இன்றைய சமூக அரசியல் மத சூழலில் ஒரு நாடு எவ்வாறு சமநிலையில் இருக்க வேண்டும் என்பதற்கு, சமீபத்தில் தமிழ் நாட்டில் நடந்த தர்மபுர ஆதீனகர்த்தரை பல்லக்கில் மனிதர்கள் சுமந்து செல்வது சரியா என்ற சர்ச்சையும், அதனை எவ்வாறு நீதித்துறை அரசியல், மத மற்றும் சமூக புரிதலோடு ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார்கள் என்பதுவுமே ஓர் எடுத்துக்காட்டு.
ஆதீனகர்த்தரை பல்லக்கில் மனிதர்கள் சுமந்து செல்லலாமா என்ற சர்ச்சை, திராவிடர் கழகத்தினர்களால் கிளப்பப்பட்டு ஒருபெரிய அரசியல் விஷயமாக விவாதப் பொருளாகி, பிறகு தமிழக அரசு அதற்கு அனுமதி அளித்ததால் ஒரு வழியாக முடிவுக்கு வந்துது.
ஆதீன மடத்தில் பாரம்பர்யமாக நடைபெறும் பட்டினப் பிரவேசம் விழாவில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியர் முதலில் தடை விதித்து உத்தரவு பிறப்பித்ததுதான் இதற்குக் காரணம்.
இதில் கொள்கை ரீதியான மற்றும் மனித உரிமை ரீதியான விவாதங்கள் நடப்பது ஒரு பக்கம். அதாவது மனிதனை மனிதன் சுமக்கலாமா? என்கின்ற வாதம் ஒன்று.
இதனைத்தான் திராவிடர் கழகம் முன்வைக்கிறது என்று அவர்கள் வாதிட்டாலும், ‘அவர்கள் நாத்திகர்கள் இதனைப்பற்றி பேசவோ கவலைப்படவோ தேவையில்லை’ என்கின்ற வாதமும் முன் வைக்கப்பட்டது.
இதில் கவலைப்பட வைத்த விஷயம் என்னவென்றால், இதை அரசியல் மதப்பிரச்சினையாக்கி, சில அரசியல்வாதிகளும் மதத்தலைவர்களும் தமிழ்நாட்டுகே உரித்தான அமைதியை விரும்புகின்ற மக்களை திசைதிருப்ப முனைந்ததுதான்.
சில மதத்தலைவர்கள் இந்த பிரச்சினையில் பெருமை காக்காமல் பேசினார்கள். ஒரு ஆதீனகர்த்தர் பேசினார், “நான் எனது உயிரை கொடுத்தாவது பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி நடத்துவேன். எனக்கு சோறுபோட்டது அந்த ஆதினம்”
ஒரு ஜீயர் சொல்கின்றார், “இந்த பல்லக்கு தூக்குகின்ற நிகழ்ச்சி நிறுத்தப்பட்டால், எந்த ஒரு அமைச்சரும் ரோட்டில் நடமாட முடியாது.” என்று.
அமைதியையும் நல்லிணக்கத்தையும் நல்லோழுக்கத்தையும் வளர்க்க வேண்டிய ஆன்மிகம், இப்படி சமுதாய அமைதியாய் குலைக்கின்றவாறு பேசலாமா?
நாம் மதக்குருக்களை, ஆன்மிக வளர்த்த ஆழ்வார்களை அமைதியின் வடிவமாகத்தானே பார்த்திருக்கின்றோம்; பார்க்க ஆசைப்படுகின்றோம்.
நமது ஆழ்வார்களும் நாவுக்கரசர்களும் ஆன்மிகம் என்றால் என்ன என்பதை நமக்கு சொல்லிக் கொடுத்துத்தானே சென்றிருக்கிறார்கள்.
சாந்தம், கனிவு எல்லாவற்றுக்கும் மேலாக உலகம் வாழவேண்டும், உய்ய வேண்டும் என்றல்லவா நமது ஆன்மிக வாதிகள் எண்ண வேண்டும் என்கின்ற விவாதத்திலும் கருத்திலும் நியாயம் இருக்கின்றது.
