ஆப்பிரிக்கா சவானாவின் பிரபலமான பறவைகள்

ஆப்பிரிக்கா சவானாவின் பிரபலமான பறவைகள் மிக அழகானவை.

ஆப்பிரிக்காவில் உள்ள சவானா புல்வெளி, பல்வேறு விலங்குகள் மற்றும் தாவரங்களைக் கொண்டு, பல்லுயிர் தன்மை மிக்கதாக விளங்குகிறது.

அங்கே பல்வேறு வகையான‌ பறவைகள் காணப்படுகின்றன.

ஆப்பிரிக்கா சவானாவின் பிரபலமான பறவைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

 

ஆக்ஸ் பெக்கர் (Ox pecker)

ஆக்ஸ் பெக்கர்
ஆக்ஸ் பெக்கர்

 

ஆக்ஸ் பெக்கர் ஆப்பிரிக்கன் சவானாவில் காணப்படும் ஒட்டகசிவிங்கி, வரிக்குதிரை, இம்பாலாமான்கள், காட்டெருமைகள், நீர்யானைகள் உள்ளிட்ட விலங்குகளின் உடலில் காணப்படும் உண்ணிகள், ஈக்கள் ஆகியவற்றை உண்டு வாழும் பறவையாகும்.

இப்பறவைகளில் சிவப்பு அலகு, மற்றும் மஞ்சள் அலகு கொண்ட ரெட் பில்ட் ஆக்ஸ் பெக்கர், எல்லோ பில்ட் ஆக்ஸ் பெக்கர் என இரண்டு வகைகள் உள்ளன.

சாம்பல் கிரீட கொக்கு (Grey Crowned Crane)

சாம்பல் கிரீட கொக்கு
சாம்பல் கிரீட கொக்கு

 

இது ஆப்பிரிக்கன் சவானாவில் உள்ள கொக்கு குடும்பத்தைச் சார்ந்த பறவையாகும். இது உகாண்டாவின் தேசியப் பறவையாகும்.

இது உகாண்டா நாட்டின் கொடியில் இடம் பெற்றுள்ளது. தற்போது இது அழிந்து வரும் இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லிலாக் பிரெஸ்டெட் ரோலர் (Lilac Breasted Roller)

லிலாக் பிரெஸ்டெட் ரோலர்
லிலாக் பிரெஸ்டெட் ரோலர்

 

இது ஆப்பிரிக்கன் சவானாவில் காணப்படும் ரோலர் எனப்படும் பழைய உலகத்தைச் சார்ந்த பறவை ஆகும். இது கென்யாவின் தேசிய  பறவையாக உள்ளது.

இது ஆப்பிரிக்க பறவையினங்களில் வண்ணமயமான ஒன்று. இதனுடைய வண்ணங்கள் எல்லோருடைய கண்களையும் கொள்ளையடிக்கும்.

சதர்ன் கிரௌண்ட் ஹார்ன்பில் (Southern Ground Horn bill)

சதர்ன் கிரௌண்ட் ஹார்ன்பில்

சதர்ன் கிரௌண்ட் ஹார்ன்பில்ஆப்பிரிக்கன் சவானாவில் காணப்படும். இது தரையில் வாழும் இருவாட்சி வகையினுள் பெரியது. இது அழிந்து வரும் இனங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

ஆண் பறவையின் தொண்டைப்பகுதி அடர் சிவப்பாகவும், பெண் பறவையின் தொண்டைப்பகுதி நீலத்துடன் கூடிய ஆரஞ்சு வண்ணத்திலும் இருக்கும்.

 

ஆப்பிரிக்கன் ஹுப்பி  (African Hoopoe)

ஆப்பிரிக்கன் ஹுப்பி
ஆப்பிரிக்கன் ஹுப்பி

 

இப்பறவையின் தலையில் உள்ள இறகானது பங்க் போன்று இருக்கிறது. இதனுடைய அலகு பாதி வளைந்து நீண்டு உள்ளது.

