கோயிலுக்குள் சென்றது அந்த பணக்காரக் குடும்பம்.
கூட்டம் காரணமாய் கார் கோயிலுக்கு அருகே வர அனுமதியில்லை என்பதால் தூரத்தில் காரை நிறுத்திவிட்டு நடந்தே வந்திருக்க வேண்டும் என்பது பத்து வயது பெண் குழந்தை “காலை வலிக்குது” என்றபடி செல்வதிலிருந்து புரிந்தது.
அந்தப் பணக்காரக் குடும்பம் உள்ளே சென்ற பத்தாவது நிமிடம் கோவில் அல்லோலகல்லோலப்பட்டது. பாதுகாப்புக்காக வந்திருந்த போலீஸார் அங்குமிங்கும் ஓடினார்கள்.
“ஆத்தாவுக்கு அணிவிக்கக் கொண்டு வந்த பத்து பவுனு தாலிச் செயினும் ஆத்தா காலுல போட கொண்டு வந்த அஞ்சு பவுனு கொலுசுங்களையும் காணுமாம். எந்தப் பாவி திருடிட்டுப் போனானோ? போனாளோ?”
பக்தர்கள் ஆளாளுக்குக் கத்திக் கொண்டே இங்குமங்கும் தேடினார்கள் திருடியவர்களை.
“திருடினவுங்க கோயிலுலேயேவா இருப்பாங்க… இந்நேரம் எம்மாந்தூரம் போயிருப்பாங்களோ?” புலம்பினார்கள்.
விஷயம் காதில் விழ, “அய்யோ.. ஆத்தா..” என்று வாய்விட்டுக் கத்தினாள் மயிலம்மா.
இந்தத் திருட்டு விஷயம் தெரியாத கோவிலுக்குப் அப்போதுதான் வந்த ஒரு பெண் மயிலாம்மாவிடம் வந்து, “அம்மா கொஞ்சம் உதிரிப்பூ கெடைக்குமாம்மா?” என்று கேட்க,
“இருக்கும்மா! தாரேன்” என்றபடி மூங்கில் தட்டிலிருந்து கூடையில் கொட்டி வைத்த உதிரிப்பூவை எடுக்கக் கையை விட்டவள் கையில் ஏதோ பொட்டலம் போல தட்டுப்பட, ‘என்னது கையில ஏதோ தட்டுப்படுது?’ என்று நினைத்தவளாய் அதனை வெளியில் எடுத்தாள்.
ஜரிகை வேலைப்பாடோடு கூடிய சுருக்குப்பை. ‘என்னதிது சுருக்குப் பையி..பூக்கூடைக்குள்ளாற எப்பிடி வந்திச்சி?’ பரபரப்பாய் சுருக்குப் பையைத் திறந்து பார்த்தாள்.
பைக்குள் தாலி கோர்க்கப்பட்ட புத்தம்புது தங்கச் செயினும் பளபளக்கும் இரண்டு தங்கக் கொலுசுகளும் இருந்தன.
பார்த்த மாத்திரத்தில் படபடப்பானாள் மயிலம்மா. “ஆத்தா!” என்று அவள் கத்திய கத்தல் கூட்டத்தினர் பலரின் காதிலும் விழுந்து. ‘சடாரெ’ன்று மயிலம்மாவைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
மயிலம்மா தலைதெறிக்க கோவிலுக்குள் ஓடினாள். கையில் நகைகள் அடங்கிய சுருக்குப்பை.
ஆத்தாவுக்கு எதிரில் நின்று கதறிக் கொண்டிருந்தார் மயிலம்மாவிடம் பூ வாங்கிய அந்தப் பணக்காரப் பெண்மணி.
அப்பெண்மணியின் கணவர் அப்பெண்ணை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். கூடியிருந்த கூட்டம் அமைதியாய் நின்றிருந்தது.
“நா என்ன பண்ணுவேன் தாயே? நா என்ன தப்பு பண்ணினேன். வேண்டுதல நிறைவேற்ற தானே வந்தேன். தாலி செயினையும் கொலுசையும் ஒனக்கு அணிவிச்சு அழகு பாக்கணும்னு ஆசையா வந்தேனே! ஒனக்கு போட்டு அழகு பாக்க வேண்டிய நகைங்கள எங்க தொலைச்சேன்னு தெரியலயே! நான் பாவி! நான் பாவி! அதான் ஒனக்கு நா வாங்கி வந்த நகைங்கள அணிஞ்சுக்கப் புடிக்கில..”
தன் பங்குக்கு பூசாரியும் அந்தப் பெண்ணைத் தேற்ற முயன்றார்.
“பூசாரி ஐயா! எனக்கு பவுன் பெரிசில்ல.. பணம் பெரிசில்ல… தொலைஞ்சு போன பதினஞ்சுபவுன் எனக்கு ஒன்னுமே இல்ல. ஆனா ஆத்தாளுக்குன்னு வாங்கின நகைங்க காணாமப் போனது அபசகுனமா தெரியுதே! ஆத்தாக்கு எம்மேல என்ன கோவம்னு தெரீலயே!” கதறினார் அந்தப் பெண்மணி.
