ஆவுடையக்காள் தமிழ் மக்கள் அதிகம் அறிந்திராத ஓர் அரிய பெண் கவிஞர். காரைக்கால் அம்மையார், அவ்வையார் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவரா அவர் என அறிஞர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
சமூகம் தொடர்ந்து பெரும்படுகையினூடாக, ஆற்று வெள்ளமென ஒட்டு மொத்த மக்களின் வாழ்வின் நிகழ்வுகளைப் புரண்டோடச் செய்வதிலேயே மிகக் கவனமாக இருக்கிறது.
அங்கு சலனமில்லா நிலையும், காட்டுச் சத்தங்களோடான நிலையும் மாறி மாறி வந்து போகின்றன. இவைகள் இயற்கையானவை. இலக்கியமும் இதே போன்றது தான். சமூகமும், இலக்கியமும் ஒன்றிலிருந்து மற்றொன்றானது. இவை வேறு வேறல்ல.
”பெண் மதிக்கப்படல்” என்பது கால ஓட்டத்தில், வெவ்வேறு ஆதிக்க உணர்வுகளால் வெவ்வேறு நிலைகளை உடையதாக இருந்தன.
இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த பெண் தான் ஆவுடையக்காள்.
இவளுக்குச் சிறுவயதிலேயே திருமணம் நடந்து, கணவன் இறந்து விட விதவை ஆகிறாள். வீட்டில் ஒரு மூலையில் முடக்கப் படுகிறாள்; கல்வி மறுக்கப்பட்டது. சுதந்திரம் பறிக்கப்பட்டது. தாயும் மகளும் அழுகையைத் தவிர வேறொன்றையும் அக்காலத்தில் அறிந்திலர்.
அந்தச் சமயத்தில் வீட்டிற்குப் பிச்சை கேட்க வருகிறார் குருவாகிய அத்வைதி சத்குரு ஸ்ரீதர வேங்கடேசர். ஆவுடையக்காள் சமூகக் கட்டுப்பாடுகளை யெல்லாம் உடைத்தெறிந்து, அவர் செல்லும் இடமெல்லாம் சென்று, ’எனக்குக் கல்வியும் ஞானமும் தாருங்கள்’ என்று கெஞ்சுகிறார்.
குருவோ ஆவுடை அக்காவுக்குக் கல்விஞானம் புகட்டுகிறார். ஞானப் பெருங்கடல் அத்வைதத் தத்துவத்தையும், அதில் சிறந்த நூல்களையும்
ஓதுவிக்கின்றார்.
ஞானப்பழமான ஆவுடையக்காள், கால் போன போக்கில் நடந்து, வாழ்வியலின் சூட்சுமங்களை மக்களிடத்தே கண்டு, கேட்டுத் தெரிந்து முழுப் பொருளையும் உணர்கிறார்.
எண்ணற்ற புரட்சிக் கருத்துக்கள் அவரிடம் தோன்றுகின்றன. நடைமுறையில் உள்ள மூட நம்பிக்கைகள், ஆன்மீகக் குறைகள், தேவையற்ற பழக்க வழக்கம் போன்றவற்றைச் சாடிப் பாடல்கள் புனைந்தார்.
மக்களிடம். இவர் நேராகச் சொற்பொழிவுகள் ஆற்றியும், நூல்கள் மூலமாகவும், தனது கருத்துக்களைப் பரப்பி வந்தார். சிலகாலம் இவரைப் ’புத்தி பேதலித்தவர்’ என மக்கள் தள்ளி வைத்தனர்.
கொஞ்சம் கொஞ்சமாக இவரின் மகத்துவம் அறிந்து, பிற்காலத்தில் இவர் சென்ற பாதைகளில் எல்லாம் சென்று இவரை வழிபட ஆரம்பித்தன.ர் இவர் பாடல்களைப் பாட ஆரம்பித்தனர். அதற்குப் பிறகு இவர் செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் என அன்பால் அழைக்கப்படுகிறார்.
கடைசியாகக் குற்றாலம் அருவியில் குளித்து விட்டு, மலையில் தவமிருந்து வருகிறேன் என்று சென்றவர் திரும்பவேயில்லை. மலையில் மறைந்த மகத்துவமா இல்லை; மலையில் மறைக்கப்பட்ட மகத்துவமா தெரியவில்லை.
