இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை

உயிரினங்களைக் கவர்ந்திழுப்பதும் மற்றும் அச்சப்படச் செய்வதுமான இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

இடி மின்னல் உண்டாகும்போது பலவற்றைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். சிலவற்றைக் கட்டாயம் செய்யக் கூடாது.

இடி மற்றும் மின்னல் உண்டாகும் நேரம் மற்றும் இடத்தை முன்கூட்டிக் கணிப்பது என்பது சிரமமான ஒன்று.

இடி மின்னல் ஏற்படும்போது நாம் சாதாரணமாகச் செய்யும் செயல்கள் நமக்கும், நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் பெரிய பாதிப்பையும், சிலநேரங்களில் உயிரிழப்பையும் உண்டாக்கலாம்.

எனவே இயற்கை பேரிடரான இடி மற்றும் மின்னல் உண்டாவதை புரிந்து கொண்டு எச்சரிக்கையாக செயல்படுவது மிகவும் அவசியம்.

இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை

வெளியிடங்களில் இருக்கும்போது

நாம் வெட்ட வெளியில் இருக்க நேர்ந்தால் உயரமான மரம், மின் மற்றும் அலைபேசி கோபுரத்திற்கு கீழே ஒதுங்கக்கூடாது.

ஏனெனில் உயரமான மரங்களையும், மின் மற்றும் அலைபேசி கோபுரங்களையும் இடி மற்றும் மின்னல் தாக்கும் அபாயம் அதிகம்.

 

 

வெளியிடங்களில் இருக்க நேர்ந்தால் உடனடியாக கட்டிடங்களுக்குள் செல்ல வேண்டும்.

கட்டிடங்கள் இல்லாத இடங்கள் எனில் குகை, அகழி, பள்ளமான பகுதிகள் ஆகியவை ஒதுங்க ஏற்ற பகுதிகளாகும்.

நாம் மலைப்பகுதிகளில் இருக்க நேர்ந்தால் மலையின் பள்ளமான பகுதிக்கு உடனடியாகச் செல்ல வேண்டும்.

வெட்ட வெளியில் தனித்த மரங்கள் இருக்கும் இடம் எனில் கைகளால் கால்களை இறுக அணைத்து கால்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் குனிந்த நிலையில் (குத்த வைத்து) தரையில் அமர்ந்து கொள்வது பாதுகாப்பானது.

 

வெட்டவெளியில் இடி மின்னலின்போது அமரும் முறை
வெட்டவெளியில் இடி மின்னலின்போது அமரும் முறை

 

வெளியிடங்களில் இருக்கும்போது நாம் சிறிதளவு மின்சாரத்தை உணர்ந்தாலோ, உடலில் உள்ள உரோமங்கள் சிலிர்த்தாலோ, உடல் கூச்சம் ஏற்பட்டாலோ அவை மின்னல் தாக்குவதற்கான அறிகுறிகளாகும்.

எனவே அச்சமயம் நாம் உடனடியாக மேற்கூறிய முறையில் தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும்.

நீர்நிலைகளில் குளித்துக் கொண்டோ, மீன் பிடித்துக்கொண்டோ, படகு சவாரி உள்ளிட்ட பொழுது போக்குகளில் ஈடுபட்டாலோ உடனடியாக அவற்றைத் தவிர்த்துவிட்டு நீர்நிலைகளை விட்டு வெளியேற வேண்டும்.

கால்நடைகளை இடிதாங்கி பொருத்திய பாதுகாப்பான இடத்தில் இருக்கச் செய்வதன் மூலம் கால்நடைகளைப் பாதுகாக்கலாம்.

தொலைபேசி இணைப்புகள், மின்சார இணைப்புகளை பூமிக்குக் கீழே புதைப்பதால் இடி மற்றும் மின்னல் தாக்குதலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.

நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்ய நேர்ந்தால் இடி மற்றும் மின்னல் உண்டாகும்போது நான்கு சக்கர வாகனத்தின் ஜன்னல் மற்றும் கதவுகளை அடைத்து விடவும். வண்டியை நிறுத்தி விட்டு உள்ளேயே அமர்ந்திருக்க வேண்டும்.

வெட்ட வெளியைவிட நான்கு சக்கர வாகனம் பாதுகாப்பானது.

வீட்டிற்குள் இருக்கும்போது

வீட்டிற்குள் இருக்கும்போது மின்சாரம் கடத்தும் பொருட்களான ரேடியேட்டர்கள், மின்அடுப்பு, உலோகக்குழாய்கள், தண்ணீர்த் தொட்டிகள், தொலைபேசிகள் ஆகியவற்றிலிருந்து தள்ளி இருக்க வேண்டும்.

வீட்டின் ஜன்னல், கதவுகளை இறுக மூடி இருப்பது சிறந்தது.

இடிச்சத்தம் கேட்கும்போது தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

மின்னல் வெளிச்சத்திற்கும், இடிச்சத்தத்திற்கும் இடைப்பட்ட காலநொடிகளை மூன்றால் வகுத்தால் வரும் எண்ணே மின்னலுக்கும், நமக்கும் இடையே உள்ள இடைவெளி கிமீ-ல் ஆகும்.

எடுத்துக்காட்டாக மின்னலுக்கும், இடிக்கும் இடையே உள்ள காலஅளவு 30 நொடிகள் எனில் மின்னலுக்கும் நமக்கும் இடையே உள்ள இடைவெளி 30/3 = 10 கிமீ ஆகும்.

இடி மின்னலின் போது செய்யக் கூடாதவை

இடி மற்றும் மின்னல் உண்டாகும்போது மின்சாரத்தால் இயங்கும் ஹேர்டிரையர்கள், மின்சார பல்துலக்கிகள், மின்சார ரேசர்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தக் கூடாது.

ஏனெனில் மின்னலின் போது, மின்னலில் இருந்து வரும் மின்சாரம் அவற்றைப் பயன்படுத்துவோரை எளிதில் தாக்கும்.

கைபேசி, தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் பயன்பாடுகளைத் தவிர்க்க வேண்டும்.

இடி மற்றும் மின்னல் உண்டாகும்போது குளிப்பது, கைகழுவது, துவைப்பது உள்ளிட்ட தண்ணீரைக் கொண்டு செய்யும் செயல்களைத் தவிர்க்க வேண்டும்.

வெட்ட வெளியில் உலோகப் பொருட்களை மின்னல் உண்டாகும் போது பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

இடி மின்னலின்போது இருசக்கர வாகனங்கள், மிதிவண்டிகள் உள்ளிட்டவைகளில் பயணம், கால்நடையாகச் செல்வது ஆகியவற்றை மேற்கொள்ளக் கூடாது.

இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை பற்றித் தெரிந்து கொண்டீர்கள்.

இடி மின்னல் அதிகம் தாக்கும் இடங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

இன்னும் மின்னல் மின்னும்.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.