ஆனாய நாயனார் – இசையால் முக்தி பெற்றவர்

ஆனாய நாயனார் நமசிவாய‌ என்னும் ஐந்தெழுத்தினை புல்லாங்குழலில் இசைத்து முக்தி பெற்ற இடையர்.

ஆனாய நாயனார் மழநாட்டில் உள்ள திருமங்கலம் என்னும் திருத்தலத்தில் இடையராக அவதரித்தார்.

மழநாடு என்பது இன்றைய திருச்சி அருகே உள்ள‌ திருவானைக்கா மற்றும் அதனைச் சுற்றிலுள்ள பகுதிகளைச் சார்ந்தது.

திருமங்கலம் என்னும் திருத்தலம் லால்குடி ரயில் நிலையத்திலிருந்து வடமேற்கில் சுமார் 4 கிமீ தொலைவில் உள்ளது.

இவர் தோன்றிய இடையர் குலத்திற்கு ஏற்ப ஆவினங்களை மேய்த்து வரும் தொழிலைச் செய்து வந்தார்.

இவர் ஆவினங்களை முல்லை நிலத்திற்கு ஓட்டிச் செல்லும் போது கையில் கோலும் புல்லாங்குழலும் கொண்டிருப்பார்.

இடையராக இருந்த போதிலும் இவருக்கு சிவனாரிடம் அலாதிப் பிரியம். எப்போதும் வெண்ணீறு அணிந்த சிவனாரை எண்ணிக் கொண்டே இருப்பார்.

ஆதலால் புல்லாங்குழலில் நமசிவாய‌ என்னும் ஐந்தெழுத்தினை அழகாக இசைப்பார். இவருடைய புல்லாங்குழல் இசையில் ஆவினங்கள் தங்களை மெய் மறந்து நிற்கும்.

கார்காலத்தில் ஓர்நாள் ஆனாய நாயனார் நெற்றியில் வெண்ணீறு அணிந்து கோலோடும் புல்லாங்குழலோடும் ஆவினங்களை மேய்க்க காட்டிற்குப் புறப்பட்டார்.

கார்காலத்தின் செழுமையால் முல்லைவனம் பூத்துக் குலங்கியது.

இயற்கையை ரசித்தவாறே சென்ற ஆனாயனாரின் கண்களில் மஞ்சள் நிறத்தில் சரம் சரமாக மாலைபோல் விளங்கும் கொன்றை மரம் தென்பட்டது.

அம்மரம் கொன்றை அணிந்த சிவனாராகவே ஆனாயருக்குத் தோன்ற தன்னுடைய புல்லாங்குழலில் திருஐந்தெழுத்தினை முறையாக பண் அமைத்து வாசிக்கத் தொடங்கினார்.

பக்திப் பெருக்கும், இறை அர்ப்பணிப்பும் நிறைந்த புல்லாங்குழல் கானம் முல்லை வனம் எங்கும் ஒலித்தது.

இசையால் மயங்கிய ஆவினங்கள் மற்றும் முல்லை வனத்து விலங்குகளான மான், புலி, கரடி, யானை, பாம்பு, மயில் உள்ளிட்டவைகள் தம்நிலை மறந்தன.

முல்லை நிலத்து விலங்குகள் தம்முடைய இயல்பு மாறி எல்லாம் ஒன்றாக ஆனாயரைச் சுற்றி நின்றன.

உயிரினங்கள் மட்டுமின்றி ஆறுகள், நீரோடைகள், மலைகள், மேகங்கள் என மொத்த உயிர்சூழலும் ஆனாயனாரின் இசை வெள்ளத்தில் தன்னிலை மறந்து மயங்கி நின்றன.

சிவனாரும் ஆனாயனாரின் இசையில் ஒன்றி அவ்விடத்தில் உமையம்மையோடு காட்சி அளித்தார்.

சிவபெருமான் “ஆனாயா, நீ இந்த நிலையிலேயே எம்மை வந்து அணைவாயாக.” என்று அருளினார்.

இறைவனின் விருப்பப்படி ஆனாயனாரும் திருஐந்தெழுத்தை புல்லாங்குழலில் இசைக்க சிவலோகம் சென்றார்.

ஆனாய நாயனார் குருபூஜை கார்த்திகை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் போற்றப்படுகிறது.

புல்லாங்குழலில் திருஐந்தெழுத்தினை இசைத்து வீடுபேறு பெற்ற ஆனாய நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘அலைமலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்’ என்று புகழ்கிறார்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.