ஊட்டச்சத்தை காட்டிலும் உண்ணும் உணவு, வண்ணமுடன் இருக்கிறதா என்று பார்க்கும் நிலை இன்று இருக்கின்றது. இதற்காக, செயற்கை நிறமூட்டிகளும் உணவில் பயன்படுத்தப்படுகின்றன.
செயற்கை நிறமிகளால் கிடைக்கும் வண்ண உணவு கண்ணிற்கு நிறைவைத் தரலாம்! ஆனால் உடலின் ஆரோக்கியத்திற்கு உதவுமா என்பது கேள்விக்குறியே.
இயற்கை ஈந்த வண்ண உணவுகள் சத்து மிகுந்தவை. இன்னும் சொல்லப்போனால், வண்ணத்திற்கு காரணமான நிறமிகளே, சத்து மிகுந்தபவையாகவும், மருத்துவ குணமுடையனவாகவும் இருக்கின்றன. இதனை பற்றிய சில தகவல்களை இங்கு காண்போம்.
கரோடினாய்டு (Carotenoid)
‘கரோடினாய்டு’ என்பது கொழுப்பில் கரையக்கூடிய நிறமிகளின்தொகுப்பு ஆகும்.

பொதுவாக, ஆழ்ந்த சிவப்பு, மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமுடைய இந்நிறமிகள் பல்வேறு காய்கறிகள் (கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, கீரை, தக்காளி முதலியன) மற்றும் பழங்களில் (பப்பாளி, தர்பூசணி, மாம்பழம், ஆரஞ்சு முதலியன) இருக்கின்றன.

சில வகை பூஞ்சை மற்றும் பாக்டீரியாங்களிலும் இந்நிறமிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
காய் கனிகளுக்கு நிறத்தைக் கொடுப்பதுடன், ஊட்டச்சத்தினை ஊட்டுபவையாகவும் இக்கரோடினாய்டுகள் செயல்படுகின்றன.
சில கரோடினாய்டுகள், மனித உடலில் வைட்டமினாக மாற்றம் அடைவதன் மூலம் சிறந்த பார்வை திறனையும், உடல் வளர்ச்சியையும் தருகின்றன.
மேலும், கேடு உண்டாக்கும் தனி உறுப்பு (free radical) காரணிகளை (செல்களை தாக்கும் ஒற்றை ஆக்ஸிஜன் அணு) செயலிழக்க செய்வதன் மூலம், சிறந்த எதிர் ஆக்ஸிகரண (antioxidants) பொருளாகவும் இந்நிறமிகள் விளங்குகின்றன. இதன் மூலம், நிறமிகளுக்கு புற்று நோய் எதிர்ப்பு பண்பும் இருக்கிறது.
மேலும், இந்நிறமிகளுக்கு அழற்சி எதிர்ப்பு (anti-inflammatory) பண்பும், இதய நோய் தடுப்பு தன்மையும் உள்ளாதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
பச்சையம் (Chlorophyll)

எல்லா பச்சை தாவரங்களிலும் இருக்கின்ற நிறமி ‘பச்சையம்’. ஒளிசேர்க்கை வினையில் முக்கிய பங்காற்றும் பச்சையம் தகுந்த அலைநீளமுள்ள சூரியக்கதிரை உறிஞ்சி வெளியிடுவதன் மூலம் தாவரங்கள், வளிமண்டல கரியமில வாயுவையும் நீரையும் சேர்த்து கார்போஹைட்ரேட்டாக மாற்றுகின்றன.
எனவே, பச்சையம் நிறமியாலேயே நமக்கு தேவையான உணவு கிடைக்கிறது.
பின்வரும் ஐந்து முக்கிய பயன்களும், இந்நிறமிக்கு இருப்பது ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவை முறையே, புற்று நோய் எதிர்ப்பு, உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்குதல், இரணங்களை விரைவாக ஆற்றும் தன்மை, சீரான செரிமானம், மற்றும் தோலினை பாதுகாத்தல் முதலியனவாகும்.
ஆந்தோசைனின் (anthocyanin)

கருஊதா அல்லது நீல நிறமான இவ்வகை நிறமிகள் திராட்சை, அவுரிநெல்லி உள்ளிட்ட பழங்களில் இருக்கின்றன.

மிகச்சிறந்த அழற்சி எதிர்ப்பு தன்மை, நரம்பு மண்டல நோய்களை குணமாக்கும் பண்பு, எதிர் ஆக்ஸிஜனேற்ற பண்பு, கண் பார்வை திறனை அதிகரித்தல், உள்ளிட்ட பல மருத்துவ குணங்கள், இந்நிறமிகளுக்கு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
குர்க்கூமின் (curcumin)

உணவில் சேர்க்கப்படும் மஞ்சளின் மஞ்சள் நிறத்திற்கு காரணம் ‘குர்க்கூமின்’ எனும் நிறமி ஆகும். இனிப்பு பண்டங்களை தவிர்த்து, பெரும்பாலான உணவு வகைகளில் சேர்க்கப்படும் மஞ்சளின் பயன் அளப்பரியது.

ஆம், எதிர் ஆக்ஸிஜனேற்ற பண்பு கொண்ட இந்நிறமி, எதிர் நுண்ணுயிர் காரணியாக பேசில்லஸ் சப்டிலிஸ், எஷ்சரிச்சியா கோலை மற்றும் ஸ்டைஃபைலோகாக்கஸ் ஏரொஸ் முதலிய நுண்ணுயிரிகளை அழிக்கவும், ஆட்டிறைச்சி, ரொட்டி உள்ளிட்டவைகளுக்கு உணவு பதப்படுத்தியாகவும் விளங்குகிறது.
இயற்கையின் வண்ண உணவுகள் வாழ்வின் ஆதாரமாகவும், ஊட்டச்சத்து தருபவையாகவும் இருக்கின்றன. இவற்றில் இருக்கும் நிறமிகள், ஆரோக்கியத்தை பேணிக்காப்பது மட்டுமல்லாமல், நோய்களை குணமாக்கும் திறன் கொண்டவையாகவும் இருப்பது, இயற்கையால் மட்டுமே சாத்தியம்.
– முனைவர்.ஆர்.சுரேஷ்
ஆராய்ச்சியாளர்
பகுப்பாய்வு மற்றும் கனிம வேதியியல் துறை
கன்செப்ஷன் பல்கலைக்கழகம், சிலி
sureshinorg@gmail.com
கைபேசி: +91 9941633807
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!