கதறியழும் அப்பெண்ணை சமாதானம் செய்ய முடியாமல் தவிப்புடன் நின்றிருந்தது அந்தக் கூட்டம்.
“ஆத்தா! ஆத்தா!” என்று கத்தியபடி ஓடி வரும் மயிலம்மாவைக் கூடியிருந்த கூட்டம் திரும்பிப் பார்த்துவிட்டு வழிவிட்டு நகர்ந்து கொண்டது.
சற்று முன் தன்னிடம் பூ வாங்கிய அந்தப் பெண்ணிடம் ஓடி நின்றாள் மயிலம்மா.
“அம்மா! அம்மா! இதோ.. இதோ.. இருக்கும்மா ஒங்க நகைங்க இருக்குற சுருக்குப்பையி. என்னோட பூக்கூடையில கெடந்திச்சுங்கம்மா. இந்தாங்க!” பெண்மணியிடம் பையை நீட்டினாள்.
தான் ஹேண்ட்பேக்கிலிருந்து பூவுக்கான பணத்தை எடுத்தபோது சுருக்குப்பை தவறுதலாய் பூக்கூடையில் விழுந்திருக்க வேண்டுமெனப் புரிந்து போனது அந்தப் பெண்மணிக்கு.
சட்டென சுருக்குப்பையைக் கையில் வாங்கிய அந்தப் பெண்மணி மயிலம்மாவைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.
“நன்றிம்மா.. நன்றிம்மா..” என்றார் நா தழுதழுக்க. தன்னோடு சேர்ந்து நிற்கவைத்துக்கொண்டார்.
தாலிச்செயினும் கொலுசும் ஆத்தாவுக்கு அணிவிக்கப்பட்டு கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது.
“அம்மா நானு வரேங்கம்மா!” கிளம்பினாள் மயிலம்மா.
யாருமே எதிர்பார்க்காத நிலையில் சட்டென்று தன் கழுத்தில் அணிந்திருந்த எட்டு பவுன் செயினைக் கழற்றி மயிலம்மாவின் கழுத்தில் போட்டார் அந்தப் பெண்மணி.
அப்படியே அதிர்ந்து போய் விட்டாள் மயிலம்மா.
“அம்மா! என்னங்கம்மா இது.. என்னங்கம்மா இது.. இதெல்லாம் எதுக்கும்மா.. வேண்டாம்மா..” தவித்துப் போனாள்.
அவளின் கையைப் பிடித்துக் கொண்டார் அந்தப்பெண்மணி.
“ஆத்தா என்னோட நேர்த்திக் கடன ஏத்துக்காமதா நகைய காணாமப் போக வெச்சுட்டாளோன்னு நா தவிச்ச தவிப்ப நீங்கதான் மாத்தினீங்க பூக்காரம்மா. இதோ ஒக்காந்ருக்காளே இவள நா ஒங்க ரூபத்துல பாக்குறேன் பூக்காரம்மா. மறுக்காதிங்க பூக்காரம்மா” குரல் தழுதழுக்கக் கெஞ்சினார்.
“மயிலக்கா! மறுக்காதிங்க மயிலக்கா! மாரியாத்தா ஆடுற வெளையாட்டு இது. ஒங்க பொண்ணு கல்யாணத்துக்கு இவுங்க ரூவத்துல வந்து ஒதவ ஆத்தாதான் ஏற்பாடு பண்ணிருப்பா. ஆத்தா என்ன நெனைக்கிறா? என்ன செய்யிறான்னு யாருக்குத் தெரியும்?” அருள் வந்தவர்போல கத்தினார் பூசாரி.
“அம்மா! பூக்காரம்மா!” பணக்காரப் பெண்மணியின் கணவர் அழைத்தபடி அருகில் வந்தார்.
“இந்தாங்க பூக்காரம்மா! பூசாரி ஐயா ஒங்க பொண்ணுக்குக் கல்யாணம்னு சொன்னதக் கேட்டேன். சந்தோஷம்மா! இதுல ரெண்டு லட்சம் ரூவா பணமிருக்கு. ஆத்தா கோவில் உண்டியல்ல போட எடுத்து வந்தோம். தன் கோயில் உண்டியல்ல இந்தப் பணத்தப் போடுறதவிட ஒங்க பொண்ணு கல்யாணத்துக்கு இது ஒதவும்னு ஆத்தா சொல்றா மாதிரி மனசுக்குத் தோணுது” ரெண்டு லட்சம் பணமிருக்கும் பையை மயிலம்மாவிடம் நீட்டினார் பெண்மணியின் கணவர்.
“ஐயா! இது ரொம்ப அதிகம்யா! வேண்டாங்கய்யா!” இரண்டடி பின் வாங்கினாள்.
வற்புறுத்தி மயிலம்மாவின் கையில் திணிக்கப்பட்டது பணப்பை.
தான் நடத்தும் நாடகத்தைத் தானே பார்த்து மந்தகாசப் புன்னகையோடு ரசித்துக் கொண்டிருந்தாள் ஆத்தா கருக்காத்த மாரியாத்தா.
அவளுக்குத் தெரியும் யாருக்கு எதை எப்போது எப்படித் தர வேண்டுமென்று.
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்