இடி மின்னல் பற்றி அறிவோம்

இடி மின்னல் காலநிலையின் இரட்டைப் பிறவிகள். இவை வானில் தோன்றும் அழகான இயற்கை அரக்கன்கள்.

இவை இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் எனினும் நாம் முதலில் மின்னலையும், பின்னர் இடியையும் உணர்கிறோம்.

மின்னலை ஒளியாகவும், இடியை ஒலியாகவும் அறிகிறோம். ஒளியானது ஒலியைவிட வேகமாகப் பரவுகிறது. எனவேதான் மின்னல் முதலாவதாகவும், இடி இரண்டாவதாகவும் நம்மை அடைகிறது. 

இனி மின்னல், இடி உருவாகும் விதம் பற்றி அறிவோம்.

இடி மின்னல் என்றால் என்ன?

மின்னல் என்பது மழைமேகத்தில் நொடிப்பொழுதில் உண்டாகும் கிளைத்த தீப்பொறி போன்ற மின்பொறிக் கீற்று ஆகும். இது நிகழும்போது அதிக வெப்பமும் ஒளியும் உண்டாகும்.

இடி என்பது மின்னலின்போது உண்டாகும் மிகப்பெரிய ஒலி ஆகும்.

மின்னல் உருவாகும் விதம்

மின்னல் காட்டும் ஒரு மிகச்சிறிய காணொளி

 

பூமியின் மேற்பரப்பில் உள்ள காற்றானது வெப்பத்தால் சூடாகி லேசாகி மேலே செல்கிறது. குறிப்பிட்ட உயரத்தில் சூடான காற்றானது குளிர்விக்கப்பட்டு நீர்திவலைகள் கொண்ட மழைமேகங்களாக மாறுகின்றது.

அம்மழைமேகத்தின் மையப்பகுதியில் வெப்பநிலை உறைநிலைக்கு கீழே இருக்கும். இந்நேர்வில் மழைமேகத்தின் துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி அயனிகளாக மாற்றம் அடைகின்றன.

நேர்மின் அயனியானது எடை குறைவாக உள்ளதால் மழைமேகத்தின் மேற்பகுதியிலும், எதிர்மின் அயனியானது அதிக எடையின் காரணமான மழைமேகத்தின் அடிப்பகுதியிலும் சேகரமாகின்றன.

இவ்வாறு அயனிகளின் சேகரம் அதிகமாகும்போது அவை எதிர் எதிர் மின்சுமை உடைய அயனிகளைக் கவர்கின்றன. இவ்வாறு அயனிகளின் கவர்தல் ஏற்படும்போது மின்சாரம் உருவாகிறது.  இதனையே நாம் மின்னல் என்கிறோம்.

இந்த மின்சாரம் ஒளியையும், வெப்பத்தையும் அதிகளவு வெளியிடுகின்றது.

இத்தகைய மின்சாரம் உருவாக மிகக்குறைந்த காலஅளவே ஆகிறது. அதாவது கால் நொடிக்கும் குறைவான காலஅளவு ஆகும். 

மின்னலின் வகைகள்

இடி,மின்னல்

1.மேகத்திற்கு உள்ளே உண்டாகும் மின்னல்

ஒரே மேகத்திற்குள் உள்ள நேர்மின் அயனி மற்றும் எதிர்மின் அயனி கவர்தலினால் மின்னல் ஏற்படலாம். இதனை மேகத்திற்கு உள்ளே உண்டாகும் மின்னல் என்கிறோம்.

2.வெவ்வேறு மேகத்திற்கு இடையே ஏற்படும் மின்னல்

ஒரு மேகத்தில் உள்ள நேர்மின்அயனி அருகில் இருக்கும் மற்றொரு மேகத்தின் எதிர்மின் அயனியை கவர்தலினால் ஏற்படும் மின்னல் வெவ்வேறு மேகத்திற்கு இடையே ஏற்படும் மின்னல் என்கிறோம்.

3.மேகத்திற்கும், பூமிக்கும் இடையே ஏற்படும் மின்னல்

மேகத்தின் அடிப்பகுதியில் இருக்கும் எதிர்மின் அயனியானது புவியில் இருக்கும் நேர்மின் அயனியை கவர்ந்திழுக்கும்போது ஏற்படும் மின்னல் மேகத்திற்கும், பூமிக்கும் இடையே ஏற்படும் மின்னல் ஆகும்.

இதுவே மிகவும் ஆபத்தானது. இவ்வகை மின்னலே பூமியில் இருக்கும் மரம், கட்டிடம் உட்பட்ட உயரமான பொருட்களை அழிக்கிறது. சில நேரங்களில் மனிதனையும் தாக்குகிறது.

மின்னலின் நிறம்

மின்னல் பெரும்பாலும் நீலம் கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். மின்னலின்போது உருவாகும் வெப்பமானது சுற்றிலும் இருக்கும் காற்றினை சூடாக்குவதால் காற்றுத் துகள்கள் வெள்ளை நிறத்தை உமிழுகின்றன.

அதே நேரத்தில் காற்றில் உள்ள நைட்ரஜன் வாயுவானது நீலநிறத்தை உமிழச் செய்கிறது. எனவேதான் மின்னல் உருவாகும்போது நீலம் கலந்த வெள்ளையாகத் தோன்றுகிறது.

சிலநேரங்களில் சுற்றுப்புறத்தைப் பொறுத்தும் மின்னல் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் தோன்றக்கூடும்.

இடி உருவாகும் விதம்

மின்னல் நிகழும்போது உண்டாகும் அதிகப்படியான வெப்பமானது சுற்றிலும் இருக்கும் காற்றினை சூடாக்குகிறது. இது சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தைப் போன்று ஆறுமடங்கு இருக்கிறது.

சூடான காற்றானது உடனடியாகக் குளிரும்போது உண்டாகும் ஆற்றல் மாற்றமானது அதிர்வாக (ஒலியாக) வெளிப்படுகிறது. இதனையே இடி என்கிறோம்.

இயற்கையின் நிகழ்வான இடி மின்னல் பற்றிய மேலும் தகவல்களை அடுத்த பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.