இடி மின்னல் விளைவுகள் என்ற இந்தக் கட்டுரை, இயற்கையின் இரட்டையர்களான இடி மின்னல் உருவாக்கும் நன்மை மற்றும் தீமை கலந்த விளைவுகளை விளக்குகின்றது.
இடி மின்னல் பெரும்பாலும் உயிர் மற்றும் பொருள் இழப்புகளை ஏற்படுத்துபவை என்பதே நம்மில் பலருடைய பொதுவான கருத்தாகும்.
ஆனால் இவை உலகிற்கு நன்மையையும் அளிக்கின்றன என்பதே நிஜமான உண்மை. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
மின்னலின் நன்மைகள்
உயிரினங்களுக்கான நைட்ரேட்டுகளை வழங்குதல்
நைட்ரஜன் வளிமண்டலத்தில் 78 சதவீதம் இருக்கும் முக்கியமான வாயு.
உயிரினங்களின் உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச்சத்திற்கு நைட்ரஜன் மிகவும் அவசியம். வளிமண்டலத்தில் அதிகமாக இருக்கும் நைட்ரஜனை தாவரங்கள் மற்றும் விலங்குகள் நேரடியாகப் பயன்படுத்த முடியாது.
ஏனெனில் நைட்ரஜன் வாயுவின் அணுக்கள் வலிமையான சகப்பிணைப்பால் பிணைக்கப் பட்டுள்ளன. எனவே அதனை எளிதில் உடைக்க இயலாது.
காற்றில் உள்ள நைட்ரஜனை உயிரினங்கள் பயன்படுத்த அவை நைட்ரேட் உள்ளிட்ட நைட்ரஜனின் சேர்மங்களாக இருக்க வேண்டும். இவ்வாறு நைட்ஜனில் இருந்து நைட்ரஜன் சேர்மங்கள் இரண்டு வழிகளில் உருவாகின்றன. அவை
முதல் முறையில் ஃபேபேசி குடும்பத் தாவரங்களான பயறு வகைத் தாவரங்களின் வேர்முடிச்சுகளில் வாழும் ரைசோபியம் என்னும் பாக்டீரியாக்கள் காற்றில் உள்ள நைட்ரஜனை நைட்ரேட்டுகளாக மாற்றி உயிரினங்களால் பயன்படுத்தக் கூடியவைகளாக மாற்றுகின்றன.
மற்றொரு முறையில், உயிரினங்களால் பயன்படுத்தக்கூடிய நைட்ரஜன் மாற்றமானது இயற்கையின் நிகழ்வான மின்னல் மூலம் நடைபெறுகிறது.
அதாவது மின்னலின்போது உண்டாகும் வெப்ப ஆற்றலானது காற்றில் உள்ள நைட்ரஜன் அணுக்களைப் பிளந்து ஆக்ஸிஜனுடன் இணைந்து உயிரினங்களால் பயன்படுத்தக்கூடிய நைட்ரேட்டுகள் (NO2) மற்றும் அமோனியா (NH3) வை உருவாக்குகின்றது.
இவை வளிமண்டலத்திலிருந்து மண் மற்றும் நீரின் மூலம் தாவரங்களை அடைந்து உணவுச்சங்கியின் மூலம் ஏனைய உயிர்களை சென்று அடைகிறது.
ஓர் ஆண்டில் பூமியில் உயிரினங்களால் பயன்படுத்தப்படும் பாதிக்கும் மேலான நைட்ரஜன் சேர்மங்கள் மின்னலின் மூலம் உருவானவை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பூமிக்கான எலக்ட்ரானை வழங்குதல்
மேகங்களில் உள்ள எலக்ட்ரான்கள் பூமியில் உள்ள புரோட்டான்களை கவரும்போது மின்னல் ஏற்படுகிறது. இதனால் புவிக்குத் தேவையான எதிர்மின்னூட்டமான எலக்ட்ரான்களை மின்னல் கொடுப்பதோடு புவியின் மின்னூட்டத்தை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது.
ஓசோனைக் கொடுத்தல்
மின்னல் உண்டாகும்போது அதிலிருந்து வெளிப்படும் வெப்பம் மற்றும் மின்னாற்றல் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை (O2) ஓசோனாக (O3) மாற்றுகிறது.