அடக்குமுறை வந்த போதும் நாவுக்கரசர், ‘நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்!’ என்றல்லவா ஆன்மிகம் என்றால் என்னவென்று மாமன்னனுக்கு காட்டினார். அவரது ஆயுதம் தேவாரம்தானே. இந்த மதத் தலைவர்கள் நமக்கு என்ன சொல்ல விழைகிறார்கள்.
‘நாங்களும் அரசியல்வாதிகளுக்கு இணையானவர்கள்’ என்று மக்களுக்கு சொல்ல விழைகிறார்களா?
தமிழ்நாடு ஆத்திகத்தையும் நாத்திகத்தையும் சேர்த்தே ஒரு சமமான (balanced view) நிலையுடன் பார்த்து நடத்தி வந்திருக்கின்றது.
இதற்கு பெரியார் ஈ.வே. ரா தொடங்கி நடத்திய நாத்திக கொள்கையுடைய இயக்கம், அதே காலகட்டத்தில் வாழ்ந்த சக்கரவர்த்தி ராஜகோபாலச்சரியர் தலைமை வகித்த காங்கிரஸ் இயக்கம் மற்றும் பிறகு அவர் தொடங்கிய பிரஜா சோசலிஸ்ட் கட்சி இவற்றை உதாரணமாக சொல்லலாம்.
இந்த இரு தலைவர்களும் கொள்கை ரீதியில் இரு துருவங்களாக இருந்தாலும் இணைந்து செயலாற்றி பல சமூக அரசியல் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டினர்.
பெரியார் ஈ.வே.ரா. திராவிடர் கழகத்தை தொடங்கி பல போராட்டங்களை நடத்தினார். இந்தி எதிப்பு, பிள்ளையார் சிலை உடைப்பு, ‘பிராமணாள் ஓட்டல்’ என்கின்ற பெயர்ப் பலகை எதிர்ப்பு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்கின்ற போராட்டம் வரை ஏராளமான போராட்டங்கள்.
எல்லா போராட்டங்களையும் பொது மக்களுக்கும், தான் எதிர்க்கின்றவர்களுக்கும் எந்த தனிப்பட்ட பாதகமும் இல்லாமல்தான் நடத்தினார்.
பிள்ளையார் பொம்மையை உடைத்த போது பிள்ளையார் பொம்மைகளை செய்துதான் உடைத்தார். அதே நேரத்தில் அவரது கொள்கைளில் மிகவும் தீவிரமாக இருந்தார்.
அவரது போராட்ட முறைகளில் ஒரு ஜனநாயக நெறி இருந்தது. அதனைப் போன்றே அவரது கொள்கைகளில் உடன்படாத, எதிர்த்த அப்போதிருந்த தலைவர்களிடமும் மதத் தலைவர்களிடமும் அந்த மரியாதை, நேர்மை இருந்தது. அதனால்தான் தமிழ்நாட்டில் ஆத்திகமும் நாத்திகமும் ஒரே காலத்தில் கைகோர்த்து சமூக மாற்றங்களை செய்யமுடிந்தது.
ஆன்மிகமும் நாத்திகமும் இணைந்து சமூக சேவை செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் பெரியார் ஈ.வே.ராவும் குன்றக்குடி அடிகளாரும் திகழ்ந்தார்கள்.
சமூக நீதி பிரச்சாரம், சாதியக் கொடுமைகளை எதிர்த்து பிரச்சாரம், தமிழ் வளர்ச்சி போன்ற விஷயங்களுக்காக இருவரும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்தார்கள்; பிரச்சாரம் செய்தார்கள். இருவரும் அவரவர் கொள்கையிலும் உறுதியாய் இருந்தார்கள்; சமூக சீர்திருத்தம், மாற்றம் என்கின்ற ஒரு நோக்கத்தில் இருவரும் இணைந்து செயலாற்றினார்கள்.
பெரியார் ஒருமுறை குன்றக்குடி அடிகளாரை பார்க்க அவரது மடத்திற்கு சென்றபோது அடிகளார் பெரியாருக்கு திருநீறு கொடுத்தார். பெரியார் அதனை மிகவும் மரியாதையுடன் வாங்கிக் கொண்டாராம்.
