இசைக்காக இன்னுயிர் இழந்தோன்

‘சின்னத்தம்பி’ என்ற திரைப்படம் பார்த்திருப்பீர்கள். கிட்டதட்ட ‘சின்னத்தம்பி’ போன்று கேட்பவர்களைத் தன் பக்கம் ஈர்க்கும் ஆற்றல் உடைய பாடகர் ஒருவர், எங்கள் ஊரில் இருந்தார். அவரது பெயர் முத்தையா.

இடக்கைப்பழக்கம் உடையவர் என்பதால், ஊரார் இடக்கையன் என்றும் இடக்கையன் முத்தையா என்றும் பட்டப் பெயரிட்டு அழைப்பார்கள்.அவர் என்னைத் ‘தம்பி’ என்றும், என் அம்மாவை ‘அக்கா’ என்று வாய்நிறையக் கூப்பிடுவார்.

சற்றுக் கருத்த நிறம், ஆறேகால் அடி உயரம், கம்பீரமான தோற்றம், முறுக்கேறிய உடல்வாகு, வாய் நிறைய வெற்றிலையுடன் பீமன் போன்ற தோற்றம். பள்ளிப்படிப்புக் குறைவு; உலக ஞானம் அதிகம்.

கிணறு வெட்டுவது, தென்னை மரங்களுக்குக் குழிதோண்டுவது, சுற்றுச்சுவர் எழுப்புவது, மண்வெட்டுவது போன்ற வேலைகளை அனாயசமாகச் செய்யும் அபூர்வமான உடல்வாகு கொண்டவர்.

மூன்று நான்கு பேர் தொடர்ந்து செய்யும் வேலையைத் தனி ஒருவராகச் செய்து முடிக்கும் அசுரபலம்.

பாடகர் தோற்றத்தில் ஜிப்பா அணிந்து ஒரு பணியாளர் பட்டாளத்தையே தன் வசம் வைத்திருப்பார். கடவுள் அவருக்கு அற்புதமான குரல் வளத்தை வழங்கியிருந்தார்.

தியாகராஜ பாகவதர், கிட்டப்பா, டி.ஆர்.மகாலிங்கம், சி.எஸ்.ஜெயராமன், டி.எம்.சௌந்தரராஜன், கண்டசாலா, திருச்சி லோகநாதன் ஆகியோரின் பாடல்களைப் பிசிறு தட்டாமல் உச்சசுதியில் தெளிவாகப் பாடிக் கேட்பவரை மயக்கமுறச் செய்துவிடுவார்.

இரவுப் பாடகன்

ஐம்பதுகளில் எங்கள் வீடு அடர்ந்த மரங்களுக்கு இடையே சற்று ஒதுக்குப்புறமாக இருந்தது. மா, பலா, தென்னை மரங்களால் சூழப்பட்டு இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் இருந்தது.

மின்சார வசதி அரசால் செய்துதரப்படவில்லை. இடைஇடையே பலநூறு அடிகளுக்கப்பால் வீடுகள் இருந்தன. எங்கள் வீட்டிற்குச் சற்று தொலைவில் இடக்கையன் வீடு இருந்தது.

இரவில் ஏழு அல்லது எட்டு மணி அளவில் அன்றைய வேலையை முடித்தபின் தன் வீட்டிற்கு வரும் இடக்கையன் வேலை செய்த அலுப்பிற்குச் சற்றுப் போதையேற்றிக் கொண்டு மெதுவாக நடந்து வருவார்.

அந்தக் காரிருளில் ‘காயாத கானகத்தே நின்றுலாவும்’ என்ற உச்சஸ்தாயிப் பாடலை மிகச் சிறப்பாக பாடிக் கொண்டு வரும்போது அரைக் கிலோமீட்டருக்கு முன்பே அவரது குரல் துல்லியமாகக் கேட்கும்.

தெருவில் இருக்கும் பெண்கள், ஆண்கள் மற்றும் என்னைப் போன்ற சிறுவர்கள் யாவரும் செய்கிற வேலையை அப்படி அப்படியே போட்டுவிட்டுப் பாடலைக் கேட்க முன் வாசலில் வந்து அமர்வார்கள்.

தெருவெல்லாம் இடைக்கையன் வர்ரான், இடைக்கையன் வர்ரான் என்ற பேச்சாகவே இருக்கும். ‘எங்கள் திராவிட பொன்னாடே’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘செந்தமிழ் தேன் மொழியாள்’, ‘மன்மத லீலையை வென்றார்’, ‘காணா இன்பம் கனிந்ததே’, ‘இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’, ‘நான் கவிஞனும் அல்ல’, ‘வாழ்க்கை எனும் ஓடம்’, ‘காலத்தால் அழியாத காவியம் தரவந்த’ போன்ற பாடல்களை எந்தவித இசைக்கருவியுமின்றித் துல்லியமாகச் சுதி சுத்தமாகப் பிசிறின்றிப் பாடிக் கேட்பவர்களைக் கிறங்கடித்து விடுவார்.

