இஞ்சி

இஞ்சி – மருத்துவ பயன்கள்

இஞ்சி பசியைத் தூண்டும், உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து குடலிலுள்ள வாயுவை நீக்கும். காசம், கபம், பித்தம், வாதசுரம் ஆகியவற்றையும் போக்கும்.

இஞ்சி இரு ஆண்டுகள் வரை வாழும் சிறுசெடி. மணற்பாங்கான நிலங்களில் இஞ்சி ஏராளமாக பயிராகின்றது. தமிழகம், பஞ்சாப் மாநிலங்களிலும், வங்காள தேசத்திலும் அதிகமாக விளைகின்றது.

கிழங்குகளே பொதுவாக இஞ்சி எனப்படுபவை. இவை, மருத்துவப் பண்பும், உணவு உபயோகமும் உள்ளவை. வாசனைக்காகவும், காரத்திற்காகவும் இவை உணவில் சேர்க்கப்படும்.

நன்றாகக் காயவைத்துப் பதப்படுத்தப்பட்ட இஞ்சியின் கிழங்குகளே சுக்கு எனப்படுபவை. இஞ்சியின் எல்லா மருத்துவக் குணங்களும் இதற்கும் உண்டு. சுக்கு, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

முற்றிய பசுமையான இஞ்சியின் மேல் தோலைச் சீவி நீக்கவும். பின்னர், சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தமான தேனில், இஞ்சித் துண்டுகள் மூழ்கியிருக்குமாறு ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறிய பின்னர், தினமும் இரண்டு துண்டுகள் வீதம், உணவிற்கு முன்னர் மென்று சாப்பிட்டு வர‌ பசியின்மை, வயிற்றைப் பொருமல் தீரும்.

இஞ்சிச் சாற்றை தொப்புளைச் சுற்றிப் பற்றுப்போட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம் நீங்கும்.

இஞ்சிச் சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி சாறுடன் சிறிதளவு தேன் கலந்து, 2 அல்லது 3 நாட்களுக்குத் தினமும் மூன்று வேளைகள் குடித்தால் வயிற்று வலி மற்றும் வயிறு கனமாக இருத்தல் குணமாகும்.

இஞ்சியை இடித்துச் சாறு எடுக்கவும். ஒரு தேக்கரண்டி அளவு சாறுடன், சிறிதளவு தேன் கலந்து, தினமும் மூன்று வேளைகள், 7 நாட்களுக்குப் பருகினால் சளியுடன் கூடிய இருமல் கட்டுப்படும்.

இஞ்சியைத் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, தேனில் 48 நாட்கள் ஊறவைக்க வேண்டும். தினந்தோறும், காலையில், ஒரு துண்டு வீதம் சாப்பிட்டு வர வேண்டும். நீண்ட நாட்கள் தொடர்ந்து இவ்வாறு செய்துவர, நரை, திரை, மூப்பு அணுகாது. தேகம் அழகுபெறும். மனம் பலப்படும். இளமை நிலைத்திருக்கும்.

சுக்கைப் பொடி செய்யவும். அரைத் தேக்கரண்டி அளவு பொடியைச் சிறிது தண்ணீர் கலந்து சூடாக்கி, பசை போலச் செய்து கொண்டு வலி இருக்கும் இடத்தில் பசையைப் பரவலாகத் தடவினால் தலைவலி தீரும்.

இஞ்சிச் சாறும் வெங்காயச் சாறும் வகைக்கு ஒரு தேக்கரண்டி எடுத்து கலந்து, சிறிதளவு தேன் சேர்த்து உள்ளுக்குள் சாப்பிட்டால் வாந்தி கட்டுப்படும்.