ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற பழமொழியை பாட்டி ஒருவர் பூங்காவில் சிறுவர்களுக்கு கூறுவதை மான்குட்டி மல்லிகா தற்செயலாகக் கேட்டது.

அதற்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. துள்ளி அங்கும் இங்கும் ஓடியது. ‘சரி பாட்டி சொல்வதை தொடர்ந்து கேட்போம்’ என்று மனத்திற்குள் எண்ணி பாட்டி கூறுதைக் கேட்கலானது.

துடுக்கான சிறுவன் ஒருவன் “பாட்டி, பெண்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? இந்தப் பழமொழி கூறுவது என்ன?” சற்று விளக்கமாக கூறுங்கள்” என்றான்.

“சரி. சொல்கிறேன் கேளுங்கள். ‘ஆவதும் பெண்ணாலே’ என்பதற்கு ஒரு பெண் மனது வைத்தால் மட்டுமே நல்லவற்றை ஆக்கிவைக்க முடியும் என்று பொருள் கொள்ளலாம்.

அதாவது பெண்ணால் மட்டுமே நல்ல குழந்தைகளை உண்டாக்கி சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். இதனைத்தான் ஆணுக்கு அளிக்கப்படும் கல்வி அவனுக்கு மட்டுமே பயன்படும்.

ஆனால் ஒரு பெண்ணுக்கு அளிக்கப்படும் கல்வியானது அவளின் குழந்தைகள் மூலம் சமுதாயத்திற்கே பயன்படும் என்று பெரியவர்கள் கூறுவர்.

ராசராச சோழன், மராட்டிய மாமன்னன் வீரசிவாஜி, தேசதந்தை மகாத்மா காந்தி போன்றோர் சிறந்த சமுதாயத்தை உருவாக்க காரணமானவர்கள் குந்தவை, ஜீஜாபாய், புத்லிபாய் போன்ற பெண்கள் ஆவர்.” என்று பாட்டி கூறினார்.

அப்போது அங்கே மழைபெய்யத் தொடங்கியது. எனவே பாட்டி நாளை இப்பழமொழியின் பின்பாதியைப் பற்றிக் கூறுகிறேன். இப்பொழுது செல்லுங்கள்” என்று கூறி விடை பெற்றார்.

மான்குட்டி மல்லிகா பாதி பழமொழிக்கான விளக்கத்தை மட்டும் கேட்க முடிந்ததை எண்ணி வருந்தியவாறு காட்டிற்குச் சென்றது.

மாலை வேளையில் எல்லோரும் வழக்கமாக வட்டப்பாறையில் கூடினர். காக்கை கருங்காலன் எழுந்து “என் அருமைக் குழந்தைகளே இன்றைக்கான பழமொழியைக் கூறப்போவது யார்?” என்று கேட்டது.

அதனைக் கேட்ட மான்குட்டி மல்லிகா “தாத்தா நான் இன்று ஒரு பழமொழியைக் கூறுவேன். ஆனால் அப்பழமொழிக்கான பாதி விளக்கம் மட்டுமே எனக்கு தெரியும்.” என்று தயங்கியது.

“சரி நீ கேட்டதைக் கூறு. நான் மறுபாதிக்கு விளக்கம் அளிக்கிறேன்.” என்று காக்கை கூறியது. அதனைக் கேட்டதும் மான்குட்டி மல்லிகா மகிழ்ச்சி அடைந்தது.

“நான் இன்றைக்கு ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற பழமொழியைக் கேட்டேன்.” என்று கூறியது.

அதனைக் கேட்ட குயில் குப்பம்மா “இப்பழமொழி பெண்களின் பெருமையை இழிவு படுத்தும் விதமாக அமைந்துள்ளது போல் உள்ளது.

ஆனால் பெண்களைப் போற்றும் இந்த நாட்டில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இப்பழமொழி அமைய வாய்ப்புகள் இல்லையென்று தோன்றுகிறது.” என்று கூறியது.

அதற்கு மான்குட்டி மல்லிகா பாட்டி கூறியவற்றை விளக்கமாக எடுத்துக்கூறியது.

அதனைக் கேட்ட கருங்காலன் “சபாஷ். சரியான விளக்கம். பழமொழியின் மறுபாதிக்கான விளக்கத்தை நான் உங்களுக்கு கூறுகிறேன்.” என்று கூறியது.

ஒரு பெண் மனது வைத்தால் மட்டுமே தீயவற்றை அழிக்க முடியும். தீயச்செயல்களையும் அதனால் ஏற்படும் தீயவற்றையும் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறி அத்தீயசெயல்கள் நடக்காவாறு அழித்து காக்க ஒரு பெண்ணால்தான் முடியும்.

இதனால் குழந்தைகள் நாளடைவில் நல்ல மனிதர்களாக மாறுவர். இதனாலே பழமொழியின் பின்பாதியை ‘அழிவதும் பெண்ணாலே’ என்று கூறி வைத்தனர்.

எனவே, மேற்கூறிய கருத்துகளின்படி நல்லவை ஆவதும் பெண்ணாலே தீயவை அழிவதும் பெண்ணாலே என்று வருகின்றது. இவையே நாளடைவில் பொருள் மாறி வழங்கப்பட்டு வருகிறது.” என்று கூறியது.

“பின்பாதிப் பழமொழிக்கான விளக்கத்தை கூறியதற்கு மிகவும் நன்றி தாத்தா” என்று மான்குட்டி மல்லிகா கூறியது.

“நாளை வேறுஒருவர் தான் கேட்ட பழமொழி பற்றிக் கூறுங்கள். இப்பொழுது கலைந்து செல்லுங்கள்” என்று காக்கை கருங்காலன் கூறியது.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.