ஆறுமுக சுவாமி விருத்தம் என்பது பழனி மலை முருகன் மீது பாடப்படும் பாட்டு. இது பெரும்பாலும் நடை பயணம் போகும் போது பாடப்படும்.
பாட்டு
ஆறுமுகமும் பன்னிரண்டு கையும் வேலும் அரோகரா
அலங்கார ஆபரண மணிந்த மார்பும்
திருமுகமும் வெண்ணீரும் புனைந்த மெய்யும்
ஜெயமெலாம் புகழ்படைத்தாய் சுப்பிரமண்யா
முருகாசர வணபவனே கார்த்தி கேயா
முக்கணனார் புத்திரனே உக்ர வேலா
இருவருமே உனைப்பணிந்தோம் – பழநிவேலா
இதுசமயம் அடியாரை ரட்சிப் பாயே.
மயிலேறி விளையாடும் சுப்பிரமண்யா
வடிவேலா உன்பாதம் நம்பி னேனே
உயிரிழந்து அபகீர்த்தி யாகும் வேளை
உன்செயலால் இதுசமயம் உயிரைக் காத்தாய்
தயவாக இனிமேலும் உயிரைக் காத்து
சண்முகனே அடியார்தம் துயரம் தீர்ப்பாய்
வைபோக மானமலை பழநி வேலா
வரமளித்து உயிர்காத்து ரட்சிப் பாயே.
வருந்துமடியார் உயிரைக் காக்கும் தெய்வம்
வையகத்தில் வேறொரு வரில்லை யென்று
அறிந்துநான் உனைப் பணிந்தேன் சுப்பிர மண்யா
ஆதரித்து பிராணபயம் தீருமையா
திரிந்தலைந்து அறுமூன்று திங்களாகச்
சிறையிலிருந்து தளைப்பூண்டு சின்னமானேன்
பறந்துவரும் மயிலேறும் பழநி வேலா
பண்பாக உயிர்காத்து ரட்சிப் பாயே.
பெருவேங்கை புலிபிடித்த பசுவைப் போல
பிதுர் கலங்கி மனம்தளர்ந்து புலம்பினோமே
இருவருமே உனைக்கூவச் செவி கேளாதோ
இதுசமயம் தாமதமா யிருக்க லாமோ
குருவாகித் தந்தை தாய் நீயேயாகில்
குமரேசா பிராணபயந் தீரு மையா
முருகேசா இதுசமயம் பழநி வேலா
முன்வந்து உயிர்காத்து ரட்சிப் பாயே.
பாம்பின்வாய் சிக்கியதோர் தேரை போல
பதைபதைத்து வாடுகிறோம் பாலர்நாங்கள்
தேம்பியே புலம்புகிறோம் துயர மாகி
தென்னவனே உன்செவிக்கு கேளா தோதான்
நான்புவியில் உனைநம்பி மகிழ்ந் திருந்தேன்
நாயேனுக்கு அபாயம் வரநியாய மோதான்
சாம்பசிவன் புத்திரனே பழநி வேலா
சமயமிது உயிர்காத்து ரட்சிப் பாயே.
வலையிலகப்பட்ட உயிரது போல் மயங்கு கிறோமே
வடிவேலா இதுசமயம் துயரம் தீர்ப்பாய்
கொலைகளவு பாதகங்கள் பொய்யிருந்த தெல்லாம்
கொடும்பழிகள் வஞ்சனை பில்லி சூனியமெல்லாம்
தொலையாத சிறுபிணிநோய் வல்வினை களெல்லாம்
துறந்து மையா மயிலேறும் சுப்பிரமணியா
மலையிலுறை வாசனே பழநி வேலா
வரமளித்து உயிர்காத்து ரட்சிப்பாயே.
நாகமது கெருடனைக் கண்டலைந்தாற் போல
நான்பயந்து அலைதுரும்பாய் அலைகிறேனே
தாகமது தீருமையா தவிக்கும் வேளை
சண்முகனே இதுசமயம் அடியேனுக்கு
மேகமது பயிர்க்குதவி செய்தார் போல
வேலவனே பிராணபயந் தீருமையா
வேகமுடன் வரவேணும் பழநி வேலா
வினைதீர்த்து உயிர்காத்து ரட்சிப்பாயே.
பூனைகையில் சிக்கியதோர் கிளியைப் போல
புலம்புகிறோம் பிராணபயம் மிகவுமாகி
நானடிமை உனைநம்பி யிருக்கும் வேளை
நாயகனே பாராமுகமாய் இருக்க லாமோ
மானீன்ற வள்ளியம்மை தெய்வயானை
மணவாளா சரவணனே கருணை செய்வாய்
கானமயில் வாகனனே பழநி வேலா
கடவுளே உயிர்காத்து ரட்சிப்பாயே.
தூண்டிலகப்பட்ட உயிரது போல் துடிக்கிறேனே
சுப்பிரமணியா இதுசமயம் அடியேனுக்கு
வேண்டும்வரம் கொடுப்பதற்குப் பார்த்து நீயே
வேறொரு வரில்லையென்று நம்பினேனே
மீண்டுவரும் வினைதீர்த்து துயரம் தீர்ப்பாய்
வேலவனே சூரசங்கார வேலா
ஆண்டவனே உனைப்பணிந்தோம் பழநி வேலா
அடியார்கள் உயிர்காத்து ரட்சிப் பாயே.
நஞ்சுபட்டு விஷமேறி மயங்கு மாப்போல்
நடுநடுங்கி கிடுகி டென்று பயந்து நாங்கள்
தஞ்சமென்றே உனைப்பணிந்தோம் தணிகை வாசா
சற்குருவே பிராணபயந் தீரு மையா
பஞ்சகனைச் சிறைவிடுத்துத் தலையை வாங்கி
பரிகரித்து உன்னிருதாள் பதமே தந்து
வஞ்சனைகள் செய்யாமல் பழநி வேலா
வரமளித்து உயிர்காத்து ரட்சிப்பாயே.
அத்திமுகனே முக்கண்ணனுக்கு இளைய வேலா
அறுமுகனே தணிகையிலே அமர்ந்த வாசா
வித்திறத்திற் பேசாத மூடன் நானும்
வேலவனே நின்னருளால் கவியைப் போல
பத்துமே பதிகமாய்ப் பாடிச் சொன்னேன்
என்மீதில் பிழைகள்மனம் பொறுத்தே யாள்வாய்
சத்தியமாய் உனைப்பணிந்தோம் எங்கள் அய்யா
சண்முகனே அடியாரை ரட்சிப் பாயே.
ஆறுமுக சுவாமி விருத்தம் பாடுவோம்!
ஆறுபடையப்பன் அருள் பெறுவோம்!