ஆவிகளின் உரையாடல்

முழு நிலவு வானில் உலா வரும் பௌர்ணமி நாள்.

சென்னை – திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலையில் முண்டியம்பாக்கத்திலிருந்து விழுப்புரம் நகருக்குச் செல்கிற வழியில் வலது பக்கத்தில் இருந்த பாழடைந்த மாளிகையில் இரண்டு ஆவிகளின் உரையாடல்.

ஆண் குரல் : “அல்லி நீயா? ஆவியானப்புறமும் என்னைத் தொடர்ந்து வர்றியா? “

பெண் குரல் : “சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா?ன்னு பழைய சினிமா பாட்டு இருக்கே! அல்லியான நான் இந்த சந்திரனைப் பார்த்துத்தான் மலர்ந்தேன்.

ஒங்களோட வாழணும்னு கனா கண்டேன். நீங்க எங்க மாமா சிவாஜி மாதிரி, ஒங்க தாத்தா கொடுத்த வீட்ல ஆதரவு இல்லாத பசங்களையும் முதியவர்களையும் ஆதரிக்கறேன்னு இருந்தீங்க!

எங்க வீட்ல வேற யாருக்காவது என்னை கட்டி வெச்சுறப் போறாங்களேன்னு, மஞ்சள் தாலியை ஒங்களோட இருக்கற பெரியவங்க முன்னாடி கட்டிகிட்டு இந்த மாளிகையில ஒங்களோட இருக்கலாம்ன்னு இங்கே வந்தேன்.

அன்னிக்கு பார்த்து இங்க தீ விபத்து! நீங்க ஆதரிச்ச எல்லா உயிரும் போச்சு.

நீங்களும் போனீங்க. ஒங்களோட வாழ வந்த நானும் உயிரை விட்டு இப்ப ஆவியானப்புறமும் நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்னு வந்துகிட்டு இருக்கேன்.

ஆமாம். இந்த வீடு இப்ப யார் பேர்ல இருக்கு?

தீக்கு இரையான கோலத்தில் அப்படியே இருக்கு. வேற யாரும் வாங்கலியா?“

ஆண் குரல் : “யாருக்கு தெரியும் ஆவியா திரியறவனுக்கு எப்படி தகவல் கிடைக்கும்? இது எங்க தாத்தா (அம்மாவோட அப்பா) பார்த்து பார்த்து கட்டின வீடு.

வெளிநாடு போன மாமாக்கள் தாத்தாவை பார்க்க வரலைன்ற கோபத்துல இந்த வீட்டை மாமாக்களுக்கு எழுதி வைக்காம பேத்திக்கு அதான் என் தங்கச்சி வசந்தி மீனாவுக்கு தாத்தாவோட சீரா இருக்கட்டும்னு எழுதி வெச்சாரு.

தாத்தா போனப்ப கூட தெரியப்படுத்தியும் மாமாக்கள் வரலை. நானும் மாப்பிள்ளையும் சேர்ந்து தான் தாத்தாவுக்கு செய்ய வேண்டியதை எல்லாம் திருப்தியா செஞ்சோம்.

என் தங்கச்சியும் மாப்பிள்ளையும் என்னோட ஆசிரம திட்டத்துக்கு இந்த வீட்டைப் பயன்படுத்திக்க சொன்னாங்க.

அவ காவல் துறை அதிகாரி! அவரு பிசினஸ் மேன் இதைப் பத்தி நெனக்க நேரம் இல்லையோ என்னவோ! “

பெண் குரல் : “ஆவியானப்புறமும் தங்கை மேல பாசம் பேச்சுலயே பொங்குதே! ஆமாம் இத்தனை பேரு அல்பாயுசுல உயிரை விடறதுக்கு காரணமான அந்த தீ விபத்து எப்படி? யாராவது வேணும்னு நாசக்கார வேலை பண்ணிட்டாங்களா? “

ஆண் குரல் : “தெரியல! மின்சாரம் தான் ஏதோ சார்ட் சர்க்யூட்ன்னு சொல்வாங்களே, அது மாதிரி தான் நடந்திருக்கணும். எனக்கு இன்னும் மனசு ஆறாமல் தான் நான் இந்த கட்டிடத்தையே சுத்தி சுத்தி வரேன். இன்னிக்கு நீயும் என்னை தேடி இங்க வந்துட்டே! இரு! இரு! யாரோ வரா மாதிரி இருக்கு!“

வாட்டசாட்டமான இரண்டு நடுத்தர வயது நபர்கள் அந்த மாளிகைக்குள் நுழைந்தனர்.

“யோவ் ரமேஷ்!. மொபைல் டார்ச் ஆன் பண்ணி இந்த மெழுகு வர்த்தியை ஏத்து! இந்தா தீப்பெட்டி!“

“சுரேஷ் அண்ணே! இங்க ஏன் வந்திருக்கோம்?“

ரமேஷ் பெரிய தடிமனான மெழுகுவர்த்தியை ஒளிரச் செய்தான்.

