கொசுக்கடிக்கு
புரண்டு படுக்கையில்
மகளின்
இறுக்கம் தளர்ந்ததால்
சினுங்கியது பொம்மை
தன்னைவிட
கைக்கு அடக்கமான
அவள் தம்பியை
கட்டிக் கொண்டதால்
இறுகிப்போனது
அதன் பஞ்சுப் பொதி
அவள்
திரும்பிப் படுக்கும் வரை
நட்சத்திரங்களை
கொசுவலை வழியாக
பார்க்க முயன்றன
டெடிக் கண்கள்
தூக்க மயக்கத்தில் கூட
மறுமுறை பிடியை
விட்டுவிடக்கூடாது என
திறந்தே இருந்தன
அதன் கைகள்
வாகன ஒலிகளுக்கு
மத்தியில் எப்படியாவது
அவளின் கனவு உளறல்களை
கேட்கத் தயாராக இருந்தது
மீதமுள்ள ஒற்றைக் காது
நேரம் வெகுவாக
கரைந்த பின்னர் தான் திரும்பினாள்
வாரிக் கட்டிக்கொண்டு
இதயத்தை ஊடுருவப் பார்த்தது
சென்ற ஞாயிறு மகள்
குப்பையிலிருந்து
எடுத்துவந்த
ஆரஞ்சு கலர் டெடிபேர்

த. கமல் யாழி
மதுரை – 625 122
கைபேசி : 87781 12886
மின்னஞ்சல் : yazhikamal@yahoo.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!