ஆலயத்திற்கு சென்று வழிபடும் போது நாம் சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இவை ஆலய வழிபாட்டு வழிமுறைகள் என்று அழைக்கப்படுகின்றன.
இவ்விதிமுறைகள் நமக்கு மன அமைதியைக் கொடுப்பதுடன் இறையருளையும் பெற்றும் தரும். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
கருவறையில் இறைவனுக்கு அலங்காரம் நடக்கையில் திரையிட்டு இருப்பார்கள். அச்சமயம் வழிபடுதல் கூடாது.
இறைவனுக்கும் பலிபீடத்திற்கும் குறுக்கே செல்லக்கூடாது.
பலிபீடம், உற்சவ மூர்த்தி ஆகியவற்றின் நிழலை மிதித்தல் கூடாது.
ஆலயத்தில் நண்பர்களையோ, பெரிய மனிதர்களையோ கண்டால் வணங்கக்கூடாது. இறைவனே மிகப் பெரியவன். எனவே அத்தகைய இறைவன் இருக்கும் ஆலயத்தில் அனைவரும் சமம்.
திருநீறு, சந்தனம், பால் அபிசேகம் தவிர ஏனைய திருமஞ்சனத்தைப் பார்க்கக் கூடாது. (திருமஞ்சனம் என்றால் அபிசேகம் என்று பொருள்.)
திருநீறு, குங்குமம் ஆகியவற்றை வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டபின் மீதமுள்ளவற்றை கீழே கொட்டுதல், சுற்று தூண்களில் தடவுதல், கொட்டுதல் மூடாது. மீதமுள்ளவற்றை ஒரு தாளில் மடித்துச் சென்று வீட்டின் பூஜையறையில் வைத்துக் கொண்டு தினசரி இட்டுக் கொள்ளலாம்.
பிரசாதங்களை ஒருவருக்கொருவர் இட்டுக் கொள்ளதலும் கூடாது.
கோவிலில் உள்ள திருவிளக்குகளை கையால் தூண்டவோ, தூண்டிய கைகளை சுவரில் துடைக்கவோ கூடாது. மீதமிருக்கும் எண்ணையை தலையில் தடவிக் கொள்ளக் கூடாது.
இறைவனை தொடுவது, இறைவனின் திருவடிகளில் கற்பூரம் ஏற்றுவது கூடாது.
சட்டை அணிந்து செல்வதை தவிர்ப்பது நலம். லுங்கி அணிந்து செல்லுதல் கூடாது.
அதிக அழுத்த வண்ணமான உடை, ஆடம்பரமான உடை அணிந்து செல்லக் கூடாது. இது மற்றோரின் கவனத்தை திசை திருப்பி விடும். எளிமையான கதர் ஆடையை அணிந்து செல்வது நல்லது.
கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது. அடிமேல் அடி வைத்து வலம் வர வேண்டும். மிக நிதானமாக அனைத்து மூர்த்திகளையும் வணங்கி செல்லுதல் வேண்டும்.
எவருடனும் உலக விசயங்கள், குடும்ப விசயங்கள் பேசிக் கொண்டு கோவில்களில் வலம் வருதல் கூடாது. ஆலயத்தினுள் தெய்வ சக்தி நிரம்பியிருக்கும். அச்சக்தி நம் உடலில் ஊடுருவும்படி இறைவனை மனம் முழுக்க நிரம்பி வலம் வர வேண்டும்.
போதை வஸ்துகள், தின்பண்டங்களை வாயில் வைத்துக் கொண்டு ஆலயத்தினுள் செல்லக் கூடாது.
ஆலயத்தில் தாம்பூலம் தரிக்கக் கூடாது. அதாவது வெற்றிலை போடக் கூடாது.
கோயிலுக்குள்ளேயோ, கோவில் மதிற் புறங்களிலோ மலஜலம் கழிக்கக் கூடாது.
நாம் மேலே குறிப்பிட்டுள்ள ஆலய வழிபாடு வழிமுறைகளைப் பின்பற்றி மன அமைதியோடு இறையருளையும் பெறுவோம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!