இப்பறவை கத்தும் போது, தலையின் உச்சியில் உள்ள இறகானது விசிறி போல் விரிகிறது. இது தன்னுடைய சத்தம் மற்றும் உச்சியில் உள்ள இறகால், பறவைப் பிரியர்களை கவர்ந்திழுக்கிறது.

 

ஆப்பிரிக்கன் மாஸ்க் வீவர்  (African Masked Weaver)

ஆப்பிரிக்கன் மாஸ்க் வீவர்
ஆப்பிரிக்கன் மாஸ்க் வீவர்

 

முதிர்ந்த ஆண்பறவையானது தொண்டை, அலகு, உள்ளிட்ட முகப்பகுதியானது கருப்பாகவும், ஏனைய உடல்பகுதி அடர்மஞ்சளாகவும், கண்கள் சிவப்பாகவும், இறகையானது மஞ்சள் கலந்த பச்சையாகவும் இருக்கிறது.

எனவே இப்பறவையின் முகப்பகுதி பார்ப்பதற்கு மாஸ்க் அணிந்திருப்பது போல் இருக்கிறது.

 

தரைப்பருந்து (Secretary Brid)

தரைப்பருந்து
தரைப்பருந்து

 

தரைப்பருந்து ஆப்பிரிக்கன் சவானாவில் அதிகமாக தரையில் காணப்படும் கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது நெடுங்கால் பாம்புப் பருந்து, நெடுங்காற் கழுகு என்றும் அழைக்கப்படுகிறது.

இப்பறவை சூடான், தென்னாப்பிரிக்கா ஆகியவற்றின் சின்னங்களில் இடம் பெற்றுள்ளது.

 

நெருப்புக்கோழி (Ostrich)

நெருப்புக்கோழி
நெருப்புக்கோழி

 

இன்றைக்கு உலகில் வாழும் பறவைகளில் நெருப்புக்கோழியே பெரியது. இது சுமார் 8அடி உயரம் வரை வளரும். பறக்க முடியாத இது பழமையான பறவைகளில் ஒன்று.

இது நீண்ட கழுத்தையும், கால்களையும் கொண்டவை. மணிக்கு 70 கிமீ வேகத்தில் ஓடக்கூடியவை. நெருப்புக்கோழியின் முட்டையே உலகில் மிகப்பெரிய முட்டைகள் ஆகும்.

 

மாராபூ நாரை  (Marabou Stork)

மாராபூ நாரை
மாராபூ நாரை

 

இப்பறவை துப்புறவாளராகச் செயல்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல் இதனுடைய தலை வழுக்கையாகவும், கழுத்து நீண்டும் உள்ளது.

இவை கழுகுகளுடனே அதிகமாகக் காணப்படும். ஆனால் இவற்றின் நடத்தைகள் வேறுவிதமாக இருக்கும். இவை பார்ப்பதற்கு அசிங்கமாக இருந்தாலும் இவற்றின் பறத்தல் அழகாகத் தோன்றும்.

 

வெள்ளை முதுகு பிணந்தின்னிக் கழுகு (White Backed Vulture)

வெள்ளை முதுகு பிணந்தின்னிக் கழுகு
வெள்ளை முதுகு பிணந்தின்னிக் கழுகு

 

இது ஆப்பிரிக்கக் கழுகு என்றும் அழைக்கப்படுகிறது. இறந்த உடல்களைத் தின்று சிறந்த துப்புறவாளராக இது செயல்படுகிறது. இது பார்க்க அழகற்ற கனத்த பறவையாகும்.

இதனுடைய கழுத்து, தலை முடியின்றி சுருக்கம் விழுந்து காணப்படும். இது உயர்ந்த மரங்களில் கூடுகட்டி ஒரே முட்டைதான் இடுகிறது.

 

ஆப்பிரிக்கா சவானாவின் பிரபலமான பறவைகள் பற்றி அறிந்து கொண்டீர்களா?

ஆப்பிரிக்கா சவானாவைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கும்போது, இப்பறவைகளைப் பார்த்து ரசியுங்கள்.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.