சூரிய மின்சாரம்

ஆற்றல் வளங்கள் – ஓர் அறிமுகம்

ஆற்றல் வளங்கள் என்பவை இயற்கையாக மனிதனுக்கு ஆற்றலை வழங்கக் கூடிய மூலங்கள் ஆகும்.

நாம் எந்த ஒரு வேலையையும் செய்ய ஆற்றல் தேவை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. நம் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய ஆற்றல்களை ஆற்றல் மூலங்களிலிருந்து நாம் பெறுகிறோம்.

ஆற்றல் வளங்கள் பொதுவாக புதுப்பிக்கூடிய ஆற்றல் வளங்கள், புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளங்கள் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

சூரிய ஒளி, காற்று, நீர்ப்பெருக்கு, புவிவெப்ப ஆற்றல், உயிர்த்திரள் ஆகியவை புதுப்பிக்கூடிய ஆற்றல் வளங்கள் ஆகும்.

பெட்ரோலியப் பொருட்கள்;, இயற்கை எரிவாயு, நிலக்கரி, தனிமங்கள் ஆகியவை புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளங்கள் ஆகும்.
நாம் இக்கட்டுரையில் புதுப்பிக்கத்தக்க, புதுப்பிக்க இயலாத வளங்கள் என்றால் என்ன?  மற்றும் ஆற்றல் வளங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஆகியவை பற்றி பார்க்கலாம்.

 

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் என்பவை குறுகிய காலத்தில் சுற்றுசூழலால் மீண்டும் உண்டாக்கக் கூடிய வளங்கள் ஆகும். இவ்வளங்கள் இயற்கை மூலங்களான சூரியன், காற்று, மழை, கடல் ஆகியவற்றிலிருந்து பெறப்படுகின்றது.

இவ்வளங்களிலிருந்து தேவைப்படும் நேரங்களில் ஆற்றலை மீண்டும் மீண்டும் பெற முடியும்.

புதுப்பிக்கத்தக்க வளங்கள் இயற்கையில் மிகஅதிகளவு கிடைக்கின்றன. மேலும் இவ்வளங்களிலிருந்து ஆற்றலைப் பெற்று பயன்படுத்தும்போது அவை சுற்றுசூழலுக்கு பெரும்பாலும் பாதிப்பை உண்டாக்குவதில்லை.

உதாரணமாக சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் ஆற்றலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறாக காற்று, புவிவெப்ப ஆற்றல், உயிர்த்திரள், கடல்அலை ஆகிய வளங்களிலிருந்து நம் அன்றாட தேவைக்கான ஆற்றல்கள் பெறப்படுகின்றன.

 

புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளங்கள்

புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளங்கள் என்பவை குறுகிய காலத்தில் சுற்றுசூழலால் மீண்டும் உண்டாக்க இயலாத வளங்கள் ஆகும். இவ்வளங்கள் பூமியின் அடியிலிருந்து பெறப்படுபவை ஆகும்.

இவ்வளங்கள் ஐம்பது அறுபது ஆண்டுகளில் மறைந்து விடும். இவற்றை குறுகிய காலத்தில் அதாவது தேவைப்படும் நேரத்தில் புதுப்பிக்க இயலாது.

புதுப்பிக்க இயலாத வளங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு வரையறைக்கு உட்பட்டவை.

இவ்வளங்களிலிருந்து நாம் ஆற்றலைப் பெற்று பயன்படுத்தும்போது அவை அதிகளவு பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுகின்றன. இதனால் சுற்றுசூழல் மாசுப்பாடு உண்டாகிறது.

 

தூத்துக்குடி அனல்மின் நிலையம்
தூத்துக்குடி அனல்மின் நிலையம்

 

புதைபொருட்களான நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள், இயற்கை எரிவாயு, கதிர்வீச்சுத் தனிமங்கள், நிலத்தடிநீர் போன்றவை புதுப்பிக்க இயலாத வளங்களாகும்.

 

ஆற்றல் வளங்களைப் பாதுகாப்பதன் அவசியம்

மனிதர்களின் வாழ்வு மற்றும் முன்னேற்றம் ஆகியவை புவியின் ஆற்றல் வளங்களைச் சார்ந்து இருப்பதால் ஆற்றல் வளங்களைப் பயன்படுத்ததல் அவசியம் ஆகும்.

ஆற்றல் மூலங்களிலிருந்து ஆற்றலினைப் பெற்று பயன்படுத்தும்போது சுற்றுசூழலில் கடுமையான விளைவுகள் உண்டாகின்றன. எனவே சுற்றுசூழலின் கடுமையான விளைவுகளின் தாக்கத்தினைக் குறைக்க ஆற்றலினை அளவோடு பயன்படுத்த வேண்டும்.

மேலும் குறைந்து வரும் புதுப்பிக்க இயலாத வளங்களை எதிர்கால சந்ததியினரின் பயன்பாட்டிற்காகப் பாதுகாக்க வேண்டும்.

புதுப்பிக்கக்கூடிய வளங்களை முழுமையாக பயன்படுத்த சிறந்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அவசியமாகிறது.

தேவையில்லாத இடங்களில் எரியும் மின்விளக்குகள், மின்விசிறிகள் ஆகியவற்றை அணைத்து விடலாம். இதனால் மின்கட்டணம் குறைவதோடு மறைமுகமாக சுற்றுசூழல் சீர்கேடு தடுக்கப்படுகிறது.

போக்குவரத்திற்கு தனிநபர் வாகன பயன்பாட்டினைக் குறைத்து பொது வாகனப் பயன்பாட்டினை மேற்கொள்ளலாம்.

நாம் ஒவ்வொருவரும் ஆற்றல் வளங்களை தேவையான இடங்களில் அளவாகப் பயன்படுத்தி சுற்றுசூழலையும் பாதுகாத்து பொருளாதார தன்னிறைவு பெறுவோம்.

– வ.முனீஸ்வரன்

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.