ஆன்மீக ஆனி

ஆன்மீக ஆனி

தமிழ் வருடத்தின் மூன்றாவது மாதமாக ஆனி வருகிறது. இது “ஜேஷ்டா மாதம்” என்று அழைக்கப்படுகிறது. ஜேஷ்டா என்றால் பெரிய, மூத்த என்று பொருள். ஏனைய தமிழ் மாதங்களை விட அதிக நாட்களைக் கொண்டுள்ளது. மேலும் இம்மாதத்தில் தான் இந்தியாவில் நீண்ட பகல் பொழுது உள்ளது. சுமார் 12 மணி நேரம் 38நிமிடங்கள் பகல் பொழுதாக உள்ளன.

வானவியல் ஆராய்ச்சி செய்வதற்கும் இம்மாதம் சிறந்ததாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மேலும் உத்ராய காலத்தின் கடைசி மாதமாக இது உள்ளது.

இம்மாதத்தில் ஆனி திருமஞ்சனம், ஜேஷ்டா அபிசேகம், அபரா ஏகாதசி, பீம ஏகாதசி, முப்பழத்திருவிழா, சாவித்திரி விரதம் போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

அருணகிரிநாதர், பெரியாழ்வார், நாதமுனிகள் போன்ற ஆன்மீகப் பெரியோர்கள் இம்மாதத்தில் தோன்றியோர் ஆவர். மாணிக்கவாசகர் இறைவனுடன் ஐக்கியமானதும் இம்மாதத்தில் தான்.

 

ஆனி திருமஞ்சனம்

திருமஞ்சனம் என்ற சொல்லுக்கு புனித நீராட்டல் என்று பொருள் கூறப்படுகிறது. திருமஞ்சனம் என்பது ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடராஜ பெருமானுக்கு நடைபெறும் அபிசேகம் மற்றும் ஆராதனையைக் குறிக்கும்.

சிவனின் 64 மூர்த்தி வடிவங்களில் ஒன்றான நடராஜருக்கு மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம், சித்திரை திருவோணம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி, மாசி வளர்பிறை சதுர்த்தசி ஆகிய நாட்கள் என‌ வருடத்திற்கு ஆறு முறை அபிசேகம் மற்றம் ஆராதனைகள்  நடைபெறுகின்றன.

அதில் மார்கழி திருவாதிரையும், ஆனி உத்திரமும் சிறப்பு வாய்ந்தவை. இவ்விரண்டு விழாக்களும்  தில்லை சிதம்பரத்தில் பிரம்மோற்சவமாக மொத்தம் 10 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

ஆனி கார்த்திகை அன்று திருமஞ்சன விழா ஆரம்பமாகிறது. முதல் எட்டு நாட்கள் விநாயகர், சுப்ரமணியர், சோமஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டேசுவரர் ஆகியோர் வாகனங்களில் வீதி உலா வருகின்றனர்.

ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தில் விநாயகர், சுப்ரமணியர், நடராஜர், சிவகாமியம்மை, சண்டேசுவரர் ஆகியோர் தனித் தனித் தேர்களில் வலம் வருகின்றனர். பின் நடராஜர் சிவகாமி அம்மையுடன் யானைகள் தாங்கியது போல் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் இரவில் தங்குவார்.

10-ம் நாளான ஆனி உத்திரத்தன்று அதிகாலையில் நடராஜருக்கும் சிவகாமி அம்மைக்கும் சிறப்பு அபிசேகங்கள் நடைபெறும்.  ஆனி உத்திரத்தன்று பகல் 1 மணி அளவில் நடராஜரும் சிவகாமி அம்மையும் நடனம் செய்தபடியே சித்சபையில் எழுந்தருளுகின்றனர். நடராஜரும், சிவகாமி அம்மையும் மாறி மாறி நடனம் செய்து சிற்றம்பல மேடையில் எழுந்தருளும் நிகழ்ச்சியைக் காண மக்கள் பெருந்திரளாகக் கூடியிருப்பர்.

நடராஜ பெருமானுக்கு சாயுங்காலத்தில் (பிரதோசவேளையில்) சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து அலங்காரமும் நடைபெறுகின்றது. இதனையே ஆனித் திருமஞ்சனம் என்கிறோம்.

இந்நிகழ்ச்சியின் போது நடராஜருக்கு 16 வகை தீபாரதனை நடைபெறுகிறது. பின் இரவு மீண்டும் சித்சபையில் கடாபிசேகம் நடைபெறுகிறது. ஆனித்திருமஞ்சன நிகழ்ச்சியை பதஞ்சலி முனிவர் ஆரம்பித்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மூலவர் நடராஜரே வெளியே வருவது சிறப்பு வாய்ந்ததாகும்.

