ஆரோக்கியமற்ற சமுதாயம்

நாடு போகிற போக்கும், வீடு போகிற போக்கும் அனைவருக்கும் கவலை அளிப்பதாக உள்ளது.

அதற்கு எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணங்கள் என்று கூறப்படுவது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.

அதில் வரும் சீரியல்கள் ஒருகாலத்தில் பொழுது போக்கிற்காக எடுக்கப்பட்டன. ஆனால் தற்பொழுது எடுக்கப்படும் சீரியல்களில் ஆணையோ – பெண்ணையோ அடியோடு மாற்றி கெடுத்து குட்டி சுவராக்கும் விதத்தில் பாத்திரங்கள் உருவாக்கப்படுகின்றன.

எல்லா சீரியல்களிலும் பெண்கள் வன்மம், பொறாமை, வஞ்ச எண்ணம், பழிவாங்கும் எண்ணம் கொண்ட கதாப்பாத்திரங்களாக படுகேவலமாக சித்தரிக்கப்பட்டு, மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

போகிற போக்கைப் பார்த்தால் பெண்கள் கதாபாத்திரம் மிக மோசமாகவும் அனைவரது மனதையும் மாற்றி விடும் அளவிற்கு போய்க் கொண்டு இருக்கிறது.

இது இப்படி என்றால் இளைஞர்களை சித்தரிக்கும் விதம் இதைவிட மோசமாக உள்ளது.

இன்றைய இளைஞர்கள் கெட்டு சீரழிய தொலைக்காட்சி தொடர்கள் முக்கிய காரணமாகின்றன.

தன்னை விரும்பாத பெண்ணை கிராபிக்ஸ் மூலம் போலியான படங்களை உருவாக்கி அந்த பெண்ணிடம் காண்பித்து தன்னை விரும்புமாறு கட்டாயப்படுத்துகிறார்கள்.

அப்படி விரும்பாத பெண்ணை பேஸ்புக் மூலம் கேவலப்படுத்தி, அவள் முகத்தில் அமிலத்தை ஊற்றும் அளவு கொடூர செயலுக்கு உட்படுத்தப்படுகிறான். இப்படியெல்லாம் இளைஞன், இளைஞிகள் குலைக்கப்படுகிறார்கள்.

திருமணமான பெண்களையும் தொலைக்காட்சித் தொடர்கள் விட்டு வைப்பதில்லை.

கணவன் மனைவிக்குள் சந்தேகம். இவர்களின் இல்வாழ்க்கையில் நுழையும் மற்றொரு ஆண், பெண் ஆகிய தொடர்களும் சித்தரிக்கப்படுகின்றன.

இவற்றால் சமுதாயத்திற்கு என்ன பயன்?

மெகா சீரியல் தயாரிப்பாளர்கள் மற்றும் கதாசிரியர்களால் வியாபார நோக்குடன் எடுக்கப்படும் சீரியல்கள் சமுதாயத்தை சீர்குலைக்கின்றன.

ஆனால் அதற்காக அவர்கள் தங்களை மாற்றிக் கொள்வதாக இல்லை. இத்தகைய சீரியல்கள் சரியாக தணிக்கையும் செய்யப்படுவதில்லை.

அனைவரின் வீட்டிலும் பல ஆயிரம் பிரச்சினைகள், கவலைகள், வேதனைகள் உள்ளன.

மாறுதலுக்காகவும் மன ஆறுதலுக்காகவும் தொலைக்காட்சியைப் பார்க்கலாம் என்றால் இத்தகைய சீரியல்கள் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளன.

நல்ல மனங்களும் இவர்களுடைய சீரியல்களால் மூளை சலவை செய்யப்பட்டு மனது மாறிவிடுகின்றன.

இப்படி உருப்படி இல்லாத சீரியல்களின் மாயையிலிருந்து மக்கள் என்று மீள்கிறார்களோ அன்று தான் சமுதாயத்திற்கு விடிவுகாலம்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.