ஆபீஸ் கோயிங்…

கோழியும் வேண்டாம்

சேவலும் வேண்டாம்

கூவி எழுப்ப…

விடிந்தே ஆக வேன்டும்

எழுந்தே ஆக வேண்டும்

விடியலும் இவளும்

ஒன்றுதான்!

கணவன் பிள்ளைகள்

உறக்கமும் கலைக்க‌

மனமேயில்லை அவளுக்கு

வேகமாய் ஓடுவாள் பாலுக்கு

காபி குடித்து காய்கள் நறுக்க‌

வயிறு கலக்கும்

தனிமை உத்தரவாதம்

டாய்லெட்டில்தான்!

கால் தரித்து வெளியில் வர‌

கடமைகள் ஆயிரம்

குக்கர் மிக்ஸி சத்தம்

கடிகார முள் கொட்டும் சத்தம்

கணவன் பிள்ளைகள்

கலாட்டா சத்தம்

அவளது காலை நேரச் சங்கீதங்கள்!

உடை உடுத்தி விடுவான் அவன்

ஊட்டி விடுவாள் அவள்

ஸ்கூல் பஸ்ஸில் பிள்ளைகள் போக‌

போரில் பாதி வெற்றி!

குளித்தது பாதி

முடிந்தது பாதி

ஈரத்தலையின் நீர்த்துளிகள்

வீடு நனைக்க‌

புடவையா சுடிதாரா

நேரம்தான் தீர்மானிக்கும்!

ஒரு நிமிடத்தில் என்ன வேண்ட முடியும்

கடவுளிடம்?

அவளுக்கே அவள் பூரணமில்லை

அடுத்தவரை எப்படி பூரணமாக்க‌?

கணவன் போகிறான்

ஏதோ குறைகள் சுமந்து!

இரு சக்கர வாகனம்

தன் மடியில் இருத்திக் கொள்கிறது!

உயிரற்ற பொருளோடு

உடல் பொருத்தி

போகிறாள்

அடுத்த போருக்கு!

முனைவர் க.வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849