இயற்கை பேரிடரான இடி மின்னல் ஏற்படும்போது ஆபத்தான இடங்கள் பொருட்கள் சில உள்ளன. அத்தகைய இடங்கள் மற்றும் பொருட்களின் அருகில் இருக்கும்போது அவை நமக்கு ஆபத்தினை உண்டாக்கும்.
எனவே இடி மின்னல் உண்டாகும்போது அத்தகைய இடங்கள் மற்றும் பொருட்களிலிருந்து நாம் தள்ளி இருப்பது நமக்கு நன்மை அளிக்கும்.
ஆதலால் இடி மின்னல் ஏற்படும்போது ஆபத்தான இடங்கள் பொருட்கள் பற்றி அறிந்து கொள்வது அவசியமான ஒன்று. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
இடி மின்னல் உண்டாகும்போது ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள் மற்றும் பொருட்கள்
உயர்ந்த பெரிய மரங்கள் அடங்கிய காடுகளின் விளிம்புகளில் இருப்பது ஆபத்தானதாகும். ஏனெனில் மின்னல் மற்றும் இடி உயர்ந்த மரங்களை எளிதில் தாக்கும்.
களத்து மேடு, சிறிய கோவில்கள், தேவாலயங்கள், வைக்கோல் போர், மர வண்டிகள், கண்காணிப்பு கோபுரங்கள், உயர்ந்த இடங்கள், உயரமாக உள்ள குடிசைகள், உயர்ந்த தங்கும் இடங்கள் ஆகியவை பாதுகாப்பற்ற இடங்கள் ஆகும்.
சிறிய ரக மர வீடுகளில் உள்ள தண்ணீர் குழாய்கள் மற்றும் உலோகப் பொருட்கள் ஆபத்தானதாகும்.
பாதுகாப்பற்ற மின்சார கம்பி வடங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகள் ஆபத்தானதாகும்.
கொடிக் கம்பம், தொலைக்காட்சி ஆண்டனா, உயரமான உலோக குழாய்கள் மற்றும் உயரமான உலோக அமைப்புகளுக்கு அருகில் இருத்தல் ஆபத்தானதாகும்.
ஏரிகள் மற்றும் நீச்சல் குளத்திற்கு உள்ளே இருத்தல் ஆபத்தானதாகும்.
திறந்தவெளி நீர்பரப்புகளான ஏரிகள், குளங்களில் உள்ள சிறுபடகுகளில் இருத்தல் ஆபத்தானதாகும்.
கோல்ஃப் விளையாட்டு மைதானம் மற்றும் பரந்த நிலப்பரப்பு கொண்ட இடங்கள் ஆகியவை அதிகமாக மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகும் இடங்களாகும்.
செங்குத்தான மலை முகடுகள் மற்றும் மலைச்சரிவுப் பகுதிகள்.
சமதளப் பரப்பைவிட மலை முகடுகள் அதிக மின்னல் தாக்குதல் ஏற்படும் ஆபத்தான இடமாகும்.
இரும்புக் கம்பியிலான வேலி அமைப்புகள், இரும்பிலான கைப்பிடி மற்றும் ஏனைய இரும்பிலான பொருட்கள் ஆபத்தானதாகும்.
இடி மின்னலின்போது குதிரை ஏற்றம், சைக்கிள், இருசக்கர மோட்டார் வாகனம் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் பயணம் பெரிய ஆபத்தை உண்டாக்கும்.
இரும்பிலான கோடாரி, மண்வெட்டி, ஊஞ்சல் மற்றும் தோட்டங்களில் உள்ள இரும்பு இருக்கைகள் ஆபத்தை உண்டாக்கும்.
சிறிய மற்றும் பாதுகாப்பற்ற திறந்த வெளி அறையில் மக்கள் கூடுதல்,
சிற்றுந்துக்கு அருகில் இருப்பது, சிற்றுந்தின் மேல் சாய்ந்து இருப்பது ஆபத்தானது.
சாலை செப்பனிடப்படும் உருளை வண்டி (Road Roller), சரக்கு லாரி மற்றும் பெரிய இரும்பிலான வண்டிகளுக்கு அருகில் இருப்பது ஆபத்தானதாகும்.
உலோகத்திலான வானூர்தி உட்பட அனைத்து வகையான வானூர்திகளும் மின்னல் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளவை.
இடி மின்னலின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.
இன்னும் மின்னல் மின்னும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!