அவரது குரல்வளம், பாடும் நுட்பம், துல்லியமான ஸ்ருதி, தெளிவுமிக்க ஒலி உச்சரிப்பு, கையாளும் சங்கதியின் நுட்பம் யாவும் ஒவ்வொரு பாடலையும் நூறு முறை கேட்கச் செய்யும். இசைக்காக தன் வாழ்வில் ஒரு பகுதியை ஒதுக்கி வாழ்ந்தார் இடைக்கையன்.

அன்றையக் காலக்கட்டத்தில் இப்பொழுது இருப்பது போல் தொலைக்காட்சி வசதி இருந்திருக்குமானால், இடக்கையன் தமிழகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டிருப்பார். திரையுலகம் அவரை நன்கு பயன்படுத்தியிருக்கும் என்பதில் எனக்கு எவ்விதமான சந்தேகமும் கிடையாது.

எங்கள் ஊரில் ‘அனந்தன் பாலம்’ என்ற பாலம் ஒன்று உண்டு. அதற்கு என்ன காரணத்தினாலோ ‘அனந்தன் பாலம்’ என்று பெயர் கூறுவார்கள்.

அந்தப் பாலத்தின் கீழ்ப்புறம் இடக்கையன் தன் பரிவாரங்களுடன் சில ஆண்டுகளுக்கு முன் கிணறு தோண்டிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் நலம் விசாரித்து விட்டுத் தன்னுடன் பணியாற்றுபவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கப் பாடல் பாட ஆரம்பித்தார்.

‘மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்’ எனக் கம்பீரமான குரலில் ஹரஹரப்ரியா இராகத்தில் அமைந்த அப்பாடலைப் பாடத் தொடங்கினார். டி.எம்.எஸ்ஸின் குரலுக்குச் சற்றும் மாற்றுக் குறையாத தன் வெண்கலக் குரலால் கமகங்களைப் பாடும்போது மெய்சிலிர்த்து, மெய்மறந்து நின்றுவிட்டேன்.

இசைக்காக இன்னுயிர்

நாட்கள் நகர்ந்தன. எனது பணியின் நிமித்தமாக இருநூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் வந்து வாழலானேன். ஆனால் பழைய பாடல்களைக் கேட்கும் போது இடக்கையனின் ஞாபகம் வருவதை இன்னமும் தவிர்க்க முடியவில்லை.

சென்ற மாதம் நாகர்கோவிலில் உள்ள எங்கள் வீட்டிற்குச் சென்றிருந்தேன். என் பெரியப்பா மகள் கிரேஸ் (எனக்கு அக்கா) வீட்டிற்கும் சென்றிருந்தேன். பேச்சு, திரைப்படப் பாடல்களை நோக்கித் திரும்பியது.

தொலைக்காட்சிப் பாடகர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, ‘இது என்ன பாட்டு, இடக்கையன் முத்தையா பாடாத பாட்டா? அது எப்படி இருக்கும் தெரியுமா?’ என்று கூறினாள், என் அக்காள் கிரேஸ். அவளிடம் நான், ‘சரி, இடக்கையன் எப்படி இருக்கிறார்? அவரைப் பார்த்து ரொம்ப காலமாகிறது’ என்று கேட்டேன.;

அது உனக்குத் தெரியாதா? அவர் ஒரு நாள், அவரது மருமகனது ஹோட்டலில் விறகு வெட்டிக் கொண்டிருந்தார். கடையில் இருந்த ரேடியோவில் சிலோன் ஸ்டேசனில் டி.எம்.சௌந்தரராஜன் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

இடக்கையன் ஆர்வமிகுதியில் ரேடியோவின் வால்யூமைக் கூட்டவும், மருமகனுக்குக் கோபம் வந்து, வாய்த்தகராறு முற்றிவிட்டது.

ஆத்திரப்பட்ட மருமகன், இடக்கையனை அரிவாளால் வெட்டிக் கொன்று விட்டான். அந்த இடத்திலேயே பாட்டைக் கேட்டுக் கொண்டே துடிதுடித்துச் செத்தப் போனார்’ என்று கூறியதும் அதிர்ச்சியாகிவிட்டேன்.

அதற்கு மேல் அங்கிருக்க எனக்குப் பிடிக்காமல் நேராக வீட்டிற்கு வந்து விட்டேன். வீட்டிற்கு வந்து அம்மாவிடம் நடந்தவைகளைக் கேட்டு உறுதி செய்து கொண்டேன். அந்த சோக நிகழ்வை என்னால் ஜீரணிக்கக் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகியிருக்கும்.

எவ்வித நோக்கமோ, வழிகாட்டுதலோ இன்றி, இசை பாடியே வாழ்ந்து, இசையாலே எல்லோரையும் மகிழ்வித்து, இசைக்காக தன் இன்னுயிரை இழந்தான் இடக்கையன்.

– சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்