முரளியின் அறையை அடைந்தபோது கடிகாரத்தைப் பார்த்தான் மனோகர்.
மாலை 6.30 மணி.
அறையில் விளக்கு எரியவில்லை. அறைக் கதவு வெறுமனே சாத்தப்பட்டிருந்தது.
‘முரளி இருக்கிறானா, இல்லையா?’ சந்தேகத்துடன் மெதுவாகக் கதவைத் தள்ளித் திறந்து பார்த்தபோது அறை முழுக்கப் புகை மண்டலம்! சிகரெட் நாற்றம்.
முரளி அலங்கோலமாய்க் கட்டிலில் கிடந்தான். அருகே ஸ்டூலில் காலி விஸ்கி பாட்டில் – கண்ணாடி டம்ளர்கள் – சோடா பாட்டில்.
மனோகர் அதிர்ச்சியடைந்தான்.
‘என்ன ஆச்சு இவனுக்கு?’ தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டு, அலங்கோலமாய் கிடந்த முரளியின் லுங்கியைச் சரி செய்தவாறே அவனைத் தட்டி எழுப்பினான்.
முனங்கியவாறே தட்டுத் தடுமாறி எழுந்து உட்கார்ந்தான் முரளி. அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததால் நிதானம் இழந்து காணப்பட்டான்.
அவனைக் கைத்தாங்கலாய் பிடித்து பாத்ரூமுக்குள் அழைத்துச் சென்று அவன் முகத்தில் தண்ணீரை அடித்தான் மனோகர்.
முரளியின் கன்னங்களைத் தட்டி அசைத்து அவனை இயல்பான நிலைக்குக் கொண்டு வர, முயற்சித்தான்.
கொஞ்சம் நிதானத்திற்கு வந்த அவனை மீண்டும் அறைக்கட்டிலுக்குக் கூட்டி வந்தான்.
“டேய், என்ன கோலம் இது? இப்படி கண்மண் தெரியாமல் குடிச்சிட்டுக் கிடக்கிறீயே, உனக்கே இது சரியா படுதா? என்னை வரச் சொல்லிட்டு இப்படி இருக்கியே…”
மனோகர் கேட்டதும் முரளி மலங்க, மலங்க விழித்தான்.
“சொல்லுடா என்ன ஆச்சு உனக்கு?”
“வாழ்க்கையே வெறுத்துப் போச்சுடா. குடிச்சுக் குடிச்சே செத்திடலாமான்னு தோணுது”
“அப்படி என்ன தான் நடந்துடுச்சு உனக்கு?”
“என்னடா நடக்கணும் இனி. உலகத்துல பிறந்திட்டா மனுஷனுக்கு நிம்மதி முதல்ல வேணும். நிம்மதி இருந்தாலே எல்லாமே இருக்கிற மாதிரி தான்”
“ஊருக்குப் போகவே பிடிக்கலை. வீட்டுக்குப் போனா அப்பாவோட மிலிட்டரி தர்பார்தான். சுதந்திரமாக இருக்க முடியாது.
சீக்கிரம் எழுந்திருக்கணும்; நேரத்துக்குக் குளிக்கணும்; சாப்பிடணும். டி.வி.யில் பிடிச்ச நிகழ்ச்சியைப் பார்க்க முடியாது. டேப்ரிகார்டரில் இஷ்டத்திற்குக் கேசட் போட்டு பாட்டுக் கேட்க முடியாது.
வெளியே போனா, எங்கேன்னு சொல்லணும். நேரத்திற்கு வீட்டுக்கு வரணும். தம் அடிக்கக்கூட உரிமை கிடையாது. வீட்டுக்குத் திரும்பும் முன் வாயைக் கொப்பளித்து ஏதாவது பாக்கு வாயில் போட்டுக் குதப்பிட்டுத்தான் வரணும்.
என்ன வாழ்க்கையடா இது? எனக்கு வயசாகலே? நான் என்ன சின்னப் பையனா?
மாசா மாசம் சம்பளத்தை வாங்கி அவர் கையில் கொடுக்கணும், அப்புறம் அவரா பார்த்து செலவுக்குக் கொடுப்பதைத்தான் வாங்கிக்கணும். செஞ்ச செலவுக்கு கணக்கு கொடுக்கணும். சம்பாதிக்க ஆரம்பிச்சும் இன்னும் அடுத்தவர் கட்டுப்பாட்டில்தான் இருக்கணும்னா எப்படிடா?”
