ஆரஞ்சுப்பழம் என்றவுடன் எல்லோர் நினைவிலும் இருப்பது அதன் பழரசமே ஆகும். உலகில் சுமார் 600 ஆரஞ்சு வகைகள் காணப்படுகின்றன.
ஆரஞ்சுப்பழம் இனிப்புச் சுவையுடையது மற்றும் புளிப்புச் சுவையுடையது என இரண்டு வகைகளாகப் பிரித்து வகைப்படுத்தப்படுகிறது.
இவை முதலில் தென்கிழக்கு ஆசியப்பகுதிகளில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பயிர் செய்யப்பட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
உலகில் ஆரஞ்சு உற்பத்தியில் பிரேசில் முதலிடம் பெறுகிறது. இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. இவை வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் பயிர் செய்யப்படுகின்றன.
ஆரஞ்சு மரமானது 5 முதல் 8மீ உயரம் வரை வளரும் தன்மை உடையது. இவை வெந்நிறப்பூக்களை கொண்டுள்ளன.
ஆரஞ்சுப்பழமானது உருளை வடிவில் 100-150 கிராம் எடையில் காணப்படுகின்றன. இவை மஞ்சள் கலந்த ஆரஞ்சு அல்லது ஆரஞ்சு வண்ண மேல் தோலையும் கொண்டிருக்கிறது.
உள்ளே பழமானது சுளைகளாகக் காணப்படுகிறது. சுளைகள் வெண்மை நிற மெல்லிய மேல்தோலால் மூடப்பட்டிருக்கும். சுளைகள் நீர்சத்து மிகுந்து ஒருவித நல்ல மணத்துடன் இனிப்பு அல்லது புளிப்புச் சுவையைக் கொண்டிருக்கின்றன.
இப்பழத்தோலில் உள்ள குழிகளில் எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணெய் சுரப்பிகள் நிரம்பியுள்ளன.
மருத்துவ பண்புகள்
ஆரஞ்சுப்பழம் நம் உடலுக்குத் தேவையான புரதம், கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்கள், கால்சியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம் போன்ற தாதுப்பொருட்கள், பொட்டாசியம் போன்ற மின்பகுப்பொருட்கள், வைட்டமின்கள் ஏ,பி,சி மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
கான்சர் பாதுகாப்பிற்கு
இப்பழத்தில் காணப்படும் லுமினாய்டுகள் கான்சர் செல்களின் வளர்ச்சியை தடை செய்கிறன. தோல், நுரையீரல், மார்பகம் போன்றவற்றில் கான்சர் நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
இப்பழத்தில் காணப்படும் பெக்டின் குடலில் நச்சுப் பொருட்கள் சேரவிடாமல் தடுத்து அவற்றை கழிவாக வெளியேற்ற உதவுகிறது. இதனால் பெருங்குடல் கான்சர் வராமல் பாதுகாக்கிறது.
பெக்டின் குடலின் கொலஸ்ரால் உறிஞ்சும் அளவைக் கட்டுப்படுத்தி இரத்தத்தில் கொலஸ்ராலின் அளவைக் குறைக்கிறது.
சிறுநீரக பாதுகாப்பிற்கு
தினமும் ஆரஞ்சுப் பழச்சாற்றினை அருந்துவதன் மூலம் சிறுநீரக நோய்களிலிருந்தும், சிறுநீரக கல் ஏற்படாமலும் பாதுகாப்பு கிடைக்கிறது.
தினமும் அருந்தும் பழச்சாற்றின் அளவு குறிப்பிட்டதாகவே இருக்க வேண்டும். அளவுக்கதிகமாக அருந்தினால் பல்சொத்தை, பற்களின் மேற்பூச்சு நீக்கம் ஆகியவை ஏற்படும் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கொலஸ்ராலைக் குறைக்க
இப்பழத்தில் காணப்படும் பெக்டின் குடலின் கொலஸ்ரால் உறிஞ்சும் அளவைக் கட்டுப்படுத்தி இரத்தத்தில் கொலஸ்ராலின் அளவைக் குறைக்கிறது.