இதைப் பார்த்த பெரியாரின் தொண்டர் வியப்புடன் பெரியாரைப் பார்க்க, பெரியார் சொன்னாராம், “நாம் அவரது இடத்திற்கு வந்திருக்கின்றோம். அவர் அவரது வழியில் நமக்கு மரியாதை தருகின்றார். நாம் அதனை ஏற்றுக்கொள்வதுதான் நாகரிகம்.”
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இருவரும் நேர்மை, ஒழுக்கம், மனிதர்களை மதிப்பது போன்ற உயர்குணங்களைக் கொண்டிருந்தவர்கள்; போற்றியவர்கள்.
இன்று இந்த குணங்கள் குறைந்து விட்டன என்பதுதான் நாம் பார்க்கின்ற இந்த நிகழ்வுகளுக்குக் காரணம். இன்னுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் நாத்திகம் பேசுவது, பகுத்தறிவு கொள்கைகளை பிரச்சாரம் செய்வது என்பது குற்றம் என்கிற ஒரு சிந்தனையைக் கட்டியெழுப்பும் முயற்சிதான் அது.
ஒருவருக்கு ஆத்திகம் பேசுவதற்கு, ஆன்மிக வழிகளில் ஈடுபடுவதற்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ, அதேபோன்று நாத்திகம் பேசுவதற்கும் நாத்திகராக வாழ்வதற்கும் உரிமை இருக்கின்றது என்பதனை உணர வேண்டும்.
இவ்வாறான ஒருபோக்கை நாம் வளர்ந்த நாடுகளில் காணலாம். நமக்கே உரித்தான ‘நல்லது’ எது ‘கொட்டது’ எது என்று பார்த்து, தற்போது தான் இருக்கின்ற தனக்கு சாதகமான அரசியல் சமூக சூழலுக்கு ஏற்ப ஒரு தீர்ப்பு (judgemental) எடுத்து ‘நல்லது பக்கம்தான் நான்’ என்கின்ற நிலையையும் இதில் பார்க்க முடிகின்றது.
இதில் எவ்வளவு சுய சிந்தனை விருப்பு வெறுப்பற்றற்ற நிலை இருக்கின்றது என்று பார்த்தால் நமக்கு நாம் செய்வது சரியா இல்லையா என்பது புரியும்.
இது எப்படியென்றால் கடவுளுக்கும் மதத்திற்கும் எதிராக பேசுவது, செயல்படுவது மற்றும் கொள்கை ரீதியாக நாத்திகனாக இருப்பது பெருங்குற்றம் என்கின்ற மனப்பான்மை.
டார்வின் தனது பரிணாம வளர்ச்சிக் கொள்கையை வெளியிட்டு, கடவுள் மனிதனையும் இந்த உலகத்தையும் படைத்திருக்க வாய்ப்பில்லை என அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முற்பட்டபோதிலுருந்து இந்த ஆத்திக-நாத்திக விவாதங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இந்த ஆதினகர்த்தர் விஷயத்திலும் இதனைத்தான் நாம் பார்க்க முடிகின்றது.
விஷயம் ஆத்திகமா நாத்திகமா என்பதல்ல. விஷயம் பல்லக்கு தூக்குவது. மனிதனை மனிதன் தூக்குவது சரியா? என்பதுதான் கேள்வி.
யார் வெல்கிறார்கள் என்பதல்ல முக்கியம். இந்த விவாதம் வேண்டுமா இல்லை வேண்டாமா என்பதுதான் முக்கியம்.
அந்த அளவில் இந்த விஷயத்தின் மூலம், தமிழ் மக்கள் ஒரு தனித்தன்மை, தமக்கு என்று ஒரு குணம் கொண்டவர்கள் என்பதனை நிரூபித்து விட்டார்கள் என்றே சொல்லலாம்.
நன்றி இருவருக்கும்தான் – ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும். இந்த உலகம் ஆத்திகமும் நாத்திகமும் சேர்ந்ததுதான், இரண்டும் சேர்ந்ததுதான் வாழவேண்டும் என்பதை மற்று ஒருமுறை உணர்த்தியதற்காக.
Dr. இராமானுஜம் மேகநாதன்
பேராசிரியர் (மொழிக்கல்வி)
மொழிக் கல்வியியல் துறை
தேசிய கல்விஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்
புது தில்லி – 110016
மறுமொழி இடவும்