ஆவுடையக்காள் படைப்புகள்
இவர் எழுதிய வேதாந்த படைப்புகள் ”ஸ்ரீ ஆவுடை அக்காள் வேதாந்தத் திரட்டு” எனும் பெயரில் தொகுக்கப் பட்டுள்ளது. அதிலுள்ள நூல்கள் கீழ்வருமாறு பட்டியலிடப்படுகிறது:
• அத்வைத மெய்ஞ்ஞான ஆண்டி
• வேதாந்த ஆச்சே போச்சே
• வேதாந்த கும்மி
• குயில் கண்ணி
• வேதாந்த அம்மானை
• பராபரக்கண்ணி
• வேதாந்த நொண்டிச் சிந்து
• அத்வைத ஏலேலோ
• பிரம்மம் ஏகம்
• கோலாட்டப்பாட்டு
• மனம் புத்தி சம்வாதம் (கும்மிப் பாடல்)
• மெய்- பொய் விளக்கம்
• சுடாலைக் கதை
• சுடாலைக் கும்மி
• வேதாந்த ஞானரசக்கப்பல்
• வேதாந்த கப்பல்
• கிளிக்கண்ணி
• குரு
• தஷிணாமூர்த்தி படனம்
• ஞானக் குறவஞ்சி நாடகம்
• வாலாம்பிகை பந்து
• ஸ்ரீ வித்தை சோபனம்
• அனுபோக ரத்தினமாலை
• ஞான ரசக்கீர்த்தனைகள்
• வேதாந்த வண்டு
• பிரம்ம சொரூபம்
• அத்வைதத் தாலாட்டு
• தொட்டில் பாட்டு
• ஊஞ்சல்
• பகவத் கீதை வசனம்
• ஸ்ரீமத் பகவத் கீதாசாரம்
மேற்கண்ட நூல்களில், ஆதிசங்கரரின் தத்துவமான அத்வைதத் தத்துவக் கருத்துக்கள் வாழ்க்கைக்கு ஏற்ற, வாழ்வியல் சூழலை விவரிக்கின்றன. உலகம், உயிர், ஆன்மா, மாயை, பிரம்மம் என்பன பற்றிய புரிதல்களை, உலக இயக்கப் புரிதல்களைத் தத்துவார்த்தமாக விவரிக்கின்றன.
தாலாட்டு, கும்மி, கண்ணி, அம்மானை, சிந்து போன்ற சிற்றிலக்கிய வகைப்பாட்டில் இசையோடு பாடிய பாடல்களாக இவைகள் எழுதப் பட்டுள்ளன.
அறியப்படாத வரலாறு
ஆவுடையக்காளின் வரலாறு அல்லது அவரின் நூல்கள் பெருமளவில் இதுவரை எந்த நூலிலும் பதிவு செய்யப்படவே இல்லை. குறிப்பாக நான்கு ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே இவரின் பாடல்களைக் குறித்து எழுதியுள்ளனர்.
இவரின் வரலாறு, ரிஷிகேசம் ஸ்ரீ சிவானந்த சரஸ்வதி சுவாமிகள் எழுதிய ’மகாத்மாக்கள் சரித்திரங்கள்’ என்ற நூலிலே தான் முதல் முதலாக தெரியவருகிறது. இந்நூல் ’பெரியபுராணம்’ போன்ற ஆன்மீகப் பெரியோர்களின் வரலாறை இனம் காட்டிடும் நூலாகும்.
’பனுவல் போற்றுதும்’ என்ற நூலில் நாஞ்சில் நாடன் ’சார்புநிலை என்னும் திரை’ எனும் கட்டுரையில் சமூகப் புரட்சிப் பெண்ணாக ஸ்ரீ ஆவுடையக்காள் அவர்களின் வாழ்வு அமைந்திருப்பதை விவரிக்கின்றார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் சு.வெங்கட்ராமன் ’அறியப்படாத தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் நூலில் ஸ்ரீஆவுடை அக்காள் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது எனும் செய்தியை ஆராய்ந்து எழுதியுள்ளார்.
மகாகவி பாரதியாரின் மனைவியான செல்லம்மாவின் தங்கை வழி மகள் கோமதி ராஜாங்கம் அவர்கள்தான் ஆவுடையக்காவின் பாடல்களில் பெரும்பகுதியைத் தொகுத்தவர். ஏடுகளில் இருந்த பாடல்களை, செவிவழிப் பாடல்களைத் தொகுத்து தந்த பெருந்தகை இவரே ஆவார்.
