ஆன்றோர்களுக்கு வெற்றி சேர்ப்பிக்கின்றோமா?

ஆன்றோர்களுக்கு வெற்றி சேர்ப்பிக்கின்றோமா? என்ற இக்கட்டுரை, எங்கே போகிறோம் என்னும் நூலில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுதியது.

இந்தியா பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வரலாற்றுப் பழமை உடையது. இந்த நாட்டினுடைய பழமைக்கு ஈடாக வேறு எதுவும் சொல்ல முடியாது.

அந்தப் பழமையினுடைய வரலாற்றுப் பெட்டகங்கள் ஏராளம் உண்டு. இந்திய நாட்டு வரலாறு தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது.

ஏராளமான வரலாற்றுப் படிப்பினைகளை இந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்கள்.

வரலாற்றுப் படிப்பினைகளை இந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டு, புதியன கண்டு, போர்க் குணத்தோடு போராடி வந்திருந்தால் இன்றைக்கு இந்த நாட்டினுடைய அமைவே வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

ஆயினும் அவர்கள் படிப்பினைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

 

இந்தியாவில் இருக்கின்ற இலக்கியங்களில் மிகப் பழமையானவை இதிகாசங்கள். இராமகாதை, பாரதம்.

இந்த இரண்டு இதிகாசங்களும் மிகப் பழமையானவை, என்பது மட்டுமல்ல. வாழ்க்கைக்குரிய நெறிகளை, முறைகளை நமக்கு ஏராளமாகப் புகட்டுகின்றன.

இவைகளைப் பற்றி நாம் படித்துத் தெரிந்து கொண்டது ஓரளவு தான். ஆனாலும், எங்கு பார்த்தாலும் இராமனுக்குப் புகழ் பாடுபவர்கள் உணர்க. பாரதத்திற்குப் பறைசாற்றுபவர்கள் உண்டு.

எனினும், இராமகாதையினாலும், பாரதத்தினாலும், படித்துக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?

இராம காதையிலிருந்த கோசல நாடு என்ன? இலங்கை நாடு என்ன?

இன்றைக்கு இருக்கிற நம்முடைய நாடு என்ன?

ஒப்பு நோக்கிப் பார்த்தோமா?

புராணங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஏராளமான புராணங்கள்! அந்தப் புராணங்களும் கூட, தெரிந்தோ, தெரியாமலோ சண்டைகளைப் பற்றியே நிறைய பேசிவிட்டன.

கடவுளுக்கும், தேவர்களுக்கும் சண்டைகள்!

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டைகள்!

மூன்று தேவர்களுக்கிடையில் சண்டைகள்!

இப்படிச் சண்டைகளைப் பற்றியே இந்தியா ஏன் சிந்தித்துக் கொண்டிருந்தது என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. இந்தச் சண்டைகளை மறப்பது அவசியம்.

இந்திய இலக்கியங்கள் ஒரு பூங்கா

இலக்கிய உலகத்திற்குள் நுழைந்தால், இந்திய மொழி இலக்கியங்கள் ஒரு பூங்கா என்று சொல்லலாம்.

பெரிய கருவூலமாக இருக்கின்ற உபநிடத்திலிருந்து, நம்முடைய இராமானுசர் காலம் வரையில், ஏன், நம்முடைய பாரதி காலம் வரையில் இலக்கிய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வந்தால் ஏராளமான படிப்பினைகள்!

பழைய உபநிஷத்து ஒன்று கூறுகிறது.

ஒன்றாக உழையுங்கள்!

ஒன்றாக உண்ணுங்கள்!

ஒன்றாக இருங்கள்!

ஒன்றாக வாழுங்கள்! என்று.

இது வேதங்களின் மணிமுடிச் சிகரமாக உள்ள உபநிடத்தின் வார்த்தைகள்.

 

இன்றைக்கு எங்கே அப்படி வாழுகிறோம்?

ஒன்றாக உண்ணுவதிலேயே சாதி முறைகள் குறுக்கிடுகின்றன.

இராமகாதையை எடுத்துக் கொண்டால், கம்பன் அற்புதமாக ஒரு நாட்டை எண்ணிப் பார்க்கிறான். அவனுடைய லட்சிய நாடு அது.

அவனுடைய கோசல நாடு அப்படியிருந்ததா? தெரியாது. அவன் கண்ட இலங்கை நாடு அப்படியிருந்ததா? சொல்ல முடியாது.