 

நடராஜர் ரூபம்

ஒரு முறை பதஞ்சலியும், வியாக்கிரத பாதரும் சிவனின் நடனத்தைக் காண வேண்டி சிதம்பரத்தில் தவமிருந்தனர். சிவன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று புலித்தோலை ஆடையாகவும், நாகங்களை ஆபரணமாகவும் அணிந்து வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும் மறுகையால் தூக்கி திருவடியைக் காட்டியும், இடது காலை முயலகன் மேல் வைத்தும் வலது காலைத் தூக்கியும் உடல் முழுவதும் வெண்ணீறு பூசியும் நடனம் ஆடினார். அவரது விரிந்த சடைகள் காற்றில் இங்கும் அங்கும் அசைந்தன. இவ்வாறே இன்றும் சிதம்பரத்தில் எல்லோருக்கும் அருள் புரிகின்றார்.

ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாகவும் தம்பதிகளக்கு சுகமான வாழ்வும் கிடைப்பதாகவும், கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்றும் ஆண்களுக்கு மனதில் தைரியமும், உடல் பலமும், வளமும் கூடும் என்றும் கருதப்படுகிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்க இவ்விழா நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனி உத்திரத்தோடு வரும் பஞ்சமி, வசந்த பஞ்சமி என்று கூறப்படுகிறது.

 

ஜேஷ்டாபிசேகம்

ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருக்கு ஆனி கேட்டை நட்சத்திரத்தில் அபிசேகம் மற்றம் தைலக்காப்பு வைபவமும் நடைபெறுகிறது. இதுவே ஜேஷ்டாபிசேகம் என்று அழைக்கப்படுகிறது. கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்ற பெயர் உண்டு. எனவே இந்நட்சத்திர நாளில் நடைபெறும் அபிசேகம் ஆதலால் இது ஜேஷ்டாபிசேகம் என்று அழைக்கப்படுகிறது.

இவ்வபிசேகத்திற்கு வழக்கமாக வடபுறத்தில் ஓடும் கொள்ளிடத்தில் நீர் எடுப்பதற்கு பதிலாக தென்புறத்தில் ஓடும் காவிரியில் புனித நீர் தங்கக் குடங்களில் எடுக்கப்பட்டு யானை மேல் வைத்து ஆழ்வார்களின் பாசுரங்களைப் பாடியபடி எடுத்து வந்து பெருமாளுக்கு அபிசேகம் நடத்தப்படுகிறது.

பின் பெருமாளுக்கு அரிய மூலிகைகள் கலந்த தைலக் காப்பு இடப்படுகிறது. மறுநாள் பெரிய பாவாடை வைபவம் நடைபெறுகிறது. இந்நிகழ்வின் போது மா, பலா, வாழை, தேங்காய் துருவல், நெய் ஆகியவற்றைச் சேர்த்து பிரசாதமாக பெருமாளுக்கு படைக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமையில் தாயாருக்கு ஜேஷ்டாபிசேகமும், அடுத்த நாள் பெரிய பாவாடை வைபவமும் நடைபெறுகிறது. தேவர்களின் தலைவனான இந்திரன் தன்னுடைய பணி சிறக்க ஜேஷ்டாபிசேகம் செய்து வழிபட்டதாகக் கருதப்படுகிறது.

எனவே உயர் பதவியில் இருப்போர், தலைமைப் பொறுப்பு வகிப்போர், தொழில் அதிபர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் பணி சிறக்க அருளுமாறு பெருமாளை வேண்டுகின்றனர்.

 

பழனியில் அன்னாபிசேகம்

திருஆவினன்குடி எனப்படும் பழநியில் உற்சவ மூர்த்திக்கு ஆனிக் கேட்டையில் அன்னாபிசேகம் நடைபெறுகிறது. மேலும் ஆனிமாதம் விசாகத்தன்று ஆனித் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

மூலம் நட்சத்திரத்தில் குழந்தை வேலாயுத சுவாமிக்கு மாலை பூஜையில் அன்னாபிசேகம் நடைபெறுகிறது. ஆனி அமாவாசையும், ஆனி கிருத்திகையும் திருமஞ்சனம் செய்ய உகந்ததாக கருதப்படுகிறது.

பஞ்ச பூத தலங்கள், பஞ்சசபை தலங்கள் ஆகியவற்றில் இறைவனுக்கும் இறைவிக்கும் இம்மாதத்தில் சிறப்பு அபிசேகங்கள் ஆராதனைகள் நடைபெறகின்றன. நடராஜர் உள்ள தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.

 

ஆனி பௌர்ணமி

ஆனி பௌர்ணமி அன்று சாவித்திரி விரதம் மேற் கொள்ளப்படுகிறது. பிரம்மனின் மனைவியான சாவித்திரி தேவியை நினைத்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரதமுறையை மேற்கொள்வதால் பெண்கள் தங்களுக்கு மாங்கல்யபலம், ஐஸ்வரியம், நீண்ட ஆயுள் கிடைப்பதாக கருதுகின்றனர்.

