ஆலயத்தில் ஆடைக் கட்டுப்பாடு

ஆலயத்தில் ஆடைக் கட்டுப்பாடு என்பது ஒன்றும் புதிதல்ல. கைலி அணிந்து உள்ளே வரக் கூடாது என்பது பல கோவில்களில் உள்ள விதி.

ஆனால் இப்போது நீதிமன்றமே நாம் ஆலயங்களுக்கு எப்படி ஆடை அணிந்து செல்ல வேண்டுமெனச் சொல்லியிருக்கின்றது.

சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை ஆணை பிறப்பித்து உள்ளது. 2016-ம் ஆண்டின் ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த ஆணை அமுலுக்கு வந்துள்ளது.

ஆண்கள் என்றால் வேட்டி சட்டை அல்லது பைஜாமா அல்லது பேண்ட் சட்டை அணிய வேண்டும். பெண்கள் சேலை தாவணி அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிய வேண்டும் எனத் தீர்ப்புக் கூறியுள்ளார். குழந்தைகளுக்கு உடல் மூடும் வகையில் பொருத்தமான ஆடை அணிய வேண்டும் என உத்தரவு.

இந்த ஆடைக் கட்டுப்பாடு குறித்த ஆணை தேவைதானா என்பது நம் கேள்வி.

இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டவன் இறைவன் என்பதும், இறைவனை அடையும் வழிகள் இவைதான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்பதும் நம் முன்னோர்கள் உணர்ந்து நமக்குச் சொன்ன அரிய கருத்துக்கள்.

ஆடை தேவைதானா என்று நம் முன்னோர்கள் ஆன்மீகத்தில் சோதனை செய்து பார்த்ததை நாம் பல கோயில்களின் சிலைகள் மூலம் காண்கிறோம். இத்தகைய பின்னணியில் இருந்து வருபவர்கள் நாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உடை என்பது உடலின் பாதுகாப்புக்கும் நம் சுயமதிப்பைக் காப்பதற்குமான ஒன்று என எண்ணுகிறோம். இந்த சுதந்திர நாட்டில் நான் என்ன ஆடை அணிய வேண்டும் என்று என்னை நிர்பந்தப்படுத்தக் கூடாது.

வேட்டி உடுத்தியதால் என்னை ஒரு கேளிக்கை விடுதிக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறி அதற்காகப் பெரிய அளவில் எதிர்ப்பு சொன்னவ‌ர்கள் ஜீன்ஸ் அணிந்தால் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாத இளைஞர்களுக்கு என்ன நீதி தருவார்கள்?

ஜீன்ஸ் அணிவது ஒன்றும் பெருந்தவறல்ல. அது இன்றைய இளைஞர்களின் உடை. ஜீன்ஸ் அணிந்தால் எந்த விதத்தில் அவர்கள் இறைவனுக்கு விரோதியாகிப் போனார்கள்? எதனால் ஜீன்ஸ் அணிந்தவர்களுக்கு ஆலய வழிபாடு மறுக்கப்படுகிறது?பேண்ட் அணிந்தவர்கள் எந்த விதத்தில் இறைவனுக்கு நண்பனாகிப் போனார்கள்?

உடை என்பது மற்றவர்களுக்கு உறுத்தாமல் இருக்க வேண்டும். ஆபாசமாக இருக்கக் கூடாது என்பதெல்லாம் சரி. ஏற்கனவே சில கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு இருக்கின்றது.

உதாரணமாகத் திருச்செந்தூரில் ஆண்களை சட்டை மற்றும் பனியனைக் கழற்றிவிட்டுச் செல்ல செல்லச் சொல்வார்கள். நாமும் அப்படியே செய்கின்றோம்.இது போன்ற ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில விசயங்களை அனைவரும் அனுசரித்துத் தான் போய்க் கொண்டிருக்கிறோம்.

ஆனால் எல்லாக் கோவில்களிலும் இப்படித்தான் உடை அணிந்து செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுவது சரி தானா?

அனைவரும் ஆலயம் செல்லலாம் என்ற உரிமை பெற்று நூறு ஆண்டுகள் கூட நிறைவடையவில்லை. இது போன்ற தேவையற்ற தீர்ப்புக்களால் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் தயவு செய்து இறைவனை மக்களிடமிருந்து குறிப்பாக இளைஞர்களிடமிருந்து பிரித்து விடாதீர்கள்.