“யோவ் இந்த இடத்துல, சந்திரன்னு ஒருத்தரு அநாதை விடுதி மாதிரி நடத்திகிட்டு இருந்தாரு. போன வருசம் தீ பிடிச்சு அவரும் அவரு கூட இருந்தவங்களும் போய் சேர்ந்துட்டாங்க. மெயின் ரோட்ல இருந்தாலும் அவ்ளோ பேர் உயிரை விட்ட இடம்னு இதை யாரும் வாங்க வரலைன்னு நெனக்கறேன். நம்ம பாஸ் சரக்கை எல்லாம் இங்க வெக்க சொல்றாரு!“

“பாசையும் ஒங்களையும் அடிச்சுக்க முடியாது. இரண்டு கோடி ரூபாய் சரக்கை பாழடைஞ்ச பங்களாவுல வெச்சு பிசினஸ் பண்றீங்க பாருங்க!“

“உரக்க பேசாதேயா! நிலா வெளிச்சத்துல ஏதோ பேச்சுக் குரல் கேட்குதுன்னு நம்ம மாதிரி ராத்திரி பூச்சி ஏதாவது நம்மள பாலோ பண்ணிடப் போகுது! “

அவர்கள் இருவரும் அவர்களுக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு மாளிகையைப் பூட்டிக் கொண்டு வேகமாக வெளியேறினார்கள். மீண்டும் ஆவிகளின் உரையாடல் .

பெண் குரல் : “ஒங்க தங்கச்சி போலீஸ் ஆபீசர்ன்னு சொன்னீங்க! அவங்க பேர்ல இருக்கற பங்களாவையே சமூக விரோத கும்பல் எதுக்கு பயன்படுத்தறாங்க பார்த்தீங்களா?“

ஆண் குரல் : “நெனச்சாலே பயமா இருக்கு. என் தங்கச்சி பத்தி மட்டும் இல்ல, இவங்களாலே எத்தனை இளைஞர்கள் சீரழிவாங்க! ஆனா நாம என்ன செய்ய முடியும்? “

பெண் குரல் : “ஒங்களுக்காக மட்டும் இல்ல ஒங்க தங்கச்சிக்காக மட்டும் அல்ல இந்த சமுதாயத்திற்காக ஆவியானப்புறமும் நான் என்ன செய்யறேன்னு பாருங்க. நீங்க இங்கேயே இருங்க. நான் வரேன்!“


சந்திரனின் தங்கை வசந்தி மீனாவின் இல்லம்.

ஞாயிற்றுக் கிழமை காலை எட்டு மணி.

அழகான பெண்மணி வசந்தி மீனா படு்க்கையை விட்டு எழுந்தாள்.

அவளுடைய கணவன் கட்டுடல் கொண்ட நடுத்தர வயது நபர் ஜீவாவைத் தேடினாள். அவர் சமையலறையில் இருந்தார்.

“என்ன இவ்வளவு சீக்கிரமா டிபன் எல்லாம் ரெடி பண்றீங்க! எங்கேயாவது போகப் போறோமா?“

“ஆமாம் ஆபீசர் மேம்! நீங்க குளிச்சு முடிச்சு ரெடியாயிட்டு வாங்க! சொல்றேன்; அல்லிக்கு தெரிஞ்சதை சொல்லணும் இல்ல மேம்!“

“என்ன அல்லி ன்னு உளர்றீங்க! “

“ஒங்க அண்ணாவை அல்லின்னு ஒருபொண்ணு சுத்தி சுத்தி வந்து கடைசில அவரோடயே போயிடுச்சு இல்ல, அதை நெனச்சுகிட்டேன்!“ என்று கூறியபடியே இரவு உடையில் இருந்த மனைவியை அணைத்துக் கொண்டார்.

“நீங்க குளிச்சுட்டு குளிக்காத என்னை கட்டிப் பிடிக்கமாட்டிங்க இன்னிக்கு என்ன புது பழக்கம்? “ என்று கூறி கணவனின் அணைப்பிலிருத்து விடுபட்டாள் வசந்தி மீனா.

சற்று நேரத்தில் அவள் குளித்து முடித்து சேலை உடுத்தி வந்தாள்.

சோபாவில் அமர்ந்து தாழ்வு மேசையில் கணவர் வைத்திருந்த சிற்றுண்டியை சாப்பிட்டாள்; காபியைப் பருகினாள். கணவர் மீண்டும் அவர் அருகில் வந்தார்.

“நான் இப்ப ஸ்ட்ரெஸ்ல இல்ல. கட்டிப்பிடி வைத்தியம் எல்லாம் வேணாம்; காலங்கார்த்தாலே எங்க போகப் போறோம். அதை சொல்லுங்க ஜீவா! “

“அது என்னன்னா வசந்தி!“

“என்னை பேர் சொல்லி கூப்பிட மாட்டிங்களே!“

“புருசன் மனைவி பேர சொல்றதுல என்ன? இப்ப அதுவா முக்கியம். தீக்கு இரையான ஒங்க அண்ணன் இருந்த பங்களாவை அப்படியே போட்டு வெச்சிருக்கோம்.