ஆனி பௌர்ணமி அன்று காரைக்காலில் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது. இறைவன் வீதி உலா வரும்போது மக்கள் வீட்டு மாடியிலிருந்து கூடை கூடையாக மாம்பழங்களை அபிசேகிக்கின்றனர்.

பெண்கள் தங்கள் மடியில் மாம்பழங்களை பிடிக்கின்றனர். மடியில் மாம்பழங்கள் கிடைத்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

பின் இரவு காரைக்கால் அம்மையார் பேயுரு வாங்கி கயிலை செல்லும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இறைவன் ஒரு வாகனத்திலும் காரைக்கால் அம்மையார் ஒரு வாகனத்திலும், கொண்டு வரப்படுகின்றனர். அப்போது எல்லா இடங்களிலும் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.

காரைக்கால் அம்மையிடமும் இறைவனிடமும் ஒரு தீப்பந்தம் ஏற்படுகிறது; பின் காரைக்கால் அம்மையின் தீபந்தத்தை இறைவனடைய தீபந்தத்துடன் கலந்து விடுகின்றனர். இந்நிகழ்ச்சி காரைக்கால் அம்மையார் இறைவனுடன் கலந்தலைக் குறிப்பிடுவதாக உள்ளது.

 

அபராஏகாதசி

ஆனிமாதம் தேய்பிறை அன்று வரும் ஏகாதசி அபரா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் பெருமாளை திரிவிக்ரமனாக மக்கள் வழிபடுகின்றனர். இவ்வழிபாடு செய்வதன் மூலம் பிரம்மஹத்தி தோசம், பொய்சாட்சி, குருநிந்தனை ஆகியவற்றால் ஏற்பட்ட பாவம் நீங்கும்.

 

நிர்ஜலா ஏகாதசி (அ) பீம ஏகாதசி

ஆனிமாதம் வளர்பிறை அன்று வரும் ஏகாதசி நிர்ஜலா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இவ்விரதத்தில் போது தண்ணீர் அருந்தக் கூடாது. ‘நிர்’ என்றால் ‘இல்லை’,’ ஜலா’ என்றால் ‘தண்ணீர்’. எனவே இவ்விரதம் தண்ணீர் அருந்தாமல் கடைப்பிடிக்கப்படுகிறது.

எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருந்தால் கிடைக்கும் விரதபலனை நிர்ஜலா ஏகாதசியால் விரதம் இருந்து பெறலாம் என வியாசர் மகாபாரதத்தில் பீமனிடம் கூறினார்.

பீமனும் தண்ணீர் கூட அருந்தாமல் இவ்விரதமுறையைப் பின்பற்றி பலன் பெற்றதாக மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்விரதமுறை பீமபூஜை என்று அழைக்கப்படுகிறது. இவ்விரதத்தில் ஆழ்மனதில் இறை தியானத்தை பீமன் மேற்கொண்டார்.

மேலும் ஏகாதசி முடிந்து துவாதசி அன்றே உணவினை உண்டார் என்பதால் பீமன் மேற்கொண்ட விரத நெறிகளான தண்ணீர் கூட அருந்தாமல் ஆழ்மனதில் இறை சிந்தனை கொண்டு இன்றளவும் இவ்விரதம் பின்பற்றப்படுகிறது.

 

ஆனி மாதத்தை சிறப்புறச் செய்தவர்கள்

அருணகிரிநாதர், பெரியாழ்வார், நாதமுனிகள் ஆகியோர் ஆனி மாதத்தில் தோன்றியவர்கள் ஆவார். மாணிக்கவாசகர் ஆனி மாதத்தில் தான் சிவ பரம்பொருளை அடைந்தார்.

திருப்புகழ் பாடி முருகனின் பெருமை எடுத்துக் கூறிய அருணகிரி நாதர் ஆனி பௌர்ணமி, மூலத்தில் பிறந்தார். ஆண்டாளின் தந்தையும், ஆழ்வார்களில் ஒருவருமான பெரியாழ்வார் ஆனிமாதம் சுவாதியில் பிறந்தார்.

மேலும் ஆழ்வார்களின் பாசுரங்களைத் தொகுத்து நாலாயிர திவ்யபிரபந்தமாக்கி அதனை இசையுடன் கோவில்களில் பாடச் செய்தவரும், ஆடிப் பாடுதல் என்னும் அரையர் சேவை அறிமுகம் செய்தவருமாகிய நாத முனிகள் ஆனி அனுஷத்தில் பிறந்தார்.

திருவாசகம், திருக்கோவையார் என்னும் நூல்களை அளித்த மாணிக்க வாசகர் ஆனிமகத்தில் சிதம்பரத்தில் இறைவனுடன் ஐக்கியமடைந்தார்.

ஆனிமாத ஆன்மீக விழாக்களில் கலந்து கொண்டு நாமும் ஆன்ம நலம் பெறுவோம்.