இடி மின்னல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்து கொளவது நல்லது..
இடி மின்னல் என்னும் இயற்கை பேரிடர்கள் மனிதனுக்கு உடல் அளவில் பாதிப்பையும், பொருளாதாரப் பாதிப்பையும், சமயத்தில் உயிரிழப்பினையும் உண்டாக்கின்றன.
இயற்கை இடர்களான இவற்றைத் தவிர்த்து நம்மைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமானதாகும்.
காலநிலை சார்ந்த உயிரினங்களுக்கு உண்டாகும் மரணங்களில் மின்னலானது இரண்டாவது இடத்தைப் பெறுகிறது.
இடி மின்னலின் போது எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. வெளியிடங்களில் இருக்கும் போது
2. வீட்டிற்குள் இருக்கும் போது
வெளியிடங்களில் இடி மின்னல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
நாம் வெளியிடங்களில் இருக்கும் போது அடர்த்தியான மேகக்கூட்டங்கள் தென்பட்டாலும், இடி மின்னல் ஏற்பட்டாலும் உடனே பாதுகாப்பு இடங்களுக்குச் செல்ல வேண்டும்.
இடி, மின்னல் ஏற்படும் போது மின்னலுக்கும், இடிக்கும் இடைப்பட்ட காலஅளவை கவனிக்க வேண்டும். மின்னல் ஏற்பட்ட 30 நொடிக்குள் இடி ஏற்பட்டால் உடனடியாக நாம் பாதுகாப்பு இடத்திற்கு செல்வது மிகவும் அவசியமானது.
பாதுகாப்பான இடத்தினை தேர்வு செய்ய அதிக காலஅளவு எடுத்துக் கொள்ளக் கூடாது.
இடி மின்னல் உண்டாகும்போது சுவர்கள், கான்கீரிட் கூரைகள் மற்றும் தரை தளத்துடன் கூடிய மூடிய வீடுகள், பள்ளிகள், அலுவலகம் அல்லது வணிக வளாகங்கள் ஆகியவை மக்கள் ஒதுங்குவதற்கான முதன்மையான பாதுகாப்பு இடங்கள் ஆகும்.
முதன்மையான பாதுகாப்பு இடங்கள் ஏதும் தென்படவில்லை என்றால் முழுமையாக மூடப்பட்ட பேருந்து, சிற்றுந்து, ஈப்பு, டிராக்டர் மற்றும் சரக்குந்து ஆகியவை இரண்டாவதான பாதுகாப்பு இடங்கள் ஆகும்.
மேற்கூரையற்ற வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவை பாதுகாப்பானவை அல்ல.
இரண்டாவதான பாதுகாப்பு இடங்களில் இருக்கும் போது வாகனங்களின் அனைத்து கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றை நன்றாக மூடி வைக்க வேண்டும்.
வாகனங்களில் உள்ள இரும்பாலான பாகங்கள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளைத் தொடுவதைத் தவிர்ப்பது நல்லது.
மழைகாலங்களில் பகுதி மூடிய கட்டிடங்களில் தஞ்சம் அடையக் கூடாது. அதேபோல் தனிமரங்களுக்கு கீழே தஞ்சமடையக் கூடாது. ஏனெனில் மரங்கள் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் அதிகம்.
பரந்தவெளி நிலம் மற்றும் நீர்ப்பரப்பினுள்ளோ, பூங்கா, மற்றும் நீர்பரப்பின் அருகாமை இருப்பதைத் தவிர்த்துப் பாதுகாப்பான இடத்திற்கு உடனே செல்ல வேண்டும். முடிந்தளவு வறண்ட பகுதிகளை நாடுவது நல்லது.
இடி மின்னலின்போது கூரிய கம்பியினை உடைய குடை, அரிவாள், கத்தி உள்ளிட்ட இரும்புப் பொருட்களைப் பயன்படுத்துவது, இரும்பாலான கைபிடிச்சுவற்றை பிடிப்பது ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
உயர்அழுத்த மின்தடங்களை தாங்கி நிற்கும் கோபுரங்களுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். குறைந்த பட்சம் 50 அடிகள் தூரத்தில் விலகி இருப்பது நல்லது.
உரிய பாதுகாப்பிடம் கிடைக்கவில்லை எனில்
வெளியிடங்களில் பாலங்களுக்குக் கீழே தஞ்சம் அடையலாம்.
பாலங்களுக்குக் கீழே தஞ்சமடையும்போது ஆற்றின் நீரோட்டம் உயர்வதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
உயர் இரும்புப்பாலங்கள் பாதுகாப்புடன் மூடிய தொழில்நுட்பத்துடன் வடிவமைப்பட்டிருப்பதால் அதற்கு கீழே தஞ்சம் அடையலாம்.
இடி மின்னலின்போது காடுகளில் இருக்க நேர்ந்தால் தாழ்வான பகுதிகளில் அடர்த்தியாக வளர்ந்துள்ள குட்டையான மரங்களுக்கு கீழே தஞ்சமடையலாம்.
திறந்தவெளி நிலப்பரப்பில் தாழ்வான பள்ளத்தாக்குப் பகுதிக்குச் செல்லாம். ஆனால் பள்ளத்தாக்கில் காட்டாற்று வெள்ளம் ஏற்படக் கூடுமாதலால் காட்டாற்று வெள்ளம் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும்.
வெட்டவெளியில் இருக்க நேர்ந்தால் கைகளால் கால்களை இறுக அணைத்து கால்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் குனிந்த நிலையில் (குத்த வைத்து) தரையில் அமர்ந்து கொள்வது பாதுகாப்பானது.
வெட்டவெளியில் உயரமான மரங்களுக்கு அருகில் குழுக்காளாகச் செல்ல நேர்ந்தால் மேற்கூறிய முறையில் ஒருவருக்கு ஒருவர் 100 அடி இடைவெளியில் அமர வேண்டும்.
வீட்டிற்குள் இடி மின்னல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
இடி மின்னல் ஏற்படும்போது வெளியிடங்களைவிட வீட்டினுள் இருப்பது பாதுகாப்பானதாகும். ஆதலால் இடி மின்னலின்போது வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
வீட்டினுள் இருக்கும்போது கதவு, சன்னல்களை மூடி
விட வேண்டும்.
மின்சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
தொலைபேசிகள், அலைபேசிகள், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
குளித்தல், துவைத்தல் உள்ளிட்ட தண்ணீரைக் கொண்டு செய்யும் செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
இரும்பாலான பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
இடி மின்னல் நின்று 30 நிமிடங்கள் கழித்து வெளியே செல்வது நலம்.
இடி மின்னல் பற்றி மேலும் தகவல்களை அடுத்த கட்டுரையில் காணலாம்.
மின்னல் இன்னும் மின்னும்.