இதய நலத்திற்கு
இப்பழத்தில் மின்பகுப்பொருளான பொட்டாசியம் அதிக அளவு காணப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்து எளிமையான இதய இயக்கத்திற்கு வழிவகை செய்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி பெற
இப்பழத்தில் அதிக அளவு காணப்படும் வைட்டமின் சி ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகும். இவை நம் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கின்றன.
மேலும் இவற்றில் காணப்படும் பாலிபீனால்கள் நம்மை வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கின்றன.
கண் பார்வைக்கு
இப்பழத்தில் காணப்படும் விட்டமின் ஏ கண்பார்வை தெளிவடையவும் மற்றும் கண்நோய்களிலிருந்து பாதுகாக்கவும் செய்கிறது.
சரும நலனுக்கு
இப்பழத்தில் காணப்படும் பீட்டா கரோடினாய்டு செல்கள் பாதிக்கப்படுவதை தடை செய்கிறது. மேலும் இவை வயோதிக சருமம் ஏற்படுவதை தடை செய்கிறது.
அல்சர் நோய்க்கு
அல்சர் நோய் ஏற்படுவதற்கு காரணமான ஹெலிக்கோபேக்டர் பைலோரி என்ற பாக்டீரியாவின் செயல்பாட்டினைக் குறைக்கிறது. இதனால் அல்சர் நோய்க்கு தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிடுவது நல்லது. அல்சர் நோயை குணப்படுத்துவதுடன் குடல் கேன்சர் வராமல் பாதுகாக்கிறது.
இப்பழத்தில் காணப்படும் தாவரநுண்ஊட்டச்சத்துக்கள், நார்சத்துகள் போன்றவை புற்று நோய்கள், கீல்வாதம், உடல்பருமன் மற்றும் இதய நோய்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
ஆரஞ்சுப்பழத்தை தேர்ந்தெடுத்தல் மற்றும் பாதுகாத்தல்
ஆரஞ்சுப்பழத்தை வாங்கும்போது புதிதானவையாகவும் தோல் சுருக்கங்கள் இல்லாமலும் கையில் வைத்திருக்கும் போது கனமானவையாகவும் நல்ல வாசனையுடனும் இருக்க வேண்டும். பழமானது மிருதுவாக இல்லாமலும் புள்ளிகள் இல்லாமலும் இருக்க வேண்டும்.
இப்பழத்தினை வெளியிலோ அல்லது குளிர்சாதன பெட்டியிலோ வைத்திருந்து இரு வாரங்கள் வரை உபயோகிக்கலாம். இப்பழத்தினை மூடிவைக்கக் கூடாது.
குளிர் சாதன பெட்டியில் வைக்கும் போது ஈரம் இல்லாமல் அதிக குளிரில்லாப் பகுதியில் வைக்க வேண்டும்.
ஆரஞ்சுப்பழத்தினை உயோகிக்கும்போது பழத்தினை தண்ணீரில் நன்கு கழுவி வெளிப்புறத் தோலை உரித்து எடுத்து விடவேண்டும்.
உட்புறத்தில் பழத்தினைச் சுற்றியுள்ள வெள்ளையான தோல்பகுதியையும் சேர்த்து உண்ண வேண்டும். ஏனெனில் தோல் பகுதியில்தான் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. ஆரஞ்சுப்பழ வெளித்தோலானது வாசனைக்காக சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
ஆரஞ்சுப்பழத்தினை சாறு செய்து உண்பதாக இருந்தால் சாறு பிழிந்தவுடன் பயன்படுத்த வேண்டும் அல்லது குளிர்பதனப் பெட்டியில் உடனடியாக வைக்க வேண்டும்.
ஆரஞ்சினை சாறாகப் பயன்படுத்துவதைவிட அப்படியே பழமாக உண்பதே சிறந்தது.
இவ்வளவு நலம் வாய்ந்த ஆரஞ்சுப்பழத்தினை உண்டு நோய் இல்லாத ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்.
– வ.முனீஸ்வரன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!