“நீங்க சொல்றதை கேட்கும் போது எனக்கு பகீர்ங்குதே! வேலை மும்முரத்துல இத்தனை நாளா ரெண்டு பேரும் இதை மறந்துட்டோமே! வாங்க சீக்கிரம்!“ வீட்டைப் பூட்டிக் கொண்டு இருவரும் காரின் அருகில் சென்றனர்.

“அந்த வீடோ ஒங்க பேர்ல பதிவு ஆயிருக்கு. நீங்க காவல் துறையில பெரிய பொறுப்புல இருக்கீங்க! .உடையவங்க புழங்காத வீட்டை சமூக விரோதிகள் பயன்படுத்திப்பாங்கன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன்.

அங்க என்ன கண்டிஷன்னு நாம பார்த்துட்டு அக்கம் பக்கம் யாரையாவது பிடிச்சு சுத்தம் செய்வோம். அந்த பூட்டு வேணாம் வேற நல்ல பூட்டு எடுத்து வெச்சிருக்கேன் பூட்டிட்டு வருவோம். என்ன சொல்றீங்க?“

அன்று காலை பத்து மணி .

போதை தடுப்பு போலீசார் அந்த மாளிகை முன் குவிந்தனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்களைக் கைப்பற்றினர்.

அங்கு பதுங்கியிருந்த ரமேஷையும் சுரேஷையும் கைது செய்தனர்.

அந்த மாளிகைக்கு எதிரே பூட்டி இருந்த திருமண மண்டபத்தின் முகப்புப் பகுதியில் தரையில் ஜீவாவும் வசந்தியும் அமர்ந்து இருந்தனர்.

தண்ணீர்புட்டியை மனைவியிடம் கொடுத்தார் ஜீவா.

“ஆபீசர் மேம்! நாம உள்ளே நுழைஞ்சதும் அந்த கிரிமினல்ஸ் நம்மள தாக்க வந்தாங்களே! எப்படி தப்பிச்சோம் நாம?“ மனைவியிடம் கேட்டார் ஜீவா.

“ஒங்களுக்கு ஏதோ உள்ளுணர்வு சொன்னா மாதிரி எனக்கும் ஏதோ உள்ளுணர்வு சொல்லிச்சு. இந்த ஏரியாவுல போதைப் பொருள் நடமாட்டம் இருக்கறதால, எங்களோட தீக்கு இரையான பங்களாவை கிடங்கு மாதிரி சமூக விரோதிகள் பயன்படுத்தறாங்களோன்னு எனக்கு சந்தேகமா இருக்குன்னு போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் சொன்னேன்.

நாம உள்ளே நுழைஞ்ச பத்து நிமிசத்துல சரியான சமயத்துல அவங்களும் வந்துட்டாங்க. எதுக்கும் இருக்கட்டும்னு நான் துப்பாக்கி வைச்சு இருந்தேன்.

ஒருத்தன் என்னையும் ஒங்களையும் பின்னாடி இருந்து தாக்க வந்தான். அவன் கிட்டேந்து காப்பாத்த நம்ம ரெண்டு பேரையும் யாரோ தள்ளி விட்டா மாதிரி இருந்துச்சு.”

“ஒங்க அண்ணனும் அல்லியும் தான் ஆவியா இருந்து காப்பாத்தி இருக்காங்க!“

“அண்ணன் சரி! அது என்ன அல்லின்னு அல்லின்னு காலையிலேந்து பிதற்றல். அவ ஒங்க மனசை விட்டு நீங்கலேன்னா அவ போன இடத்துக்கு ஒங்கள அனுப்பி விடுவேன்!“ என்றாள் வசந்தி .

“அய்யிய்யோ விபரீத முடிவுக்குப் போகாதீங்க மேம்!” என்று அவளுடைய கரங்களைப் பற்றிக் கொண்டார் அவளுடைய கணவர் .

“அந்த பயம் இருக்கட்டும்!” என்று அவள் கணவருக்குக் கட்டளையிட்டாள்.

நீங்க ரெண்டு நாள் ஒங்க பிசினச பார்க்காம இந்த வீட்டை ஆள வெச்சு சுத்தம் செஞ்சு ஒயிட் வாஷ் பண்ணி ரெண்டு மூணு பூட்டு போட்டு பூட்டி விட்டு வாங்க!“

“ உத்தரவு மேம்!“ என்று அவள் அருகில் மீண்டும் நெருக்கமாக வந்த அவர் “நீங்க அல்லி மாதிரியே ஒடிசலா அழகா இருக்கீங்க!” என்றார்.

தண்ணீர் புட்டியால் கணவனை அடித்தாள் வசந்தி.

மதுரகவி சீனிவாசன்
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com

Comments

“ஆவிகளின் உரையாடல்” அதற்கு 2 மறுமொழிகள்

  1. […] ஆவிகளின் உரையாடல் காணி நிலம் வேண்டும் […]

  2. […] தாய்க்கும் தாய் ஆவிகளின் உரையாடல் […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.