ஆற்றிலே போட்டு குளத்திலே தேடுதல் என்ற பழமொழியை, சிறுமியைப் பார்த்து தாய் ஒருத்தியைச் சொல்லிக் கொண்டிருந்ததை கானமயில் கனகா கேட்டது.
புதருக்கு அருகில் நெருங்கி வந்து தாய் பழமொழி பற்றி வேறு ஏதேனும் கூறுகிறாளா என்று கேட்கலானது. சிறுமி தாயைப் பார்த்து “அம்மா நீங்கள் எதற்காக இந்தப் பழமொழியைக் கூறுகிறீர்கள்?” என்று கேட்டாள்.
அதற்கு அம்மா “நீ விறகு கட்டும் கயிற்றை மரத்திற்கு அடியில் வைத்து விட்டு புதருக்கு அருகில் தேடுகிறாய் அல்லவா? அதற்காகத்தான் நான் இந்தப் பழமொழியைக் கூறினேன்” என்றாள்.
அதற்கு அச்சிறுமி “ஒரு பொருளை வைத்த இடத்தை மறந்து விட்டு வேறு இடத்தில் தேடும்போது இந்தப் பழமொழியைக் கூறுவார்களா?” என்று கேட்டாள்.
“ஆமாம். நீ சொல்வது சரிதான். ஆனால் இந்தப் பழமொழி கூறும் கருத்தோ வேறுவிதமானது.” என்றாள் அம்மா.
சிறுமியும் அம்மாவிடம் “இப்பழமொழி எப்படி ஏற்பட்டது என்று உங்களுக்கு தெரிந்தால் அது பற்றிக் கூறுங்களேன். நான் தெரிந்து கொள்கிறேன்” என்றாள்.
அதற்கு தாயும் “சரி எனக்கு தெரிந்ததைச் சொல்கிறேன் கேள்.
பழமொழிக்கான கதை
சிவனடியார்கள் எனப் போற்றப்படும் 63 நாயன்மார்களில் சுந்தரரும் ஒருவர். அவர் திருமுதுகுன்றம் என்ற ஊரில் இருக்கும் பழமலைநாதர் கோவிலுக்கு ஒருமுறை சென்றார்.
அங்கு சுந்தரர் பாடல்களைப் பாடி சிவபெருமானை போற்றி வழிபட்டு பொன் வேண்டும் என வேண்டினார். இறைவனும் அவருக்கு பன்னிரெண்டாயிரம் பொற்காசுகளை வழங்கினார்.
இக்காலத்தில் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பெரும் பணத்தை கொண்டு செல்ல வேண்டியிருந்தால் வங்கி வரைவோலையாகவோ அல்லது காசோலையாகவோ கொண்டு செல்வது பாதுகாப்பானது.
ஆனால் அந்தக் காலத்தில் இதுபோன்ற வசதிகள் இல்லை. ஆதலால் இறைவனிடம் பெற்ற பொன்னை சுந்தரர் எப்படி எடுத்துச் செல்வது என எண்ணினார்.
இவ்வளவு பொன்னையும் சுமந்து செல்வது கடினம். அப்படியே சுமந்து சென்றாலும் வழிப்பறி கொள்ளையர்களிடம் இருந்து தப்பிப்பது எளிதானதல்ல.
பலவாறு யோசித்து இறுதியில் சுந்தரர் “இறைவா இவ்வளவு பொன்னையும் எனக்கு திருவாரூரிலே கிடைக்குமாறு அருள் புரிய வேண்டும்” என்று இறைவனிடம் வேண்டுதல் விடுத்தார்.
இறைவனும் சுந்தரரிடம் “இப்பொன்னை இங்குள்ள நதியான மணி முத்தாறில் போட்டுவிட்டு போ. திருவாரூரிலே உள்ள குளத்தில் போய் நீ அதை எடுத்துக் கொள்” என்று கூறினார்.
அவ்வாறாகவே சுந்தரரும் மணிமுத்தாற்று நீரில் பொன் மூட்டையை போட்டுவிட்டு திருவாரூர் சென்றார்.
திருவாரூர் வாசிகள் இச்செய்தியை அறிந்து மிகவும் வியப்பாகப் பேசிக் கொண்டனர். ஒரு சிலர் இதென்ன பைத்தியக்காரத்தனம் “ஆற்றிலே போட்டுவிட்டு குளத்திலே தேடுவதா?” என்று கேலி செய்தனர்.
சுந்தரர் குளத்தில் மூழ்கிப் பொன்னை பெற்றார் என நாயன்மார் வரலாறான திருத்தொண்டர் புராணம் கூறுகிறது!.
அன்றிலிருந்து ஆற்றிலே போட்டு குளத்திலே தேடுதல் என்ற இப்பழமொழி வழங்கலாயிற்று.” என்று கூறினாள். பழமொழியையும் அதற்கான விளக்கத்தையும் கேட்ட கானமயில் கனகா வட்டப்பாறையை நோக்கிச் சென்றது.
வட்டப்பாறையில் எல்லோரும் கூடியிருந்தனர். காக்கை கருங்காலன் “என் அருமைக்குஞ்சிகளே குட்டிகளே. உங்களில் யார் இன்று பழமொழி பற்றி கூறப்போகிறீர்கள்?” என்று கேட்டது.
கானமயில் கனகா “தாத்தா நான் இன்றைக்கு ஆற்றிலே போட்டு குளத்திலே தேடுதல் என்ற பழமொழியையும், அதற்கான விளக்கத்தையும் கூறப்போகிறேன்” என்று தான் கேட்டது முழுவதையும் கூறியது.
காக்கை கருங்காலன் “சபாஷ். பழமொழி மற்றும் அதனுடைய விளக்கம் பற்றிக் கூறிய கானமயில் கனகாவிற்கு என் வாழ்த்துக்கள்.
‘ஆற்றிலே போட்டாலும் அளந்து போட வேண்டும்’ என ஆறு பற்றிய வேறு ஒரு பழமொழியும் உள்ளது. இதற்கு தானம் கொடுத்தாலும் அளவோடு தர வேண்டும் என்பது பொருளாகும். சரி நாளை மற்றொரு பழமொழி பற்றிப் பார்ப்போம்.” என்று கூறி எல்லோரையும் வழியனுப்பியது.
– இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942
மறுமொழி இடவும்