இடங்கழி நாயனார் – அரச களஞ்சியத்திலிருந்து சிவனடியார்கள் வேண்டியவற்றை எடுக்க அனுமதித்த குறுநில மன்னர்

இடங்கழி நாயனார் அரச களஞ்சியத்திலிருந்து சிவனடியார்களுக்குத் தேவையான பொன்னையும் நெல்லையும் எடுத்துக் கொள்ள அனுமதித்த குறுநில மன்னர். இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.

இடங்கழி நாயனார் பண்டைய கோனாட்டினை கொடும்பாளுரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த வேளிர் குலத்தினைச் சார்ந்த குறுநில மன்னர்.

கோனாடு என்பது இன்றைய புதுக்கோட்டை நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகும்.

வேளிர் குல மன்னர்கள் சிவபிரானிடத்தில் பெரும் பக்தியைக் கொண்டவர்கள். அவர்களின் வழித்தோன்றலான இடங்கழி நாயனாரும் சிவபெருமானிடம் பேரன்பு கொண்டு சிவபிரானின் அருட்செல்வத்தைப் பெறுவதே தம்முடைய பிறவியின் பயன் என்று கருதினார்.

ஆதலால் சிவாலயங்களுக்கு பொன்னும் நெல்லும் கொடுத்து திருப்பணிகள் செவ்வனே நடைபெற உதவினார். சிவனடியார்களுக்கு அவர்கள் வேண்டுபவற்றைக் கொடுத்து அவர்களைச் சிறப்பித்து வந்தார்.

அவருடைய ஆட்சியில் இருந்த குடிகளில் ஒருவர் சிவனடியார்களுக்கு தினமும் திருவமுது செய்விப்பதை வாழ்நாள் தொண்டாகக் கருதி செய்வித்து வந்தார்.

அப்போது ஒருநாள் அத்தொண்டரிடம் சிவனடியார்களுக்கு திருவமுது செய்விப்பதற்கு பணமும் பொருளும் இல்லை.

‘அடியவர்களுக்கு திருத்தொண்டு செய்விக்க தேவையான பொருளை எப்படிப் பெறுவது?’ என்று அவர் எண்ணுகையில் இடங்கழி நாயனாரின் அரச களஞ்சியம் அவரின் நினைவிற்கு வந்தது.

‘அரசனுடைய களஞ்சியத்திலிருந்து நெல்லை எடுத்து வந்து அடியவர்களுக்கு திருவமுது செய்வித்தால் என்ன?’ என்று எண்ணினார் தொண்டர்.

தம்முடைய எண்ணத்தை செயலாக்கும் விதமாக அரச களஞ்சியத்தை நோக்கிப் புறப்பட்டார்.

அத்தொண்டர் இதற்கு முன்னர் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டதில்லை. ஆதலால் அரச களஞ்சியத்திலிருந்து நெல்லை எடுக்கும்போது அரண்மனை காவலர்களிடம் சிக்கிக் கொண்டார்.

காவலர்கள் அத்தொண்டரை இடங்கழியார் முன் கொண்டு நிறுத்தினர்.

அத்தொண்டரின் தோற்றத்தைப் பார்த்து, “பார்ப்பதற்கு சிவத்தொண்டர் போல் காட்சியளிக்கும் நீங்கள் ஏன் அரச களஞ்சியத்திலிருந்து நெல்லை எடுக்கும் தீஞ்செயலைச் செய்தீர்கள்?” என்று வினவினார் இடங்கழியார்.

அத்தொண்டர் சிவனடியார்களுக்கு தினமும் திருவமுது படைக்கும் தொண்டினை வாழ்நாள் முழுவதும் மேற்கொள்ளும் குறிக்கோள் பற்றியும் திருவமுது செய்விக்க பணமும் பொருளும் இல்லாததால் அரச களஞ்சியத்திலிருந்து கொடுத்துக் கொள்ள முனைந்ததையும் எடுத்துரைத்தார்.

தொண்டரின் கூற்றினைக் கேட்டதும், ‘அடியார்களுக்கு திருத்தொண்டு செய்விக்க அல்லவா இவர் நெல்லை அரச களஞ்சியத்திலிருந்து எடுத்துள்ளார்’ என்று எண்ணினார் இடங்கழியார்.

உடனே அத்தொண்டருக்கு அவர் வேண்டியளவு நெல்லையும் பொன்னையும் கொடுத்தார் இடங்கழியார்.

‘இத்தொண்டரைப் போல எத்தனை சிவனடியார்கள் துன்புறுகிறார்களோ?’ என்ற எண்ணம் அவர் மனதில் ஏற்பட்டது.

ஆதலால் அவர் நாடு முழுவதும் ‘சிவனடியார்கள் தாங்கள் விரும்பும் பொன்னையும் நெல்லையும் அரச களஞ்சியத்திலிருந்து தேவையான சமயங்களில் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு தடை இல்லை’ என்று அறிவிக்கச் செய்தார்.

சிவனடியார்களும் தங்களுக்கு வேண்டியவற்றை அரச களஞ்சியத்திலிருந்து எடுத்துச் சென்றனர்.

இவ்வாறு அடியவர்களின் வறுமையைப் போக்கி சிவதொண்டு புரிந்த இடங்கழி நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகும் பெருமை பெற்றார்.

இடங்கழி நாயனார் குருபூஜை ஐப்பசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இடங்கழி நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘மடல் சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் அடியேன்’ என்று போற்றுகிறார்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.