ஆனாலும் கம்பன் தன்னுடைய இலட்சிய நாடு ஒன்றை தன்னுடைய காதையில் நினைவூட்டுகிறான்.

கள்வரும், காவல் செய்வாரும் இல்லாத நாடாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.

எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் பெறவேண்டுமென்று ஆசைப்படுகின்றான். இன்று இந்த நாட்டினுடைய நிலைமை என்ன? எண்ணிப் பாருங்கள்.

 

புறநானூற்றுக் காலத்திற்கு வந்தால், உலக சர்வ தேசிய இளைஞனைப் போல விளங்குகின்றான் கணியன் பூங்குன்றன்.

ஓர் உலகம் என்னும் கருத்து அறிவியல் பூத்துக் குலுங்கிய பின்னர் மேற்றிசை நாட்டில் தோன்றிய கருத்து. இன்னும் சொல்லப் போனால் அச்சத்தில் தோன்றிய கருத்து.

ஆனால் கணியன் பூங்குன்றன் அன்புதழுவிய நிலையில் ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்’ என்று பாடுகின்றான்.

‘எல்லா ஊர்களும் என்னுடைய ஊர். எல்லாரும் என்னுடைய சுற்றத்தார்’ என்ற கணியன் பூங்குன்றன் பிறந்த மண்ணில் இன்றைக்கு ஜாதி, குலம் போன்ற வேற்றுமைகள் பிரிந்து வளர்ந்து வருகின்றன.

பழைய காலத்தில் சாதி வேற்றுமைகள் இருந்ததுண்டு. ஆனாலும் அந்த வேற்றுமைகள் நெகிழ்ந்து கொடுத்தன. இன்று அவை நெகிழ்ந்து கொடுக்காமல் இறுக்கமடைந்து வருகின்றன என்பதை அன்பு கூர்ந்து எண்ணிப் பாருங்கள்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருவள்ளுவர்,

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’என்று சொன்னார்.

பிறப்பில் உயிர்களிடையே வேறுபாடு இல்லை. அனைவரும் சமம் என்று சொன்னார்.

அதையே வழி மொழிந்த அப்பரடிகள், ‘இந்த நாட்டில் சாதி இல்லை. சாதிகளைச் சொல்பவர்கள் சழக்கர்கள்‘ என்று மிகக் கடுமையாகச் சாடினார்.

 

எல்லோருக்கும் மேலாக புரட்சி பூத்த மண்ணாகிய பசும்பொன் மாவட்டத்துத் திருக்கோட்டியூர் மதில் மேல் ஏறி, ஒரு பெருந்தகை உபதேசித்தார்.

மந்திரத்தை எல்லா மக்களுக்கும் வாரிக் கொடுத்தார். அவருடைய ஆச்சாரியன் ‘இந்த மந்திரத்தை நீ மற்றவர்களுக்குச் சொன்னதால் நீ நரகத்திற்குப் போவாய்‘ என்று சொன்னார்.

கோடானுகோடிப் பேர் வைகுந்தத்துக்குப் போகும்போது நான் நரகத்திற்குப் போனால் என்ன?‘ என்று இராமாநுசர் கேட்டார்.

அந்த இராமாநுசர் பிறந்த மண்ணில் இன்றைக்குச் சுயநலமே வளர்ந்து வருகிறது. பிறர் நலம் குறைந்து வருகிறது.

 

நாட்டுக்கு உழைத்தல் தவம் என்று பாரதி சொன்னானே, அந்த தவம் மீண்டும் தோன்ற வேண்டும். அந்தத் தவத்தை வளர்க்க வேண்டும். அந்தப் பெருமக்கள் காலத்தை வென்றார்களா?

எத்தனை சிறந்த கவிஞர்கள், தத்துவ ஞானிகள், தத்துவ ஞானிகள், மேதைகள் இந்த நாட்டில் தோன்றினார்கள்?

அவர்கள் காலம் கடந்து நம்மால் பாராட்டப்படுகிறார்கள். போற்றப்படுகிறார்கள்.

ஆனால் அவர்களை நாம் பின்பற்றுகிறோமா?

அவர்களுடைய வழித் தடத்தில் நாம் நடக்கின்றோமா?

அவர்களுடைய சிந்தனைகளுக்கு செயல்களுக்கு நாம் இடம் கொடுத்திருக்கின்றோமா?

ஆன்றோர்களுக்கு வெற்றி சேர்ப்பிக்கின்றோமா? என்றால் இல்லை.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.