ஓசோன் படலமானது வளிமண்டலத்தின் அடிஅடுக்காக இருந்து நம்முடைய புவியை சூரியனின் புறஊதாக்கதிர் வீச்சிலிருந்து பாதுகாக்கிறது. எனவே மின்னல் புவியின் பாதுகாப்பு கவசமான ஓசோன் உருவாக்கத்திற்குக் காரணமாகிறது.
உயிர்ச்சமநிலையை பாதுகாத்தல்
மின்னலினால் காடுகளில் காட்டுத்தீ உண்டாகிறது. இக்காட்டுத்தீயானது பழைய காய்ந்த புதர்கள், மரங்கள் ஆகியவற்றை எரிக்கிறது.
புதிய ஆரோக்கியமான தாவர வளர்ச்சிக்கு மின்னல்காட்டுத்தீ வழிவகுக்கிறது. இம்முறையால் காட்டின் உயிர்ச்சமநிலை பாதுகாக்கப்படுகிறது.
மேலும் மனித நடவடிக்கைகளால் உண்டாகும் செயற்கை காட்டுத்தீ குறைக்கப்படுவதோடு (காய்ந்த தாவரங்கள் அழிந்துவிடுவதால் எளிதில் தீப்பற்றி பரவுவதில்லை.) அதனுடைய விளைவுகள் குறைக்கப்படுகின்றன.
மின்னலின் தீமைகள்
உயிரினங்களில் உண்டாகும் பாதிப்பு
மின்னல் உண்டாகும்போது சுமார் 3000 கிலோ வோல்ட் மின்சாரம் மைக்ரோ நொடிகளில் உண்டாகிறது. எனவே மின்னல் தாக்கத்தின்போது அதிகளவு வெப்ப மற்றும் மின்னாற்றல் குறைந்த நேரத்தில் உயிரினங்களை தாக்குகிறது.
விலங்குகள் மற்றும் மனிதர்கள் மின்னல் தாக்கத்திற்கு உட்படும்போது உடலின் பாகங்கள் எரிதல், மாரடைப்பு ஆகியவற்றால் உயிரிழப்பு நிகழ்கிறது.
சிலசமயங்களில் பக்கவாதம், காது கேளாமை, கண் பார்வை பறிபோதல், ஊமை ஆதல் உள்ளிட்ட வாழ்நாள் பாதிப்பு நிகழ்வுகளையும் மின்னல் ஏற்படுத்திவிடுகிறது.
பொருளாதாரப் பாதிப்பு
மின்னலானது உயர்ந்த கட்டிடங்களைத் தாக்கி கட்டிடங்களுக்கு பாதிப்பை உண்டாக்குகிறது. சிலநேரங்களில் மின்னலினால் தீப்பிடித்தல் நிகழ்கிறது.
இதனால் பொருட்கள் எரிந்து பெருத்த பொருளாதாரப் பாதிப்பு உண்டாகிறது. கால்நடைகள், பயிர்கள் ஆகியவை மின்னலின் தாக்கத்திற்கு உட்படும்போது பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது.
இடியின் தீமைகள்
இடி என்பது மின்னல் உண்டாகும்போது வெளிப்படும் ஆற்றல் உண்டாகும் பெருத்த ஒலியாகும்.
இடி தாக்கத்திற்கு உட்படும் கட்டிடங்களில் வெடிப்புகள், கீறல்கள் ஏற்படுகின்றன. உயரமான மரங்களில் பிளவினை இடித்தாக்கம் ஏற்படுத்துகிறது.
மின்விசிறி, மின்மோட்டார்கள், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. சிலஇடங்களில் மின் கசிவினையும் இடிதாக்கம் உண்டாக்கிறது.
உயிரினங்களில் செவிடாதல், ஊமை ஆதல் நிகழ்வுகளையும் இடித்தாக்கம் ஏற்படுத்துகிறது.
இடி மின்னல் விளைவுகள் பற்றிப் பார்த்தோம். அடுத்த பதிவில் இடி மின்னல் இடர்பாடுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் முறைகள் பற்றி அறிவோம்.
இன்னும் மின்னல் மின்னும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!