ஆல் (ஆல மரம்) பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படியுங்கள்; ஆல் போல வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
ஆல்
அடி-கிளை, காய், இலை, நிழல்
ஆயிரம் கிளைகள் கொண்ட
அடிமரம் பெரிய யானை!
போயின மிலார்கள் வானில்!
பொலிந்தன பவளக் காய்கள்!
காயினை நிழலாற் காக்கும்
இலையெலாம், உள்ளங் கைகள்!
ஆயஊர் அடங்கும் நீழல்,
ஆலிடைக் காண லாகும்!
விழுதும் வேரும்
தூலம்போல் வளர்கி ளைக்கு
விழுதுகள் தூண்கள்! தூண்கள்
ஆலினைச் சுற்றி நிற்கும்
அருந்திறல் மறவர்! வேரோ
வாலினைத் தரையில் வீழ்த்தி
மண்டிய பாம்பின் கூட்டம்!
நீலவான் மறைக்கும் ஆல்தான்
ஒற்றைக்கால் நெடிய பந்தல்!
பச்சிலை, இளவிழுது
மேற்கினை யின்வீழ் தெல்லாம்
மின்னிடும் பொன்னி ழைகள்!
வேற்கோல்போல் சிலவீழ் துண்டாம்!
அருவியின் வீழ்ச்சி போலத்
தோற்றஞ்செய் வனவும் உண்டு!
சுடர்வான்கீழ்ப் பச்சிலை வான்
ஏற்பட்ட தென்றால், வீழ்தோ
எழுந்தங்கக் கதிர்கள் என்பேன்.
அடிமரச் சார்பு
அடிமரப் பதிவி லெல்லாம்
அடங்கிடும் காட்டுப் பூனை!
இடையிடை ஏற்பட் டுள்ள
பெருங்கிளைப் பொந்தி லெல்லாம்
படைப்பாம்பின பெருமூச் சுக்கள்!
பளிங்குக்கண் ஆந்தைச் சீறல்!
தடதடப் பறவைக் கூட்டம்!
தரையெலாம் சருகின் மெத்தை!
வெளவால், பழக்குலை, கோது, குரங்கு, பருந்து
தொலைவுள்ள கிளையில் வெளவால்
தொங்கிடும்; வாய்க்குள் கொண்டு
குலைப்பழம், கிளை கொ டுக்கும்;
கோதுகள் மழையாய்ச் சிந்தும்!
தலைக்கொழுப் புக்கு ரங்கு
சாட்டைக்கோல் ஒடிக்கும்; பின்னால்
இலைச்சந்தில் குரங்கின் வாலை
எலியென்று பருந்திழுக்கும்!
கிளிகள்
கொத்தான பழக்கு லைக்குக்
குறுங்கிளை தனில்ஆண் கிள்ளை
தொத்துங்கால் தவறி, அங்கே
துடிக்குந்தன் பெட்டை யண்டைப்
பொத்தென்று வீழும்;அன்பிற்
பிணைத்திடும்; அருகில் உள்ள
தித்திக்கும் பழங்கள் அக்கால்
ஆணுக்குச் கசப்பைச் செய்யும்!
சிட்டுகள்
வானத்துக் குமிழ்ப றந்து
வையத்தில் வீழ்வ தைப்போல்
தானம்பா டும்சிட் டுக்கள்
தழைகிளை மீது வீழ்ந்து,
பூனைக்கண் போல்ஒ ளிக்கும்;
புழுக்களைத் தின்று தின்று
தேனிறை முல்லைக் காம்பின்
சிற்றடி தத்திப் பாடும்.
குரங்கின் அச்சம்
கிளையினிற் பாம்பு தொங்க,
விழுதென்று, குரங்கு தொட்டு
“விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதித்த தைப்போல்”
கிளைதோறும் குதித்துத் தாவிக்
கீழுள்ள விழுதை யெல்லாம்
ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்.
பறவையூஞ்சல்
ஆலினைக் காற்று மோதும்!
அசைவேனா எனச்சி ரித்துக்
கோலாத்துக் கிளைகு லுங்க
அடிமரக் குன்று நிற்கும்!
தாலாட்ட ஆளில் லாமல்
தவித்திட்ட கிளைப்புள் ளெல்லாம்
கால்வைத்த கிளைகள் ஆடக்
காற்றுக்கு நன்றி கூறும்!
குயில் விருந்து
மழைமுகில் மின்னுக் கஞ்சி
மாங்குயில் பறந்து வந்து
“வழங்குக குடிசை” என்று
வாய்விட்டு வண்ணம் பாடக்
கொழுங்கிளைத் தோள் உயர்த்திக்
குளிரிலைக் கைய மர்த்pப்
பழந்தந்து களிப்பாக் கும்பின்
பசுந்துளிர் வழங்கும் ஆலே.
– பாவேந்தர் பாரதிதாசன்