இன்றைய காலகட்டத்தில் ஆபத்து விபத்துக்கள் என்பது சர்வசாதாரணமாகி விட்டது. அவ்வாறு ஆபத்து விபத்துக்கள் நேராமல் காக்கும் பதிகம் ஒன்று உள்ளது.
பிரயாணத்தின் போது இதனைப் பாராணயம் செய்தால் நலம் பெறுவது என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. இந்த அற்பத பதிகத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ஆபத்து விபத்துக்கள் நேராமல் காக்கும் பதிகம் திருநாவுக்கரசரால் இறைவனான சிவபெருமானை நினைத்துப் பாடப் பெற்றது. சமணர்களின் சூழ்ச்சியால் பல்லவ மன்னன் திருநாவுக்கரசரை சுண்ணாம்பு நீற்றறையில் அடைத்தபோது அவர் இப்பதிகத்தைப் பாடினார்.
இப்பதிகம் இறையருளால் சுண்ணாம்பு நீற்றறை என்ற ஆபத்தில் இருந்து, விபத்து ஏதும் திருநாவுக்கரசருக்கு ஏற்படாமல் அவரைக் காப்பாற்றியது. இனி அப்பதிகம் பற்றிப் பார்ப்போம்.
மாசில் வீணையும்
மாலை மதியமும்
வீசு தென்றலும்
வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை
பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை
இணையடி நீழலே!
நமச்சி வாயவே
ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே
நானறி விச்சையும்
நமச்சி வாயவே
நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே
நன்னெறி காட்டுமே!
ஆளா காராளா
னாரை அடைந்துய்யார்
மீளா வாட்செய்து
மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளா தசுரை
யோதொழும் பர்செவி
வாளா மாய்ந்துமண்
ணாகிக் கழிவரே!
நடலை வாழ்வுகொண்
டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது
சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு
துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந்
தூர்முனி பண்டமே!
பூக்கைக் கொண்டரன்
பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன்
நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை
தேடி அலமந்து
காக்கைக் கேயிரை
யாகிக் கழிவரே!
குறிக ளுமடை
யாளமுங் கோயிலும்
நெறிக ளுமவர்
நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம்
ஆரணம் ஓதிலும்
பொறியி லீர்மன
மென்கொல் புகாததே!
வாழ்த்த வாயும்
நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந்
தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர்
தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை
யேன்நெடுங் காலமே!
எழுது பாவைநல்
லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றிநின்
றேனையுஞ் சூழ்ந்துகொண்
டுழுத சால்வழி
யேயுழு வான்பொருட்
டிழுதை நெஞ்சமி
தென்படு கின்றதே!
நெக்கு நெக்கு
நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன்
னார்சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர்
பூவுநீ ருங்கண்டு
நக்கு நிற்ப
ரவர்தம்மை நாணியே!
விறகிற் றீயினன்
பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன்
மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்
டுணர்வு கயிற்றினான்
முறுக வாங்கிக்
கடையமுன் னிற்குமே!