முரளி அடுக்கிக் கொண்டே போனான். மனோகருக்கு அவனைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை.
“முரளி! நீ சொல்றதெல்லாம் தப்புணு சொல்லலே. அதுக்காக இப்படித் தறி கெட்டு அலையணுமா என்ன?
சுதந்திரம் வேண்டும்தான். அதே சமயம் அந்த சுதந்திரம் ஓரளவு நம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால்தான் அதன் பயனை முழுமையாக நாம் அனுபவிக்க முடியும். பிள்ளைங்க கெட்டுக் குட்டிச் சுவராயிடக் கூடாதேங்கிற ஆதங்கத்துல தான் இப்படிக் கண்டிப்பா இருக்காங்க.
வீட்ல கிடைக்காத சுதந்திரத்தை இங்கே திருட்டுத்தனமாய், தவறான வழியிலே நீ அடைஞ்சிக்கிட்டிருக்கே. விளைவுகள் படுபயங்கராய் இருக்கும்ங்கிறதையே மறந்துட்டே.
என்னை எடுத்துக்கோ. எங்க வீட்ல எங்க அப்பா எப்பவும் பிசினஸ், பிசினஸ்னு தான் அலைவார். கார், பங்களா இப்படி எல்லா வசதியும் இருக்கு.
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர வேலையாட்கள் இருக்காங்க. நினைச்ச நேரத்துல தூங்கலாம். சாப்பிடலாம் எங்கேயும் போகலாம் வரலாம். வீட்டிலேயே டெக்கில் படம் பார்க்கலாம்.
இப்படி எல்லாச் சுதந்திரமும் இருக்கு. ஒன்றே ஒன்றைத் தவிர!” எனச் சொல்லி நிறுத்தினான் மனோகர்.
“என்னடா அந்த ஒண்ணு?”
“நிம்மதி” மனோகர் இப்படிக் கூறியதும் முரளிக்கு ஆச்சர்யம்!
“இவ்வளவு வசதி, சுதந்திரம் இருந்தும் நிம்மதி இல்லையா?” என்றான்.
“எங்க வீட்ல அப்பாவுக்கு சர்க்கரை வியாதி கொலஸ்ட்ரால், ரத்த கொதிப்பு எல்லாமே இருக்கு. எங்கம்மாவுக்கு ஆஸ்த்மா, ரத்த கொதிப்பு தவிர பாக்கி எல்லாமே பரம்பரைச் சொத்தா எனக்கும் இருக்கு.
யாருமே எதுவும் மனசுக்குப் பிடிச்சமாதிரி ருசித்துச் சாப்பிட முடியாது. மற்றதுல இருக்கிற சுதந்திரம் சாப்பாட்டு விஷயத்தில் இல்லை.
நாங்க எல்லோருமே அந்த சுதந்திரத்தைப் பறி கொடுத்துட்டு இருக்கோம். ஏன்னா, நிரந்தரமான சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாக்கும் கட்டுப்பாடு எங்க வீட்ல யாருக்கும் இல்லாததால், கட்டுப்படுத்த யாரும் இல்லாததால், அவரவர் இஷ்டத்திற்கு இருந்ததால் எவருக்குமே இப்போது நிம்மதி இல்லை.
சைக்கிள்ல போறவன் போகும் இடம் பள்ளம்னு தெரிஞ்சா, பிரேக்கை அழுத்திப் பிடிச்சி ஒருவிதக் கட்டுப்பாட்டுடன்தான் போகணும்.
பிரேக்கே இல்லேன்னா அல்லது பிரேக்கைப் பிடிக்காமலேயே இஷ்டத்திற்குப் போய்க்கிட்டிருந்தா என்ன ஆகும்? அது மாதிரி தான் சுதந்திரமும்! எல்லையில்லா சுதந்திரமும் ஆபத்துதான்.
சுதந்திரம்னா தான் தோன்றித்தனமாய் நம் இஷ்டத்திற்கு செயல்படறது இல்லேப்பா. நமக்கு நாமே ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கிட்டு ஆரோக்கியத்துடன் செயல்படுறதுதான்.”
மனோகர் பேசப் பேச, முரளி சிலையாய் அமர்ந்திருந்தான். அவனது போதை இப்போது முழுவதுமாகத் தெளிந்திருந்தது. சிந்தையும் தான்.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998