மேலும் மகாகவி பாரதியார், ஆவுடையக்காளின் பாடல்களின் மேல் மிகுந்த ஆவல் கொண்டிருந்தார் எனும் செய்தியையும் இவரே பதிவுசெய்கிறார். இதன் மூலம் தான் பாரதியார் குறித்த கடுமையான விமர்சனங்கள் எழுந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
2002 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் ஞானானந்த தபோவனத்தின் தலைவர் சற்குரு ஞானானந்தகிரி சுவாமிகள் மிகப்பெருமளவில் சிறப்பாக ஆவுடையக்காளின் வேதாந்த பாடல்களையெல்லாம் தொகுத்துப் பெரும்நூலாக வெளியிட்டார். ஆனால் இந்த நூல் வெளிவந்து எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
திருவண்ணாமலை பகவான் ரமண மகரிஷியும் ஆவுடையக்காள் பாடலைப் பிறரைப் பாடச்சொல்லிக் கேட்பது உண்டு என்று ஆசிரமத்து ஆவணக் காப்பகத் தலைவர் சுந்தரராமன் கூறுகிறார். அங்கிருந்த சிறுசிறு பிரசுரங்களையும் பதிப்பிற்குத் தருகிறார். இதுபோல் வெளிவராமல் அங்கங்கு சிறுசிறு பிரசுரங்களாக அல்லது ஏடுகளாகத் தமிழ்நாடு முழுவதும் ஆவுடையக்காளின் பாடல்கள் இன்னும் இருக்க வாய்ப்பிருக்கிறது.
சங்கர கிருபா மாத இதழிலும் ராமகிருஷ்ண விஜயம் மாத இதழிலும் ஆவுடையக்காள் குறித்த செய்தியும், பாடல்களின் தன்மை குறித்தும் கட்டுரைகள் வந்துள்ளன.
மேற்கண்ட வெளிப்பாடுகளைத் தவிர வேறு எந்தவிதப் பதிவுகளையும் நாம் காண முடியவில்லை.
இளங்கோ ஜெயராமன் அவர்கள் தனது இணையப் பதிவில் கூறும்பொழுது, தென்காசி மேலகரம் எனும் பகுதியில் உள்ள சில பெரியவர்கள் சிறுசிறு பாடல் பிரசுரங்களை வைத்திருந்ததாகக் கூறுகின்றார். எனவே, பாடலாகப் பல இடங்களில் இது பரவி இருக்கிறது என்பதை உணர முடிகிறது. ஆனாலும், இப்பாடல்கள் குறித்தான பிறரின் கருத்துக்களோ செய்திகளோ எங்கும் பேசப்படவில்லை.
இதேபோல, நம் கவனத்திற்கு வந்திருக்கக்கூடிய தமிழ் இலக்கிய வரலாறு நூல்தொகுதிகளில் எந்த இலக்கிய வரலாற்று பகுதியிலும் வேதாந்த நூல்களின் வரலாறு அல்லது ஆவுடையக்காள் போன்ற வேதாந்திகளின் வரலாறு பதிவுசெய்யப்படவில்லை. அனைத்து இலக்கிய வரலாற்றிலும் வேதாந்த இலக்கியங்கள் முழுமையும் மறக்கப்பட்டு இருக்கிறது; அல்லது மறைக்கப்பட்டு இருக்கிறது; அல்லது புதைக்கப்பட்டு இருக்கிறது.
ஆவுடையக்காளின் பாடல் வரிகளில் சில:
”தீட்டு திரண்டு உருண்டு சிலை போலே பெண்ணாகி வீட்டில் இருக்க
தீட்டு ஓடிப்போச்சோ- பராபரமே”
”எச்சிலுன் வாயும் உடலும் ஏகமாய் இருக்கையிலே
பாதம் எச்சில் என்று அலம்ப சுத்தமாச்சோ- பராபரமே”
”சப்த கோடி மந்திரம் சாஸ்திரங்கள் உள்ளதும் போச்சே
சத்து மயமான சாட்சியே நான் என்பது ஆச்சே”
”தாமிரத்தைத் தெய்வமென்று சாதிப்பார் தரணியிலே
மிருத்யுவே தெய்வமென்று விடுவார் உலகினிலே
தத்துவமாம் மெய்ப்பொருளைத் தப்பவிட்டு நின்றோமோ?”
ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய ஆவுடையக்காள் அவர்களைப் பற்றியும் அவர்தம் படைப்புகள் பற்றியும் ஆராய வேண்டியது தமிழ்ச் சமூகத்தின் கடமை.
புதையலில் இது போன்ற மற்றுமொரு வேதாந்தி குறித்தும் அவரின் நூல்கள் குறித்தும் அடுத்த வாரம் பேசுவோமே!
புதையல் தேடுவோம்…
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!