இசைஞானியார் நாயனார் தேவார மூவருள் ஒருவரான சுந்தரரின் தாய் ஆவார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் பெண் நாயன்மார்கள் மூவர்.
முதலாமவர் இறையருளால் மாயமாங்கனி பெற்ற காரைக்கால் அம்மையார்.
இரண்டாமவர் திருஞான சம்பந்தரால் சைவத்திற்கு மாறிய நின்றசீர் நெடுமாறப் பாண்டியனின் மனைவியான மங்கையர்கரசியார்.
மூன்றாமவர் வன்தொண்டர் என்றழைக்கப்படும் சுந்தரரின் தாயான இசைஞானியார்.
பெண் நாயன்மார்களில் மங்கையர்கரசியாரின் கணவரான நின்றசீர் நெடுமாற பாண்டியனும், இசைஞானியாரின் கணவனான சடையனாரும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் வைத்துப் போற்றப்படுகிறார்கள்.
இசைஞானியார், சடையனார், சுந்தரர் என குடும்ப உறுப்பினர்கள் மூவரும் 63 நாயன்மார்களாகச் சிறப்பிக்கப்படுகின்றனர் என்பது இன்னும் சிறப்பு.
இசைஞானியார் திருவாரூரில் ஞான சிவாச்சாரியார் என்பவரின் மகளாகப் பிறந்தார்.
சிறுவயது முதலே சிவனாரின் மேல் கொண்ட பேரன்பு காரணமாக திருவாரூரில் உள்ள தியாகராஜரை தினமும் போற்றி வழிபட்டு வந்தார்.
வளர்ந்ததும் இசைஞானியார் திருமுனைப்பாடி நாட்டைச் சார்ந்த ஆதி சைவரான சடையனாருக்கு அவரை திருமணம் முடித்துக் கொடுத்தனர்.
சிவபக்தரை கணவனாகப் பெற்றதால் அவருடைய சிவவழிபாட்டிற்கு தடையேதும் ஏற்படாது இடையாறாது வழிபட்டு வந்தார்.
சிவன்பால் அவர் கொண்டிருந்த பேரன்பினால் சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான சுந்தரரை மகனாக ஈன்றெடுக்கும் பேறு பெற்றார்.
நரசிங்க முனையரைய நாயனார் சுந்தரரின் குழந்தை பருவத்தில் அவர்மேல் அன்பு கொண்டு, அரண்மனைக்குக் கொண்டு சென்று அவரை வளர்க்க விரும்புகையில் சடையனாருடன் இணைந்து இசைஞானியாரும் மனமாரச் சம்மதித்தார்.
இறுதியில் நீங்காத இன்பமான சிவனாரின் திருவடியை அடைந்து பேரின்பம் பெற்றார்.
சிறுவயது முதலே சிவன்மேல் அன்பு கொண்டதாலும், சுந்தரரை மைந்தனாகப் பெற்றதாலும் இசைஞானியார் நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவராக வைத்துப் போற்றப்படுகிறார்.
இசைஞானியார் நாயனார் குருபூஜை சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பின்பற்றப்படுகிறது.
இசைஞானியார் நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘இசைஞானி காதலன் அடியார்க்கு அடியேன்’ என்று போற்றுகிறார்.